தமிழகத்தில் பாலைவன வெட்டுக்கிளி வரவில்லை-வேளாண்துறை உறுதி
1 min readகிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி படையில்லை; லோக்கல் வெட்டுக்கிளி தான் : வேளாண்துறை உறுதி!!
30.5.2020
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி படையில்லை; லோக்கல் வெட்டுக்கிளி தான் என்று நேரில் ஆய்வு செய்த மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் கூட்டமாக படையெடுத்தன. வெளி நாடுகளில் இருந்து வந்த இந்த வெட்டுக்கிளிகள், பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை நாசப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழக விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஆந்திரா, கர்நாடகா எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நேரலகிரி ஊராட்சியில் வாழைமரங்கள், எருக்கஞ்செடிகள், ஆமணக்கு செடிகளில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் நேற்று மாலை படர்ந்திருந்தன. இந்த வெட்டுக்கிளிகள் இருந்த செடிகளில் இலைகள் எதுவும் இல்லாமல் மொட்டையாக காட்சியளித்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள், இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், இரவு நேரமானதால் அதிகாரிகளால் அங்கு செல்ல முடியவில்லை.
லோக்கல் வெட்டுக்கிளி தான்
இதையடுத்து நேரலகிரி ஊராட்சியில் வாழைமரங்கள், எருக்கஞ்செடிகளில் வெட்டுக்கிளிகள் ஏராளமாக இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் ராஜசேகர் உட்பட அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜசேகர், கிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி படையில்லை; லோக்கல் வெட்டுக்கிளி தான் என்று உறுதி அளித்தார். அதே சமயம், கிராமத்தில் உள்ள வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் எருக்கன் செடிகள், வாழை, பப்பாளி இலைகளை தின்ற உள்ளூர் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் ஆலோசனை
நீலகிரி, கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அதிகளவில் காணப்படுவதால் வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது பற்றி இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.