பண்பாடு – சிறுகதை- முத்துமணி
1 min readPanpaadu – Short story By Muthumani
2-6-2020
ஆட்டோவிலிருந்து வீட்டு வாசலில் இறங்கும்போது நள்ளிரவு மணி 1 இருக்கும்.
வாரத்தில் ரெண்டு நாள். அதுவும் கோவில் கொடை சீசன் என்றால் நான்கு நாள் கூட இப்படித்தான் தூக்கம் கெட்டு போகும் . ஆனால் மேடையில் கைத்தட்டு வாங்கும்போது ஏற்படுகிற மகிழ்ச்சியில் எல்லாம் மறந்து தான் போகும். ஒரு வகையில் இது கூட ஒரு போதை தான்.
பெல் அடித்ததும் கதவை திறந்தாள் என் மனைவி.
“இப்பதான் முடிஞ்சுதா? நல்லா பேசினீங்களா?” தூக்கக் கலக்கத்தில் கேட்டாள்.
“ஜானகி இதோ பாரு அண்ணன் மகாலிங்கம்.” அப்போதுதான் அருகில் இருக்கும் அவரை பார்த்துவிட்டு “வாங்க அண்ணே நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டாள்.
“ஆமா தங்கச்சி, வழக்கமாக நான் போற பஸ் போயிருச்சு காலையில அஞ்சு மணிக்குத் தான் பஸ்.
வீட்டின் ஹாலில் உள்ள இருக்கைகளில் அமர்ந்தோம்.
“இன்னிக்கு த் தமிழ் ப்பண்பாடு பற்றி பட்டிமன்றம் உன் வீட்டுக்காரர் வழக்கம்போல தீர்ப்பு நச்சுன்னு சொல்லி எக்கச்சக்கமான கைத்தட்டு வாங்கிவிட்டார்.” என்று சொன்னார் மகாலிங்கம்.
என்னைவிட இரண்டு வயது மூத்தவர். “சும்மா இருங்க அண்ணே நீங்கதான் நல்லா பேசினீங்க” என்று நான் சொன்னேன்.
“அடுத்தவங்க வீட்டில் எதையும் கேட்டு வாங்கி சாப்பிடக்கூடாது என்று ஒரு புத்திமதி சொன்னீர்களே… சூப்பர் ” என்று பாராட்டிக் கொண்டே இருந்தார்.
“சரி அண்ணே நீங்க மாடியில் இருக்கிற ரூமில் ஓய்வெடுங்க .காலையில் ஸ்கூட்டரில் நான் அழைத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டில் விடுகிறேன்” என்று சொன்னேன்.
“வழக்கமா 12 மணி பஸ்ஸை பிடிச்சா என்ன ரெண்டு மணிக்கு வீட்டுக்குப் போயிடுவேன். எத்தனை மணிக்கு ப் போனாலும் எதையாவது சாப்பிட்டுவிட்டு படுத்தால் தான் தூக்கம் வரும்” என்றார்.
எனக்குச் சுளீர் என்றது. இரவு ஒன்பது மணிக்கு இட்லி ,வடை எல்லாம் வாங்கி கொடுத்தார்களே! நல்ல சாப்பிட்டு விட்டு த்தானே மேடை ஏறினார். நமக்கு இன்னும் வயிற்றுக்குள் சாம்பார் வாடை அடிக்கிறது. இவருக்கு இருப்பது மனித வயிறு தானா? இல்லை ஓநாயிடம் கடன் வாங்கி வைத்திருக்கிறாரா ? என்று யோசித்தேன்.
‘நான் மீட்டிங் போய்விட்டா அவள் இரவு சமைக்க மாட்டாள். மதியம் சமைத்த சோற்றை வைத்து சமாளித்துக் கொள்வா. வீட்டிற்கு வந்த மனுஷன் சோத்து மாடனாக இருப்பான் போல.. கேட்காமல் கேட்கிறான். நாம் எப்படி சமாளிப்பது ,’ என்று எண்ணிக்கொண்டே மனைவியை ஏறிட்டு ப்பார்த்தேன்.
அவள் சமையலறை நோக்கி போனாள் .பின்னாலே சென்ற நான் “ஏதாவது இருக்கிறதா?” என்று மெதுவாகக் கேட்டேன்.
“நான் சாப்பிட்டது போக நாலு வாய் பழைய சோறு பானையில் கிடக்கு .அது ஒரு ஆளுக்கு போதாது” என்று சொன்னாள்.
” சரி அதைத் தட்டில் பிழிந்து ,வைத்து கொஞ்சம் ஊறுகாய சேர்த்துக் கொண்டு வந்து வை. பார்த்துக் கொள்ளலாம் “என்றேன்.
அதன்படி உடனே கொண்டு வந்தாள். எங்க வீட்டு பழைய சோத்துக்கு அப்படி என்ன சுவை? என்று தெரியவில்லை. மாடு கழனித் தண்ணீய குடிப்பது போல கபக் கபக் என்று 2 நிமிடத்தில் உள்ளே உறிஞ்சுட்டாரு. வயிறு நிறையவில்லை போலும். இன்னும் கேட்க வேண்டும் என்று நினைத்தார். வாய்விட்டு கேட்க பண்பாடு தடுக்கிறது.
சாப்பிட்ட தட்டை தூக்கி இடது கையில் பிடித்துக்கொண்டு தட்டின் மத்தியில் வலது கையால் தட்டி ஓசை எழுப்பிக் கொண்டு “தங்கச்சி இந்த தட்டு அழகாயிருக்கு எந்த கடையில் வாங்கின?” என்று கேட்டார் .
மனிதர் நன்றாக இருக்கிறது… இன்னும் சோறு போடு என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார்.
என் மனைவி எதுவும் சொல்லாமல் சமையலறைக்குள் புகுந்து சோற்றுப் பானை யோடு வேகமாக வெளியில் வந்தாள். பானையை தலைகீழாகக் கவிழ்த்துக் கொண்டு “இந்தப் பானை வாங்கின கடையில் தான் அண்ணே அந்த தட்டும் வாங்கினேன் ” என்று பானைக்குள் கைவிட்டு ஆட்டிக் கொண்டே சொன்னாள்.
ஒரு முறை செருமிக் கொண்டு மகாலிங்கம் கையை கழுவி விட்டார்.
“இன்னும் கொஞ்சம் போடுங்கள் “என்று கேட்காமல் நாகரீகமாக கேட்டவருக்கு,
“சோற்றுப் பானை காலியாக இருக்கிறது. இனிமேல் சோறு கிடைக்காது ” என்று சொல்லாமல் சொல்லி தமிழ்ப்பண்பாட்டை காப்பாற்றி விட்டாள் அவள்.