தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை முதல் பஸ்கள் இயக்கம்
1 min readMost places in Tamil Nadu will be operating Buses from tomorrow
31-5-2020
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் நாளை முதல் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
ஊரடங்கு தளர்வு
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு இன்றுடன்(31-ந் தேதி) நிறைவடைக்கிறது. இதனை அடுத்து கொரோனா அதிகமாக பாதித்த பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
8 மண்டலங்கள்
மாநிலத்தில் பஸ் போக்குவரத்தை ஜூன் 1 முதல் நடைமுறைபடுத்த தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
மண்டலம் -1ல் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் , நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
2-வது மண்டலதில் தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களும்,
3 -வது மண்டலத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களும்,
4-வது மண்டலத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களும்
5-வது மண்டலத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களும்
6-வது மண்டலத்தில்: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களும்
7-வது மண்டலத்தில்: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களும்
8-வத மண்டலத்தில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் அடங்கும்.
பஸ்கள் இயக்கம்
இதில் 7 மற்றும் 8-வது மண்டலங்களில் அதாவது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்படும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பஸ் போக்குவரத்திற்கு தடை தொடரும்
60 சதவீதம் இருக்கைகள்
பஸ்கள் இயக்கப்படும் பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பஸ்களும் இயங்க அனுமதி உண்டு.
பஸ்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
இ-பாஸ்
மண்டலங்களுக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ – பாஸ் தேவையில்லை. பஸ்களில் பயணிக்கவும் இ-பாஸ் தேவையில்லை
அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயுமான பஸ் போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.
அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற பஸ்கள் இயக்கப்படும்.
பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்
நாளை பஸ்கள் இயக்கம் தொடங்குவதை முன்னிட்டு அரசு பஸ் போக்குவரத்து துறை சார்பில் தமிழக அரசு வழிகாட்டுமுறை வெளியிட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு:-
பயணிகள் பின்புற படிக்கட்டில் ஏற வேண்டும்
பஸ்களில் பயணிகள் மாஸ்க் அணிவது அவசியம்
டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும்.
குளிர்சாதன வசதி பஸ்கள் இயக்கப்படாது, குளிர்சாதனம் அணைக்கப்பட்டு இயங்கலாம்
பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்கள் கிருமி நாசினி கொண்டு ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்ய வேண்டும்.
படிக்கட்டில் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து…
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் செய்யப்படும். அறிகுறி இல்லாவிடினும் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனையில் கொரோனா உறுதியானால், அவர்கள் ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா அறிகுறி இல்லாவிட்டால் அவரவர் வீடுகளில் 7 நாட்கள் வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்.
இ -பாஸ் முறை
அனைத்து வகையான வாகனங்களுக்கும் மண்டலங்களுக்குள் இயங்க அனுமதிக்கப்படும். அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை
அதேநேரம் வெளி மாநிலத்திற்கு செல்லவும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரவும், மண்டலங்களுக்கு இடையே சென்று வரவும் இ – பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.