அக்கறை? – சிறுகதை – முத்துமணி
1 min read
Akkarai? – Short story By Muthumani
“என்னங்க டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா? மறந்துட்டீங்களா ?”
“எல்லாம் புக் பண்ணியாச்சுமா. இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன் சாயங்காலம் ரெடியாயிரு .நான் வந்த உடனே கிளம்பி விடலாம் . படம் முடிஞ்சதும் ஹோட்டலில் சாப்பிடுவோம்,” என்றேன்.
“என்னங்க வரும்போது மறக்காமல் கொஞ்சம் பூ வாங்கிட்டு வந்துருங்க, ஆட்டோ சொல்லிட்டீங்களா?” என்று கேட்டாள்.
நான் “சொல்லிட்டேன் சொல்லிட்டேன்” என்று சொன்னேன்.
அதற்குப் பிறகுதான் ஆன்லைனில் இரண்டு டிக்கெட் புக் செய்தேன். ஆட்டோ காரனுக்கும் போன் பண்ணி, “ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்திருன்னு சொன்னேன்.
‘தர்பார்’ படம். சந்தோசம் அவளுக்கு.
பஸ்ட் கிளாஸ் சீட்டில் கடைசி வரிசையில் இருவரும் அடுத்தடுத்து அமர்ந்தோம். சூப்பர் ஸ்டார் படம்னா விரும்பி பாப்பா. இன்னும் படம் போடவில்லை. விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
“எத்தனை மணிக்குப் படம் போடுவான்?” கேட்டாள்.
“இன்னும் பத்து நிமிஷம் ஆகும்.”
“என்னங்க நீங்க உட்கார்ந்து இருக்க சீட்டில் இருந்து பார்க்க படம் நல்லா தெரியுதா? இல்லன்ன மறைக்குதா?”.
“இல்லையே நல்லா தெரியுது மா” என்று சொன்னேன்.
“முன் சீட் ஆளோட மண்ட மறைக்குதா?”
“இல்லையே” என்றேன்.
” நீங்க உட்கார்ந்து இருக்கிற சேர் ஆடுதா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
“இல்லடா நல்ல சொகுசாத்தான் இருக்கு”
“அப்படியா? நீங்க உட்கார்ந்து இருக்க இடத்தில ஃபேன் காத்து நல்ல வருதா?” “ஆமாமா சூப்பரா காத்து வருதுடி செல்லம்.”
“அந்தப் பக்கம் கொசு ரொம்ப கடிக்குதா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
“ஃபேன் காத்து நல்லா வருதுல்ல, அதனால கொசு கடிக்கல கண்ணம்மா” என்றேன் நான்.
“உட்காந்திருந்த இடத்தில சீட்டு கிழிஞ்சிருக்கா ?” அடுத்த கேள்விக்கணை தொடுத்தாள்.
“இல்லடி ராசாத்தி” என்று நான் உருகி விட்டேன்.
“ரெண்டு பக்கம் கை வைக்கிற இடத்தில் ஆணி எதும் குத்துதா?” என்றாள்.
“இல்லடா குட்டிமா. ஜம்முனு இருக்கு.” என்று சொல்லி முடிக்கவும் நியூஸ் ரீல் முடிந்து படத்தின் சென்சார் சர்டிபிகேட் திரையில் தெரிந்தது.
“படம் போடப் போறான்” என்று சொல்லி முடித்தேன்.
“என்னங்க நான் கேட்ட எல்லா பிரச்சினையும் இந்த சீட்டில் இருக்கு. நீங்க இந்த சீட்டுக்கு வாங்க நான் அந்த சீட்டுக்கு மாறி உட்காந்துக்கறேன். அப்பதான் படம் பார்க்க முடியும்.” என்று ஒரு போடு போட்டாள்.
அடிப்பாவி! அக்கறை எல்லாம் உன்மேல் தானா? மனதுக்குள் நினைத்துக் கொண்டே மாறி உட்கார்ந்தேன். பிறகு படம் முடியும் வரை அவள் எந்தக் கேள்வியும் கேட்கவே இல்லை.