May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தங்கை மலர்- சிறு கதை – கடையம் பாலன்

1 min read

Thangai Malar – Short story By Kadayam balan

என்றுமில்லாத மகிழ்ச்சியில் விமல் திழைத்துப் போய் இருந்தான். நேற்று முன்தினம் ஒலித்த அந்த டெலிபோன் மணி தொடர்ந்து அவன் காதில் சத்தமில்லாமல் எதிரொலித்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. போனில் பேசியது வேறு யாருமல்ல தனது அன்புத் தங்கைதான். அவளை பார்த்து ஓராண்டு ஆகிறது. டெல்லியில் இருக்கும் அவள் இன்று ஊர் வருகிறாள். வழியில் சென்னையில் இருக்கும் அண்ணனை பார்த்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பதான் அந்த தங்கை வினிதாவின் ஆசை. அவள் வரும் முன் அவளுக்கு வேண்டியதையெல்லாம் வாங்கி வந்து அவளை குதூகலத்தில் ஆழ்த்த வேண்டும் என்று விமலுக்கு ஆசை.
ஒரேஒரு நாத்தனார், இன்றைக்கு வரப்போறது சாந்திக்கும் சந்தோஷம்தான். தங்கைக்கு திருமணமான ஆறு மாதம் கழித்துதான் விமலுக்கு திருமணம். அதனால் அவர்களின் அண்ணன்&தங்கை பாசத்தை உணர்வு பூர்வமாக சாந்தியால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் தங்கையை சிறப்பாக கவனித்தால் தன் கணவருக்கு செய்யும் பேருதவியாக நினைத்தாள் சாந்தி. அந்த அளவுக்கு மனைவிக்கு எந்த குறையும் வைக்காமல் இருந்தான் விமல்.
விமல் தன் அறைக்கு சென்று பீரோவை திறந்தான். அங்கே அவளுக்காக அவ்வப்போது வாங்கி வைத்திருந்த ஆடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேல் ரேக்கில் உள்ள ஆல்பத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசை. எடுத்து புரட்டினான்.
பொதுவாக எல்லா திருமண ஆல்பத்திலும் புதுமணத்தம்பதியரின் படத்தைதான் முதல் பக்கத்தில் வைத்திருப்பார்கள். ஆனால் இந்த ஆல்பத்தில் விமலும் வினிதாவும் எடுத்துக் கொண்ட படம்தான் இடம்பிடித்து இருந்தது. இதற்கு காரணம் விமல் அல்ல. ஆல்பம் தயாரிக்க போட்டோ ஸ்டுடியோக்காரர் வந்ததும் வினிதாவின் முதல் கட்டளை இதுதான். “இந்த ஆல்பத்தில் நானும் என் அண்ணனும் உள்ள படம்தான் முதலில் இடம்பெற வேண்டும்.” என்றாள்.
அதன்படி முதல் படம் வினிதா தன் அண்ணன் விமலிடம் ஆசி வாங்கும் படம்தான் இடம் பெற்று இருந்தது. முதலில் உன்னுடைய ஆசிதான் எங்களை வாழ வைக்கும். அதனால் முதலில் தேவை உன் ஆசிதான் என்று விளக்கம் சொன்னாள். தங்கையின் பாசத்தை இந்த அளவை விட வேறு எதன் மூலம் அறிய முடியும்.
மாலையில் வரப்போகும் தங்கையின் நினைவாக சற்று ஓய்வு எடுத்தான். சமையல் அறையில் பண்டம் பலகாரத்தை செய்து பெரிய தூக்கு வாளியில் வைத்து இறுக மூடினாள், சாந்தி.
அப்போதுதான் பூக்கடைக்காரர் வரச்சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே வீட்டைவிட்டு வெளியேறிய அவன் அரை மணி நேரத்திற்குள் வீட்டுக்கு வந்தான். கை கொள்ளாதபடி வாழை இலையால் சுற்றப்பட்ட பெரிய பொட்டலம். எவ்வளவுதான் மூடி வைத்தாலும் உள்ளே இருப்பது மல்லிகை மலர்கள் என்பதை அதன் வாசனை வெளிகாட்டியது.
வினிதாக்காக செய்த வேலைகளை முடித்துக் கொண்டு சந்தோஷமாக வெளியே வந்த சாந்திக்கு கணவர் வாங்கி வந்த பூவைப் பார்த்ததும் முகம் மாறியது.
கணவர் மீது அப்படியரு கோபப் பார்வையை பார்த்தாள். உதடுகள் அவளின் வருத்தத்தை வெளிகாட்டியது. ஆனால் அந்த கோபத்தையோ, வருத்தத்தையோ விமல் அறியவில்லை. அவன் மனமெல்லாம் தங்கையின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
விமல் தனது அறைக்கு சென்றான். மின்தடையால் மின் விசிறி சுழலாவிட்டாலும் இவன் மனம் மகிழ்ச்சியில் பறந்தது. இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கு… அவ்வப்போது அவனது மனைவி அங்கு வந்து தனது கோபத்தை சிறுசிறு விஷயங்களில் காட்டினாலும் அதை உணர்ந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை.
அந்த நேரத்தில் மின்சாரம் வந்தது. மனைவி ஆன் செய்து வைத்திருந்த எப்.எம். ரேடியோ தானாக பாட ஆரம்பித்தது. பாசமலர் படத்தில் “மலர்ந்தும் மலராத பாதி மலர்போல…” பாடல் முடியும் தருவாயில் இருந்தது.
அவ்வளவுதான் அந்த காலத்தில் சிறுவயதில் தங்கையுடன் நடந்த உரையாடல்-பாசம் நினைவுக்கு வந்தது.
எப்போதும் படிப்பு படிப்பு என்று தொந்தரவு செய்யும் அவர்களது தாய் அன்று “வாங்க நாம சினிமாவுக்கு போவோம். என்றாள்.
“அப்படியாம்மா”-& சந்தோஷத்தில் குதித்தனர்.
தியேட்டருக்கு போனபின்னர்தான் அவர்களுக்கு தெரிந்தது அது பாசமலர் படம் என்று.
படம் பார்த்து வீட்டுக்கு வந்ததும் தாயின் அட்வைஸ். “நீங்களும் பாசமலர் அண்ணன்-தங்கை மாதிரி பாசமா இருக்கணும்.”
ஏற்கனவே தங்கை மீது பாசம் கொண்டிருந்த விமலுக்கு தாயாரின் அறிவுரை மேலும் உரமேற்றியது. வெளியே எங்கு சென்றாலும் தங்கைக்கு விருப்பானவற்றை வாங்கி கொடுப்பான். அதை பெற்றுக் கொண்டதும் அவள் முகத்தில் ஏற்படும் பிரகாசத்தை கண்டு பூரிப்பான். அதே நேரம் ஏதாவது காரணத்தால் அவள் விருப்பம் இல்லாத ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தாலும் அண்ணன் வாங்கித் தந்தான் என்பதற்காக அந்த பொருள் மீது விருப்பம் கொண்டுவிடுவாள்.
அவ்வப்போது பாசமலர் படத்தின் பெருமையை அவர்களின் தாய் பேச…. ஒரு முறை வினிதாவுக்கு கோபம் வந்துவிட்டது. அப்போது அவள் சொன்னதுதான் அவள் மீது விமலுக்கு பாசம் ஒருபடி மேலோங்கியது.
“பாசமலர் படம் என்ன பெரிய படம்…”
“என்னடி அப்படி சொல்லிட்ட…”
“சிவாஜி-சாவித்திரி எப்படி நடிச்சிருக்காங்க….”
“அவங்க நடிப்பில ஒண்ணும் குறை சொல்லல”
“பின்ன என்ன குறை அதுல”
“அந்த படத்துல சிவாஜி, தங்கச்சி மேல வச்சிருக்கிற பாசம் அளவுக்கு சாவித்திரி அண்ணன் மேல வக்கல”
“என்ன அப்படி சொல்லற”
“ஆமா சிவாஜி தன் தங்கையே உலகம்ன்னு இருந்தார். ஆனா சாவித்திரி என்னதான் இருந்தாலும் ஜெமினிகணேசனை காதலிச்சாரே. அப்படின்னா அண்ணன் மேல வச்சிருக்கிற பாசத்துல கொஞ்சம் குறை இருக்குன்னுத்தானே அர்த்தம். அது மட்டுமா… அண்ணன் வீட்டைவிட்டு பிரியும்போது அண்ணன்தான் முக்கியம்ன்னு சாவித்திரி நினைக்கலியே?. இது அண்ணன் பாசம் மட்டும் உள்ளபடம். தங்கை பாசம் இல்லை”
“அது கதைம்மா… காதல்&பாட்டுன்னு இருந்தாதான் படம் ஓடும்.”
“ம்… அது படம். அந்த படத்தையும் என்னையும் ஒப்பிடாதீங்க.. எங்க அண்ணனை வேணும்ன்னா அந்த படத்தோட ஒப்பிடுங்க..”
&இந்த வாக்குவாதம் அன்று சம்பிரதாயத்துக்கு நடக்கவில்லை. திருமணம் வரை அவள் வேறு எந்த ஆணையும் ஏறெடுத்து பார்த்தது இல்லை. அது மட்டுமா இன்றுவரை தன் கணவரிடத்தில் கூட அண்ணனை விட்டுக் கொடுத்ததில்லை.
இரண்டு மணி நேரம் அந்த கால நினைவில் கரைந்தது. வெளியில் கார் சத்தம் கேட்டது. கணவரோடு வந்து இறங்கினாள் வினிதா. பயணக்களைப்பு எங்கோ மறைந்து அண்ணனை பார்த்ததும் மலர்ந்தாள். கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது.
“வாம்மா… பயணம் எல்லாம் எப்படி இருந்தது?”
“உன்ன பார்க்கபோறோம்ங்கிற ஆசை… பயணம் எப்படி கசக்கும்.”
“சரி குளிச்சிட்டு வாங்க… சாப்பிடலாம்.”
வினிதாவை வரவேற்பது மற்றும் உபசரணையில் சாந்தி எந்த குறையும் வைக்கவில்லை. ஆனால் கணவரை மட்டும் வெறுப்பான முகத்தோடு பார்த்தாள். சரியாக முகம்கொடுத்து பேசவில்லை. இந்த நேரம் கூட சாந்தியின் கோபத்தை விமல் உணரவில்லை.
குளித்துவிட்டு வந்ததும், தான் வாங்கி வந்திருந்த மல்லிகை பூ வை தங்கையிடம் கொடுத்தான். மேலும் அவளுக்காக வாங்கி வைத்திருந்த பொருட்களையும் அவன் கொடுத்தான்.
கணவருக்கு போட்டியாக சாந்தி செய்து வைத்திருந்த பலகாரத்தையும் கொண்டுவந்து கொட்டினாள். ஆனால் கணவரின் பக்கம் ஏறெடுத்து பார்க்கவில்லை.
அண்ணனும் தங்கையும் எதைஎதையோ பேசிக் கொண்டே இருந்தனர். வினிதாவின் கணவர் ஒரு ஓரமாக இருந்து நிஜமாக பாசலரை பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது சாந்திதான் அவனிடம் பேச்சுக் கொடுத்து வந்தாள்.
இரண்டு நாள் திருவிழாக்கோலம்தான். நேரம் போனதே தெரியவில்லை.
“அண்ணா.. ஊருக்கு போய் இவங்க வீட்டுக்கு போயிட்டு அப்படியே நம்ம அப்பா&அம்மாவையும் பார்த்துட்டு வருகிறோம்.”
தங்கை புறப்படத் தயாரானாள்.
“டெல்லி போக்கும் போது ரெண்டு நாளுக்கு முன்னாடியே வந்துடுங்க”
“சரி அண்ணேன்.”
தங்கையும் அவளது கணவரும் சென்ற பின்னர் வீடே வெறிசோடி காணப்பட்டது. கலகலப்பாக அமர்க்களமாக இருந்த வீட்டில் இனம் புரியாத அமைதி நிலவியது.
கண்களை துடைத்துக் கொண்டான்… சிறிது நேரம் படுத்து தூங்க வேண்டும் போல் இந்தது. அரை மணி நேரம் அயர்ந்து தூங்கிவனுக்கு விழித்ததும் மேலும் மேலும் வீடு வெறிச்சோடி காணப்பட்டது.
காபி கொண்டு வந்தவள் டம்ளரை டக் என்று வேண்டாவெறுப்பாக வைத்தாள்.
“என்ன சாந்தி கோபமாக இருக்க?”
“ஓகோ என் கோபம் இப்போதான் உங்களுக்கு தெரியுதா?”
“என்ன அப்பவே கோபமா இருக்கியா? என்ன சொல்லற..”
“எனக்கு கோபம் வந்து ரெண்டு நாளாச்சு”
“என்ன என் தங்கச்சி மேல உனக்கு அப்படி என்ன கோபம்?”
“இதோ பாருங்க… எனக்கு உங்க தங்கச்சி மேல எந்த கோபமும் இல்லை. எனக்கு உங்க மேலதான் கோபம்.”
“ஓகோ என் தங்கச்சி மேல வச்சிருக்கிற… பாசத்துல உன்னை மறந்துட்டேன்னு கோபமா?”
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல… அண்ணன்&தங்கச்சியை பிரிக்கணும்ன்னு நான் நினைக்கவும் இல்லை.”
“பின்னே என்னதான் உனக்கு?”
“நீங்க எனக்கு பிடிச்ச மல்லிகை பூ என்னைக்காவது வாங்கி வந்திருக்கீங்களா?”
“மல்லிகையா… அது என் தங்கைக்கு பிடிக்கும்…”
“அதான் எனக்கும் பிடிக்கும்ன்னு சொன்னேன்… எத்தனையோ முறை நானும் சொல்லி ஒருதடவையாவது வாங்கி வந்திருக்கீங்களா?”
“அது.. அது…”
“அதுதான் எனக்கு கோபம்… உங்க தங்கச்சி வேற.. நான் வேறன்னுதானே நினைக்கிறீங்க…”
“ஆமா எனக்கு நீ வேற… அவா வேறதான்…”
“அப்போ ஏன் என்ன கல்யாணம் பண்ணினீங்க?”
“அட மண்டு உன் மேல என்னைக்காவது பாசத்திலயோ, அன்பிலயோ குறை வச்சிருகேனா?”
“அதான் இந்த பூ விஷயத்துல தெரிஞ்சுதே.”
“இல்ல சாந்தி.. என் தங்கச்சிக்கு மல்லிகை பூன்னா ரொம்ப பிடிக்கும். அவளுக்கு சின்ன பிள்ளையிலேயே நிறைய வாங்கி கொடுப்பேன். அந்த மல்லிகையை பார்க்கும்போதும் அதன் வாசனையை நுகரும்போதும் அவ நினைப்புதான் வரும். அந்த மல்லிகையை உனக்கு வாங்கி கொடுத்தா நீயும் என் தங்கை மாதிரியே தெரிவ… தங்கை வேற… மனைவி வேற… அதான் உனக்கு பிச்சிப்பூ வாங்கி கொடுத்து அழகு பார்ப்பேன்.”
“ஓ இல்ல பூ விஷயத்துல இவ்வளவு இருக்கா… சாரிங்க.. என் மன்னிச்சுடுங்க.”
மனைவியின் கோபம் தணிந்தது. விமலின் மனமும் குளிர்ந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.