சங்கரன்கோவில் கிளை சிறை உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
1 min read
17.6.2020
Prison Assistant Jailor Suspendedதென்காசி மாவட்டம், குளக்கட்டாகுறிச்சி அருகேயுள்ள ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று பேர் இறந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த திருவேங்கடம் போலீசார், பட்டாசு ஆலை மேலாளரை கைது செய்து சங்கரன்கோவில் கிளைச் சிறையில் அடைத்தனர்.
சிறையில் பட்டாசு ஆலை மேலாளருக்கு சிறப்பு கவனிப்பு மேற்கொள்ள சங்கரன்கோவில் சிறை தலைமை அதிகாரிக்கு பட்டாசு ஆலை மூலம் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறை வார்டன் வைரமணி, செல்போனில் பட்டாசு ஆலை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் ஆலை மேலாளரை சிறையில் நன்றாக கவனித்துக் கொள்ள பணம் கொடுத்துள்ளீர்கள். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு கைதிக்கும் சலுகை செய்யாமல், எங்களுக்கும் எதுவும் கொடுக்கவில்லை.
எனவே இனி பணம் கொடுப்பதாக இருந்தால் இனி நான் சொன்னால் மட்டும் கொடுக்க வேண்டும் எனவும், தன்னை தனியாக கவனிக்க வேண்டும் எனவும் பேரம் பேசினாராம். அவர் பேரம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து வைரமணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த ஆடியோ வெளியானதின் மூலம் பல நாட்களாக சிறையில் கைதிகளுக்கு சலுகைகள் அளிக்க கிளை சிறை நிர்வாகம் பணம் பெற்று வருவது அம்பலமாகி உள்ளது. இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சிறைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டன.
இந்த விவகாரம் குறித்து பாளை மத்திய சிறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை, பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரிடம் நேற்று முன்தினம் அளித்தனர். இந்த அறிக்கை சென்னை மற்றும் மதுரை சரக சிறை துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் பாளை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உத்தரவின் பேரில் நேற்று சங்கரன்கோவில் கிளை சிறை உதவி ஜெயிலர் ஆறுமுகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இரு சிறை வார்டன்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக உளவுத்துறையினர் தெரிவித்தனர்.