எடப்பாடி பழனிசாமிக்கு கொரோன பரிசோதனை- அமைச்சர் தகவல்
1 min read
Edappadi Palanisamy took corona test
22-6-2020
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அவர் கூறியதாவது:-
போராட்டம்
தமிழகத்தில் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரசை எதிர்த்து மருத்துவம் உள்பட பல்வேறு பணியாளர்கள் போராடி வருகின்றனர். கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தமிழக அரசின் எண்ணமாகும். ஐசிஎம்ஆர் அனுமதியுடன் 87 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. அதன்மூலம் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனைகளை செய்துள்ளோம். இதுவரை மொத்தம் 9,19,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 55 சதவீதமாக உள்ளது. கண்ணுக்கு தெரியாத கொரோனா நுண்ணுயிரியால் ஏற்பட்டுள்ள பேரிடரை கணிக்க வல்லுனர்களே திணறும் நிலை உள்ளது.
எதார்த்தமான பேச்சு
கொரோனா பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என்று முதல்-அமைச்சர் கூறியது எதார்த்தமானது. யதார்தமாக முல்வர் சொன்னது மு.க.ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது. இயற்கை பேரிடர்கள் வந்துவிட்டு போய்விடும். அதற்கு நேரம் நிர்ணயித்து நம்மால் மீட்பு பணி செய்ய முடியும். மக்களிடையே பதற்றம் வேண்டாம் அதேநேரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டக்கூடாது. எந்த ஆக்கப்பூர்வமான தகவல்களை கூறினாலும் அரசு கேட்க தயாராக உள்ளது. பாதிப்புகள் இரட்டிப்பாக 15 நாட்களுக்கு மேல் ஆகி உள்ளது.
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்துள்ளது.
முதல்-அமைச்சருக்கு சோதனை
முதல்-அமைச்சர் (எடப்பாடி பழனிசாமி) கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் நெகடிவ் வந்தது. சென்னை மருத்துவக் கல்லூரி டீன், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா பாதிப்பு குறித்த அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக வெளியிட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.