May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

பிச்சைக்காரி – சிறுகதை- முத்துமணி

1 min read

Pichikkari – Short story By Murthumani

பிச்சைக்காரி – சிறுகதை – முத்துமணி

3-5-2020

மதியம் ஒரு மணி இருக்கும். பஸ்சை விட்டு இறங்கும்போது. சுள்ளென்று வெயில். தலையில் கைக்குட்டையைப் போட்டபடி இறங்கினேன்.
இந்த ஊருக்கு வந்து நாற்பது வருஷம் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போ ஒரு நல்ல டெவலப் ஆயிருச்சு.
அப்பாவுக்குத் தான் சொந்தம். ஓரளவிற்கு வசதியாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். மகளுக்குக் கல்யாணம் திடீரென கூடி வந்தது. பணம் புரட்ட தான் அங்கும் இங்கும் புரண்டு கொண்டு இருக்கிறேன். சொந்தக்காரப் பையன். கடனாகக் கொஞ்சம் வாங்கலாம் என்றுதான்.
என்னை நினைவில் இருக்கிறதோ? இல்லையோ?. சொந்த பந்தம் என்றால் கொஞ்சமாவது உறுத்து இருக்குமல்லவா?
அப்பாவின் டைரியில் தான் இந்த அட்ரஸ் இருந்தது.
மத்தியான நேரம் வீட்டுக்கு போகிறோம். ஒருவேளை சாப்பிடச் சொன்னா?… சரி அங்கேயே சாப்பிட்டு விடலாம் .வயிறு பசிக்கத் தான் செய்கிறது. வெறுங்கையோடு எப்படி போவது?. ஏதாவது மிட்டாய் கிட்டாய் கொஞ்சம் வாங்கிட்டு போகணும்.
பக்கத்துக் கடையில் “அரை கிலோ மிட்டாய்” என்று சொன்னேன்.
பின்னாலிருந்து யாரோ முதுகைத் தொட்ட உணர்வு. திரும்பிப் பார்த்தேன் எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்.
“ஐயா நாலு ரூபாய் கொடு. வயிறு பசிக்குது. சாப்பிட ப்போணும்”.
இந்தக் கிழவிக்குக் கிறுக்கா? அது என்ன குறிப்பா நாலு ரூபாய்?. கடையில் ஒரு சாப்பாடு அம்பது ரூபாய் இருக்கும். ஒருவேள… டீ குடிக்க கேக்குராளோ?. டீ கூட 10 ரூபாய் இருக்குமே.
கடைக்காரன் “போம்மா ” என்று அவள விரட்டினான். அவளும் மெதுவா அங்கிருந்து நகர்ந்தாள். ஒரு சர்பத் குடித்துவிட்டு “ஆண்டியப்பன் காலனிக்கு எந்த பஸ்ஸில் போனும்?” என்று கடைக்காரரிடம் கேட்டேன்.
“அப்படியே மேற்கு பக்கம் நில்லுங்க. சின்னூர் போகும் டவுன் பஸ் இன்னும் பத்து நிமிஷத்தில் வரும். அதில்தான் போணும். கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும் ”
மறுபடியும் அதே கிழவி கண்ணில் பட்டாள்.”ஐயா ஐயா ஒரு மூணு ரூபாய் கொடு சாமி சாப்பிட போணும்”.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
அழுக்கான சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அந்தக் கிழவி மடியை அவிழ்த்து சில்லறையை எண்ணிக்கொண்டிருந்தாள்.
என்ன நடக்கிறது? என்றே தெரியவில்லை. பார்த்துக்கொண்டிருக்கும்போதே பஸ் வெளியேறும் வாசலை நோக்கி நடந்தாள். அங்கே ஒரு இளைஞன் அந்தப் பக்கமாக திரும்பி பைக்கில் உட்கார்ந்திருந்தான். கிழவி மெதுவாக அந்த பைக்கில் பின்பக்கம் ஏறி அமர்ந்ததும் வண்டி புறப்பட்டுவிட்டது.

“பால்கோவா பால்கோவா “என்று விற்றுக் கொண்டு வந்தவன் நான் அந்த மூதாட்டியை உற்றுநோக்கி யதைப் பார்த்துவிட்டு லேசான புன்னகையோடு
“என்ன சாருக்கு வெளியூரா?. அந்தக் கிழவிக்கு காசு கொடுத்தீர்களா?. அவளைப் பைக்கில் கூட்டிட்டு போறது வேற யாரும் இல்ல சார். அவ பெத்த மகன்தான். காலையில ஆறு மணிக்குப் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுட்டு போயிடுவான். மதியம் ஒரு மணிக்கு வருவான் அதற்குள் பிச்சை எடுத்து 100 ரூபாய் சேர்த்து அவனிடம் கொடுத்தால்தான் மதியம் வீட்டில் போய் அம்மாவுக்குச் சோறு போடுவான். மறுபடியும் சாயங்காலம் நாலு மணிக்கு கொண்டு வந்து இறக்கி விட்டு விட்டு போய்விடுவான். இரவு ஒன்பது மணிக்கு வந்து கூட்டிட்டு போய்விடுவான்.”
ச்சே!! .. என்ன மனுசங்க பெத்த தாயை ப் பிச்சை எடுக்க வைத்து… நெஞ்செல்லாம் எரிந்தது. சின்னூர் வண்டி வந்தது. ஒரே ஓட்டமாக கூட்டத்தோடு கூட்டமாக ஓடிச்சென்று வண்டிக்குள் ஏறிவிட்டேன்.
20 நிமிடம் நிமிஷம்தான். ஆண்டியப்பன் காலனி வந்துவிட்டது. வீட்டை விசாரித்து கண்டுபிடித்துவிட்டேன். ஓரளவுக்கு சுமாரான வீடு. வாசலில் பழைய கயிற்றுக் கட்டில் ஒன்றில் யாரோ படுத்திருந்தார்கள். உள்ளே டிவி ஓடும் சத்தம். என் தலை தெரிந்ததும் கணவனும் மனைவியுமாக எழுந்து வந்தார்கள்.
நான் என்னை அறிமுகம் செய்த பின்னும் அவர்கள் முகத்தில் பெரிதாக மலர்ச்சி தெரியவில்லை. உள்ளே அழைத்தார்கள். உட்காரச் சொல்லாமலே உட்கார்ந்து விட்டேன். காரணம் பசி களைப்பு.

” என்ன விஷயமா வந்தீங்க?” என்று அவன் கேட்கத் தொடங்கிய போது அவன் மனைவி “என்னங்க மணி நாலு” என்றாள்.
“கொஞ்சம் இருங்க .ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்” என்று சொல்லிட்டு வெளியே புறப்பட்டுக் கட்டிலில் இருந்தவரைத் தட்டி எழுப்பினான்.
“அம்மா அம்மா எந்திரி”. கட்டிலிலிருந்து களைப்போடு எழுந்த உருவத்தைப் பார்த்தேன். ஆஹா ! பஸ் ஸ்டாண்டில் பார்த்த பிச்சைக்காரி அல்லவா? அதற்குள் வண்டி புறப்பட்டுவிட்டது.

இவன்தான் அந்த பிரகஸ்பதியா? மனதுக்குள் என்னவெல்லாமோ தோன்றியது.
என் தகப்பனாருக்கு தங்கை முறை என்றால் எனக்கு அத்தை. இந்த வீட்டில் தண்ணி குடித்தால் கூட பாவம். அவன் திரும்ப வருவதற்குள் அந்தப் பெண்ணிடம் “போயிட்டு வர்றேன்.” என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பாராமல் விறுவிறுவென்று நடந்து பஸ்ஸைப் பிடித்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்து, அத்தையை த்தேடினேன்.
வழக்கம்போல யார் யாரிடமோ கையேந்திக் கேட்டுக் கொண்டிருந்தாள். என் கண்ணில் நீர் வழிய, மெதுவாக அவளிடம் சென்று நான் யார் என்பதைச் சொன்னேன். ஒரு நிமிடம் சந்தோஷப்பட்டாள். கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
கையை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு, “என்னோடு ஊருக்கு வந்து விடுகிறாயா அத்தை? கடைசிக் காலம் வரை உன்னை வைத்து நான் காப்பாற்றுகிறேன் என்று சொன்னேன்.

“உழைக்கத் தெரியாத ஒரு சோம்பேறிக்கு வாக்கப்பட்டு உடல் சுகத்தை அவனுக்குப் பிச்சை போட்டு வந்தேன். தெரிந்த வேலைகளை எல்லாம் செய்து அவனுக்குச் சோறு பிச்சை போட்டேன்.
‘குடிகாரப் பயலுக்கு நல்ல குணவதியான பொண்டாட்டி’ என்று ஊரார் பேச்சை அவனுக்குப் பிச்சையாக போட்டேன். குடித்துவிட்டு இரவில் வந்து அடிப்பதற்கு என் முதுகையும் ,கெட்ட வார்த்தையால் திட்டுவதற்கு என் காதையும் பிச்சை போட்டேன். அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் தப்பாமல் பிறந்தான். தாய்ப்பாலைப்பிச்சை போட்டேன். பள்ளிக்கூடம் போக வச்சு படிப்புப் பிச்சையும் போட்டேன். உடம்பில் தெம்பு இருந்தவரை ஓடியாடி உழைத்துச் சம்பாதித்து அவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் பிள்ளைகளுக்கும் பிச்சை போட்டேன்.
இப்போது வேலை செய்ய முடியலை. பஸ்ஸ்டாண்டில் பிச்சை எடுக்க விட்டிருக்கான். இப்போதும் பிச்சை எடுத்து அவனுக்குதான் போடுறேன். பிச்சை எடுப்பவ தான் பிச்சைக்காரியா? நான் பிச்சை போடும் பிச்சைக்காரி. இப்படியே சாகும்வரை பிச்சை போட்டு விட்டு போய்டுவேன்.
என் வயிற்றில் கொள்ளிப் பிச்சைக் கூட இவன் போட மாட்டான். அனாதைப் பிணமா நாறி ப் போமாட்டேன். தானம் எழுதிக் கொடுத்து ரொம்ப நாளாச்சு. என் உடம்ப தானம் கொடுத்து, படிக்கிற பிள்ளைகளுக்குப் பிச்சை போட்டுட்டேன்.”

அடி வாங்க வாங்க மனம் இரும்பை ப் போல எவ்வளவு உறுதியாகி விடுகிறது?. இனி நாம் சொல்லி கேட்கவா போகிறாள்? பஸ்ஸில் ஏறி விட்டேன் .திரும்பிப் பார்க்கிறேன் யாரையோ கும்பிட்டு, காசு கேட்டுக் கொண்டிருக்கிறா.

 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.