கல்வான் மீது சீனா உரிமை கோருவதை ஏற்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
1 min read
21.6.2020
China’s claim on Calvan cannot be accepted: central governmentகல்வான் மீது சீனா உரிமை கோருவதை ஏற்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
கல்வான் பள்ளத்தாக்கு மீது சீனா உரிமை கொண்டாடுவதை ஏற்க முடியாது,’ என்று் மத்திய அரசு கூறி உள்ளது. லடாக் எல்லையில் மோதலை தொடர்ந்து, இந்திய எல்லைக்கு உட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு மீது தங்களுக்கும் இறையாண்மை உண்டு என சீனா கூறியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய அரசு ஏற்கனவே கண்டனம் தெரிவித்த நிலையில், நேற்று மீண்டும் ஒருமுறை சீனாவின் கூற்றை கடுமையாக மறுத்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் வத்சவா அளித்த பேட்டியில் கூறியதாவது: வரலாற்று ரீதியாக கல்வான் பள்ளத்தாக்கு பகுதி தொடர்பான நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தற்போது எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத சீன தரப்பின் கூற்றுகள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது, சீனாவின் கடந்த நிலைப்பாட்டிடனும் பொருத்தமாக இல்லை.
மற்ற பகுதிகளைப் போலவே சீனா இங்கும் நடந்து கொள்ள முயற்சிக்கிறது. இந்திய ராணுவத்தை பொறுத்த வரையில், எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் நீண்ட காலமாக கடமையாற்றி வருகிறது. மேலும், கல்வான் பகுதியில் நீண்ட காலமாக எந்த பிரச்னையுமின்றி ரோந்து பணியும் மேற்கொண்டு வருகிறது, கடந்த மே மாதத்தில் இருந்தே எல்லையில் மேற்கு பிராந்தியத்தில் சீனா எல்லையில் ஊடுருவ தொடர்ந்து முயற்சிக்கிறது. இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இப்பவே சொல்லுங்க சிதம்பரம் வலியுறுத்தல்
லடாக் எல்லையில் சீனா உடனான மோதல் குறித்து பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மோதலுக்கு காரணமே இந்தியா தான் என்கிறது சீனா. அதோடு ஒட்டுமொத்த கல்வான் பள்ளத்தாக்கிற்கும் சொந்தம் கொண்டாடுகிறது. இதற்கு அரசின் பதில் என்ன? சீனா சொந்தம் கொண்டாடுவதை அரசு மறுக்கிறதா? இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை இன்றே சொல்ல வேண்டும், நாளை வரை காத்திருக்கக் கூடாது. மேலும், 1962 கதை எல்லாம் பேசி இப்போது பலனில்லை. இப்போதைய சூழலைதான் கவனிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.