May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

அணு (னு)குண்டு, மாமா இல்லையா -முத்துமணி கதைகள்

1 min read

Anukundu and Mama illaiya? – short stories By Muthumani

1 அணு (னு)குண்டு.

” வாக்கா.நல்லா இருக்கியா?. அத்தான் எப்படி இருக்காங்க?. பிள்ளைகள் சுகமா இருக்காங்களா?. உட்காருக்கா.”.
“எல்லாரும் நல்லா இருக்காங்கடா. நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா? புள்ளைகள எங்கே?”.
“சனிக்கிழமை லீவு தானே! படுக்கையை விட்டு இன்னும் எந்திச்சி வரல. நான் இப்பதான் வெளிய போயிட்டு வந்தேன். அனு சமையல் பண்ணிட்டுருக்கா.”

அக்கா என்னை விட பத்து வயசு மூத்தவ. நாங்க ரெண்டு பேருதான். பக்கத்து ஊர்லதான் அக்காவைக் கட்டிக்கொடுத்திருக்கு. அப்பா படிக்கல. அத்தான் குடும்பக் கட்டுப்பாடு டிபார்ட்மெண்ட்ல, ஏதோ ஒரு வேலை. ஊரு ஊரா டிரான்ஸ்பர் இப்பதான் ரிட்டயர்டு ஆகிட்டார். ரொம்ப நல்ல மனுஷன். ஆனா அரசாங்கத்துக் கொள்கை மேல அவருக்கு நம்பிக்கை இல்லை போல. நாலு பொண்ணு ரெண்டு ஆண் மொத்தம் அரை டஜன் பிள்ளைகள்.
“அனு” கிச்சனைப் பார்த்துக் குரலைக் கொடுத்தேன் ஒரு பதிலும் வரல.

"அப்புறம் என்னக்கா விசேஷம்? சொல்லு".

“எல்லாம் நல்ல விஷயம் தான்டா தம்பி”.
அவ பெத்த அரை டஜனுக்கும் நான்தான் ஒரே தாய்மாமா. நான்கு பிள்ளைகளும் வயசுக்கு வந்து, அனு கூட சண்டையும் கிண்டையும் போட்டுக்கிட்டு, அதுக்கெல்லாம் போய் செய்ய வேண்டியதைச் செஞ்சாச்சு. இப்ப என்னமோ விசேஷம்ன்னு சொல்றா.
“உன் மூத்த மருமகளுக்கு கல்யாணம் நிச்சயமாகிருக்கு”.
“யாரு நம்ம சீதாவுக்கா? அவ்வளவு பெரிய ஆளா ஆயிட்டாளாடா?அப்படியா? ரொம்ப சந்தோசம்” .
“ஆமாடா தம்பி, அக்கா வீடுன்னு அடிக்கடி வந்து போனா தானே?
அவளும் பிஏ படிச்சு முடிச்சிட்டா. பக்கத்துல, பிள்ளையார்நத்தம் இருக்குல. அந்த ஊர்தான் .அவங்களா கேட்டு வந்தாங்க. நல்ல, கண்ணுக்கு லட்சணமான பையன். டிகிரி முடிச்சிட்டு மதுரை, டி வி எஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறான். மாசம் இருபது கிட்ட வாங்குறான்.
நானும் அடுத்தடுத்து பிள்ளைகள வச்சிருக்கேன்.ஒவ்வொண்ணா முடிக்கணுமே.”.
” அதுசரி புடிச்சிருந்தா செய்யலாம்.”.
” ஆமாடா தம்பி காலாகாலத்துல கடமைய முடிக்கணுமில்ல”.ரொம்ப போடல. ஏதோ என்னால முடிஞ்சது15 பவுன் தான். அத எப்படியோ ரெடி பண்ணியச்சி.அப்புறம் மண்டபம், சாப்பாடு, பத்திரிகை அது இதுன்னு சமாளிச்சுக்கலாம்.”

“மாப்பிள்ளை வீட்டுல ரொக்கமாக ஒரு அம்பதாயிரம் எதிர்பாக்குறாங்க. அதுல தான் பிரச்சனை.நீ இப்போ அதை மட்டும் கொடுத்து உதவினா கல்யாணத்தை வைகாசியில் வச்சிடலாம். அத்தான் பிராவிடமெண்ட் பணம் ரெண்டு மூணு மாசத்தல வந்துடும். வந்த உடனே உனக்குத் திருப்பிக் கொடுத்துடுவேன்.நான் வேற யாரிடம் கேக்க முடியும் தம்பி. போயிட்டு அடுத்த வாரம் வாரேன் நல்ல முடிவா சொல்லு.”.
” இருந்து சாப்பிட்டுட்டுப் போக்கா. நான் அவளைக் கலந்து பேசிட்டுச் சொல்லுறேன். நீ பஸ்ஸில் அடிக்கடி அலையண்டாம்.”

“இல்லடா நான் வந்தது அத்தானுக்குத் தெரியாது. ஒரு மணி பஸ்ஸைப் பிடிச்சுப் போயிடுவேன்”

கிச்சனுக்குள் இருந்து வந்தா அனு.
“யாரோ வந்துட்டுப் போன மாதிரி இருந்தது?.”

“யாரோ வந்தாங்களா எங்க அக்காடி. ஒரு மணி நேரமா உட்கார்ந்து பேசிட்டுப் போறா. இடையில் ரெண்டு மூணு தடவை உன்னைக் கூப்பிட்டேன். நீ என்னன்னே கேட்கல. இவ்வளவு நேரமா கிச்சனுக்கு உள்ளே கிடந்தியே அப்படி என்ன சமையல் பிரமாதமா செஞ்ச ?பிரியாணியா?”.
“இல்ல வெறும் ரசம்தான் வச்சிருக்கேன்”. “வீட்டுக்கு வந்தவளை வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா.”

“என்னவாம் உங்கக்காவுக்கு.?”

“ஒன்னுமில்ல. மகளுக்குக்குக் கல்யாணம் வச்சிருக்காளாம் .ஒரு அம்பதாயிரம் கடனாக் கேட்டா. ரெண்டு மாசத்துல திருப்பிக் கொடுத்துடுவாளாம்.”
.
“நீங்க என்ன சொன்னீங்க?.”
“நான் என்ன சொல்லப் போறேன்?. உன்கிட்ட கலந்து ஒரு வார்த்தை கேட்டுட்டுச் சொல்றேன்னு, சொல்லி அனுப்பிட்டேன்”.
“இதுல எங்கிட்ட கே க்குறதுக்கு என்ன இருக்கு? உங்க அக்கா ,உங்க கூடப்பிறந்தவ, உங்களுக்கு மூத்தவ, உங்களைத் தூக்கி வலத்த்வா கேட்கிறா .இதுக்கு நீங்க என்கிட்ட கேட்கணுமா?. உங்க அக்கா உங்ககிட்ட கேட்காம யாரிடம் கேப்பாங்க?. வெறும் அம்பாதாயிரம். இதுக்குப் போய் என் கிட்ட கேக்கணுமாக்கும்?.”
அவள் பேச்சைக் கேட்டு நான் அசந்து போனேன். எவ்வளவு தாராள மனசு. நான்தான் இவளைத் தப்பா நெனச்சிருக்கேன்.
“நீ சொல்லுறது சரிதாம்மா. என்ன இருந்தாலும் உன் கிட்ட ஒரு வார்த்தை கேட்காமல் எப்படி?. அடுத்த வாரம் அக்கா வருவா.”.

” நல்லா குடுங்க ஆம்பதாயிரம் என்ன? அஞ்சு லட்சத்தைத் தூக்கி உங்க அக்காட்ட குடுங்க. நானும் என் பிள்ளைகளும் நடுத்தெருவில் நின்னுட்டுப் போறோம்”.அனு பெரிய அணு குண்டாத் தூக்கி என் தலையில் போட்டுட்டு, அவ கண்ணைக் கசக்கிட்டு உள்ளே போயிட்டா. அதானே, இவளா திருந்துவா?..
அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எங்க அக்கா வந்து கேட்க, நான் இல்லன்னு சொல்ல, வாசல்ல நின்னு மண்ணள்ளித் தட்டி, “உன்ன அம்மாவுக்கு அம்மாவா இருந்து வளர்த்தநடா. நீ காட்டுற நன்றி இதானா? நீ நல்லா இருப்பியா? உன் பிள்ளைக்குட்டி விளங்குமா? என்னல்லாமோ சொல்லிச் சாபம் கொடுத்தா. நான் பதிலே பேசல்ல.வெளியில் செல்லவும் இல்லை. எங்க அக்கா சாபத்தையாவது தாங்கிக்கிடலாம். ஏதோ கோபத்துல மனசுக்குள் வைக்காம பேசுவா. ஆனால் இவள் கோபத்தைத் தாங்கிக்கிட்டு வீட்டில் மனுஷன் வாழ முடியுமா?

========

2 மாமா இல்லையா?

காதல் என்பது காட்டாறு. அது கண் தெரியாத மோட்டாரு.சினிமாப் பாட்டு.

காதலிக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னா, அப்புறம் கண்மண் தெரியாமல் போய் கிட்டே இருப்பாங்க.காதல் என்பது ‘ஒன் வே, மாதிரிதான். உள்ளே போகலாம் திரும்பி வர முடியாது. லவ் என்பது லைப் பிரச்சனை.வெறும் விளையாட்டுல்லை.லவ் பண்ணும் போது, யார் என்ன சொன்னாலும் செல்லாது. அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது.
ஆம்பளப் பையன்கள் எல்லோரும் எப்போதும் ,கையில் ஒரு வலையோடு தான் அலையுறான். எந்த மீன் சிக்கும்ன்னு. அதில் சிக்கினால் பிறகு மீளவே முடியாது என்பது தெரிந்தும் சில மீன்கள் சிக்கி விடுகின்றன. வலையை வீசியவன், தகுதி என்ன? வசதி என்ன? வேலை பார்க்கிறானா? பொருளாதார நிலை என்ன? வீட்டுப் பின்னணி என்ன? சாதி என்ன? மதம் என்ன ?அவன் கொள்கை என்ன? வயது என்ன? அவனுடைய பழக்க வழக்கங்கள் என்ன? நல்லவனா கெட்டவனா?ன்னு கூட பார்க்காம சிக்கிவிடும் பெண்கள், பின்னர் வாழ்க்கையில் படாத பாடெல்லாம் பட்டு எல்லாத் துன்பத்திற்கும் ஆளாகித் தூக்கில் தொங்கி, அல்லது , தினமும் மனதால் செத்து செத்துப் பிழைக்கிற செய்திகளைத் தினமும் படித்தும் பார்த்தும். பிறகும் பெண்ணினம் தொடர்ந்து ஏமாறுவது ஏன்?.

காதலிக்கும் போது அவன் அளந்து விடும் வார்த்தையெல்லாம் எல்லையற்ற உடல் பசியால் மட்டுமே, பசி தீர்ந்தால், பேசியது மறந்துவிடும் என்பதை அறியாமல், உண்மை என்று அப்படியே நம்பிவிடும் மடத்தனம் அந்த வயது பெண்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. காணாக் குறைக்குச் சினிமாக்காரன் வேறு ஏத்தி விடுறான். இளைய சமுதாயத்தைக் கெடுப்பதற்கு ,என்ன உண்டோ அத்தனையும் காட்டுறான்.அந்தக் காலத்தில் வந்த படங்கள் வேறு. வசந்த மாளிகை மாதிரி ஒரு படத்தைப் பார்த்தால் அதில் வரும் கதாநாயகன் கதாநாயகிஒன்றாகச் சேர்வார்களா? மாட்டார்களோ ? என்ற கேள்வியோடு பார்த்து, கடைசியில் ஒன்றாகச் சேர்ந்து விட்டார்கள் என்று தெரிந்ததும் அடைகின்ற மகிழ்ச்சி, கைத்தட்டலில் முடியும். மற்றபடி அது போன்ற படங்கள் யார் மனதிலும் வேறு விதமான கெட்ட தாக்கத்தை உருவாக்காது.
ஆனால் இன்றைய படங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கிற குழந்தைகள் காதலிப்பதாகக் காட்டுவது, காதல் என்றால் என்ன வென்றுஅந்த வயதில் தெரியுமா? காதலுக்காகத் தகப்பனை எதிர்த்துப் பேசுவது , ஆள் வைத்து கொலை செய்வது, இப்படியெல்லாம் காட்டுரவன் வீட்டில் ,அது நடந்தால் தானே தெரியும்?எவனாவது என் மகள் அவள் இஷ்டத்துக்கு ஓடிப் போய்ட்டா என்று வெளியில் சொல்லி மகிழ்ச்சி அடைய முடியுமா?.முகத்தைச் சவரம் செய்யாமல், குளிக்காமல், நல்ல டிரஸ் போடாமல், கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு, புகை பிடித்துக் கொண்டு, தண்ணியைப் போட்டுக்கொண்டு ,எந்த வேலையும் செய்யாமல் அலைகின்ற ஒருவனை, நல்ல குடும்பத்தில் பிறந்த நன்றாகப்படித்த ஒரு பெண், உயிருக்கு உயிராகக் காதலிப்பதாக இன்னும் எத்தனைப் படங்களில் தான் காட்டப் போகிறார்கள்?.கேட்டா சில மெத்தப்படித்த மேதாவிகள் கூட காதல் புனிதமானது. காதல் ஒன்றும் கெட்ட வார்த்தை அல்ல. என்று பாடம் நடத்துவார்கள். காதலையும் வேதம் என்று சொல்லும் கவிஞர்கள் ஒரு பக்கம்.பாரதியார் சொன்னது போல நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் கை தட்டலாம். அவர்கள் வீட்டிற்குள் அது வரும்போதுதான் பத்தி எரியும் .கொஞ்சமும் சமூகப் பொறுப்பில்லாமல் இதையெல்லாம் காட்டி, பிள்ளைகளைத் தூண்டி படங்களைப் பார்த்தவுடன் காதலிக்காமல் இருப்பது பெரிய குற்றம் என்று நினைத்து, ஏற்படும் உந்துதலில், எதையோ செய்து விடுகிறார்கள். காதலிக்கும்போது இனிமையாகத்தான் இருக்கும். கல்யாணம் செய்த பிறகு தானே வாழ்க்கை தொடங்கும்?. அதை எந்தப் பயல் சினிமாவில் காட்டினான்?.கல்யாணமாகி கஷ்டங்களைச் சந்திக்கும்போது ஒருகட்டத்தில், ஏன்டா இப்படி செய்தோம்? என்று எண்ணி வருத்தப்பட்டும் போதுதான் தனக்கு வந்தது காதலே அல்ல என்று உணர்வார்கள். அதனால் தற்கொலை செய்து கொண்ட பெண்கள், குடிகாரனுக்கு வாக்கப்பட்டுட்டோமே, அப்பா பேச்சைக் கேட்டிருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கா தே.காதலிக்கிறேன் என்று சொல்லி வீட்டைவிட்டுப் பிரித்துக் கூட்டிட்டு வந்தான். ரெண்டு பிள்ளைகளையும் கொடுத்தான். குடிச்சு குடிச்சு 30 வயசுல விட்டுட்டு செத்துட்டான் .எனக்கு ஆதரவு இல்லையே. என் பிள்ளைகளை எப்படிக் காப்பாத்த? கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு கூட வாங்கிப் போட வக்கில்லாத ஒருத்தனை நம்பி வந்து விட்டோமே. இப்படி வருத்தப்படும் பெண்கள் கூட்டம்தான் அதிகம். காதலித்துக் கல்யாணம் முடித்த பிறகு அவளையே சந்தேகப்பட்டு, அன்றாடம் அடித்து த்துன்புறுத்தும் அரக்கர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். அன்றாடம் செய்தித்தாளில் இவற்றையெல்லாம் படித்த பின்னும் பெண்கள் இன்னும் தொடர்ந்து வலைகளில் சிக்குவது ஏன்? என்பது தான் என்று புரியவில்லை!. இதற்குத்தோதுவாக இப்போது சமூக ஊடகங்களும் வாட்ஸ்அப் ஃபேஸ்புக். கண் கொத்திப் பாம்பாகப் பெற்றோர்கள் காவல் காத்தும் பயன் இல்லாமல் போய்விடுகிறது.
சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும்?. ஒருவேளை சோறு போட வக்குல்லாதவன், காதலிக்கும் பெண்ணின் தாய் தகப்பனிடம், வீராப்பு பேசும் போது பார்த்தால் நமக்கு கோபம் பொத்துக்கிட்டுவரும். “இவள் என் உயிர். இவளுக்கு நீங்க எதுவும் செய்ய வேண்டாம். உங்கப் பெண்ணை, கட்டிய சேலையோடு அனுப்புங்க. அவளை ராணி மாதிரி வச்சு நான் காப்பாற்றுவேன்”. இதைச் சொல்லும் எல்லா பயலும் பத்து வருஷம் கழிச்சுப் பார்த்தாலும் அவளை அதே சேலையோடுதான் வச்சிருப்பான். மாற்றுச் சேலை வாங்கிக் கொடுக்க வழி இல்லாம. இப்படில்லாம் பேசி அந்தப் பெண்ணை வீழ்த்தி அவள் வாழ்க்கையைக் கெடுப்பதில் அப்படி என்னடா உங்களுக்குச் சந்தோசம்? காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். ஆனால் பெண்களுக்குக் கண்களே கிடையாது.இன்ஜினியரிங் படித்த பெண், ஏழாம் வகுப்பு படித்த ஒருவனோடு ஓடிப் போகிறாள்.கல்லூரியில் படிக்கும் பெண் கல்லூரி பஸ் ஓட்டும் டிரைவரோடு ஓடிப் போகிறா. என்ன நம்பிக்கை அவளுக்கு? எதற்காகப் படித்தாள்?. ஆணிடம் உள்ள அழகு,கல்வி, இசை, அறிவு,வீரம், விவேகம், பதவி, புகழ் இப்படிஏதாவது ஒன்று தானே அவளைக் கவர வேண்டும். அது எதுவுமே இல்லாத ஒருவனைக் காதலிக்கிறேன் என்று சொன்னால், அது காதல் இல்லை உடல் இச்சை. பருவக் கோளாறு. அந்தப் பருவம் எதையோ கேட்கிறது அவளிடம். அப்போது எவன் வந்து வலையை வீசுரானோ அதில் அந்த மீன் சிக்கி விடுகிறது. நல்ல வசதியான வீட்டில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை ஆசை காட்டி கூட்டி வந்து அவளை ஒரு வேளை சோத்துக்கு வழியில்லாமல் வறுமைக்கு உள்ளாக்கி கொடுமைக்கும் உள்ளாக்கி, அவள் படும் துயரங்களை, துன்பங்களை பார்த்து ரசிக்கும் மிருகங்கள் இருக்கின்றன செடியில் பூத்திருக்கும் ரோஜாவை பறித்துக் கசக்கி எறிவதில் ஒரு சுகம்.

இவற்றையெல்லாம் இப்போது நான் சொல்லவில்லை. இந்தக்கதையின் நாயகி லைலா மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது சினிமா போல. வீட்டைப் பகைத்துக் கொண்டு, அப்பா அம்மாவை விட்டு ஓட்டை சைக்கிளில் காரனோடு இவள் ஓடி வந்து ஏழு எட்டு வருஷம் இருக்கும். முதலில் சோறு கூட வேண்டாம் உன்னோடு சேர்ந்து இருந்தால் போதும். எனக்கு நீ மட்டும் போதும் என்ற எண்ணம் தான் அவளுக்கு ஓங்கி இருந்தது. பிறகு வயிறு பசித்த போது தான் தெரிந்தது.வேலை வெட்டிக்குப் போகமாட்டான் சாயங்காலம் ஆறுமணிக்கு தண்ணி போட்டு, விடிய விடிய அடிபிடி சண்டை. புலம்பல். அவளுக்கும் பழகிவிட்டது.பெற்றோர் அவளைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை உள்ளூரில் இருந்தும்.எத்தனை கஷ்டமோ அத்தனை கஷ்டங்களையும் அனுபவிக்கிரா. ஆரம்பக் காலத்து ஆசையின் பயனாகப் பிறந்தான் ஒரு பையன். அந்த ஆக்கங்கெட்ட பயலைப் போலவே நல்ல கலர். அந்தக் கலருக்கு மயங்கித் தானே வந்தாள். பிறகு அவள் இடம் கொடுத்தால் தானே அடுத்த பிள்ளை? அது இல்லை. செந்தில் மகன் பெயர். கஷ்டப்பட்டு டெய்லரிங் தொழில் செய்வது மகனை வளர்த்து நல்ல பள்ளியிலும் படிக்க வைக்கி றா.பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிற போது பள்ளிவாசலில் நின்று தினமும் அவளை டாவடித்துக் கல்லையும் கரைத்து இழுத்துக்கிட்டு வந்துவிட்டான். பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் கூட ஏதாவது வேலைக்குப்போய் இருக்கலாம்.
செந்தில் படிக்கும் அதே பள்ளியில் அதே வகுப்பில் தான் சுரேஷ் படிக்கிறேன். சுரேஷின் அம்மாவிற்கு இவள் வயதுதான் இருக்கும் அவளுக்குத் தூத்துக்குடி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் சுரேஷின் கணவன் மதுரையைச் சேர்ந்தவர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.அவன் எதுத்த வீட்டு பையன். அவன் வீட்டிற்கு அடிக்கடி மதுரையில் இருந்தும் தூத்துக்குடியிலிருந்து தாத்தாக்கள் பாட்டிகள் வந்து போவார்கள். செந்திலைப் பார்க்க யாரும் வருவதில்லை ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.
அன்றைக்கு அப்பாவும் அம்மாவும் தலையில் அடித்துக்கொண்டு ஆயிரமாயிரம் முறை எவ்வளவோ புத்திமதி சொன்னார்கள். தடுத்தார்கள் செத்துப் போவோம் என்று கூடச் சொன்னார்கள். உனக்கு அவன் தகுதியா? படிப்பு முடியட்டும். நல்ல இடத்தில் உனக்கு த்திருமணம் செய்து வைக்கிறேன்.என்று என்ன சொன்னாலும் என் காதில் அது விழவில்லை. புத்திக்கு எட்டல.
தங்கை படித்தாள் எந்த வலையிலும் சிக்கல. மாப்பிள்ளை இன்ஜினியர்.கல்யாணமண்டபம் பிடித்து உறவினர்களை அழைத்து ஓஹோன்னு திருமணம் நடந்தது. ஆனால், இதெல்லாம் கேள்விப்பட்டது தான். திருமண மண்டபத்து வாசலுக்குக் கூட இவளை அனுமதிக்கல. இவள் திருமணம் எப்படி நடந்ததுன்னு சிந்தித்தால், ஒரு நேரம் சிரிப்பு வருது. பிறகு தாங்க முடியாத எரிச்சலா மாறுது.
எதுத்த வீட்டில் ஒரே ஆரவார சத்தம். பாட்டு. ஆட்கள் கூட்டம். வாசலில் கார்.
“அம்மா சுரேஷ் வீட்டில் நிறைய கூட்டமா இருக்கு வாசலில ரெண்டு மூணு கார் நிக்குது. இன்னைக்கு சுரேசுக்கு பிறந்தநாள் அம்மா”. “அப்படியாடா?”.
“ஆமாம்மா.நேத்துதான் சொன்னான். எனக்குக் கூட கேக் கொண்டு வந்து தருவதாகத் சொன்னான்.அவனோட ஒரு தாத்தா பாட்டி மதுரை. இன்னொரு தாத்தா பாட்டி தூத்துக்குடியிலிருந்து வருவாங்க.அவளுக்கு ஒரு மாமா இருக்காராம். மெட்ராஸ்ல பெரிய வேலை பாக்கறாராம். அவரும் வருவாராம். அவங்க கார்தான் அந்தப் பெரிய காரா இருக்குமோ?. சுரேஷுக்கு பிறந்தநாள் பரிசு, ஒரு புது சைக்கிள் வாங்கிட்டு வருவாராம்.
சேலை முந்தானையால் கண்களை ஒற்றிக் கொண்டு, சரி சரி உள்ளே வாடா. என்று அவனை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாலும் அவன் திரும்பி எதிர்த்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது சுரேஷ் அழகான நீலக்கலர் புது டிரஸ் போட்டு புத்தம்புதிய சிவப்புக்கலர் புது மாடல் சைக்கிளில் ஏறி மிதித்துக் கொண்டு வாசலுக்கு வந்தான்.
“டேய் செந்தில் பாத்தியா? புது டிரஸ் தாத்தா வாங்கிட்டு வந்தாங்க. பார்த்தியா? புது சைக்கிள் எங்க மாமா வாங்கிட்டு வந்தாங்க. உள்ள நிறைய கேக் சாக்லேட் எல்லாம் இருக்கு. அப்புறமா உனக்குக் கொடுக்கிறேன்” சொல்லிட்டுப் போயிட்டான்.

செந்தில் கேட்டான், அம்மா சுரேஷுக்கு இரண்டு தாத்தா, ரெண்டு பார்ட்டி, ஒரு மாமா, அத்தை எல்லோரும் இருக்காங்க. எனக்கு தாத்தா பாட்டி யாரும் இல்லையாம்மா? எனக்கு மாமா இல்லையாம்மா? எனக்கும் மாமா இருந்திருந்தா சைக்கிள் வாங்கிக் கொடுத்துருப்பார். என் பிறந்தநாள் போன மாசமே வம்துதே. தாத்தா பாட்டி இருந்தா வந்திருப்பாங்கல்ல?.
பீறிட்டு வந்த அழுகையை அடக்கமுடியாம அழுதுகிட்டு, தலையில் மாறி மாறி அடிச்சிகிட்டி சொன்னாள் “உனக்குத் தாத்தா பாட்டி எல்லாரும் இருக்காங்கடா .ஒரு மாமா இல்ல, தடித்தடியா உனக்கு அஞ்சு மாமா இருக்கான்டா. யார் சொல்லியும் யார் தடுத்தும் கேட்காமல் உங்க அப்பன் வெள்ளைத் தோலுக்கு ஆசைப்பட்டு ஆசை வார்த்தைக்கு மயங்கி என்னிக்கு வீட்டை விட்டு, உங்க அப்பன் பின்னால் வந்தேனோ, அன்னைக்கே உனக்கு, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சித்தி யாருமே இல்லாம போய்ட்டாங்கடா. உன்ன நாதி இல்லாதவனா ஆக்கினது இந்த அம்மாவோட பாழாப்போன காதல் கன்றாவிதாண்டா” சுவரில் முட்டிக் கொண்டு அழுதாள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.