May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

நன்னயம், அப்பா தாத்தா- சிறுகதைகள்- முத்துமணி

1 min read

Nannaiyam and Appa thaththa- Story b Muthumani

28-6-2020

நன்னயம்

நவீன் பேட்டிங், பந்து சரியா அந்த காம்பௌண்ட் வாலுக்குள்ள ரோஜா செடிமேல் தொப்புன்னு விழுந்தது.
“டேய் வாங்கடா’ ஓடிடலாம். அந்தக் கிழவி வந்தா? கத்துவா”.
“டேய் அப்போ பால்?.”
“அவ வீட்டுக்குள்ள விழுந்தா தரவே மாட்டா. தூக்கித் தீக்குள் போட்டுருவா தெரியுமில்ல”.
அந்த ஏரியாவில் அதுதான் பெரிய வீடு. சுற்றி காம்பவுண்ட் வால். உள்ளே ஒரு பெரிய கிரிக்கெட் கிரௌண்ட் அளவுக்கு இடம் சும்மா கிடக்கு. வீட்டைச் சுற்றியும் பூந்தோட்டம் விதவிதமான பூக்கள். அந்த வீட்டில் அந்தக் கிழவியைத் தவிர வேறு யாரும் இல்லை. தினமும் காலையில் ஒரு ட்யூபைக் கையில் வச்சிகிட்டு, இங்கிலீஷில் ஏதோ புலம்பிக்கிட்டு, எல்லாச் செடிகளுக்கும் தண்ணீர் ஊத்துவா. வயது எழுபதுக்கு மேல் இருக்கும். பிறகு அங்கேயே வாக்கிங், கால் சாய்த்து சாய்த்து நடப்பா. இங்கிலீஷ் காரி, மாதிரி பாப் கட்டிங், நரைத்த முடி, சுருக்கு விழுந்த முகம், , கையில்லாத கவுன்,கண்ணாடி போட்டுக்கிட்டு.”நம்மைப் பார்த்ததும் இங்கிலீஷிலே திட்டுவாடா”.
கதவு திறந்து. வந்தா. உடனே ” இடியட் நான்சென்ஸ்” ஏதேதோ திட்டிட்டுப் பந்தை எடுத்துக்கிட்டு போயிட்டா.
“விளையாட வேற இடமே இல்லையா?. சாத்தான் குட்டிகள்”. உள்ளருந்து கத்துவது கேட்டது.

பாபு வீட்டில் வந்து’ அம்மாவிடம் கேட்டான். “அந்த வீட்டில் யாரோ ஒரு பாட்டியம்மா மட்டும் இருக்காங்க. நாங்க ரோட்ல விளையாடினால், அவங்களுக்குப் பிடிக்கல .உடனே திட்டுறாங்க”.
“அந்தம்மா ஒரு டீச்சர்டா. ரொம்ப காலமா வெளியூரில் வேலை பார்த்தாங்க. அவங்க வீட்டுக்காரர் ராணுவத்தில் வேலை பார்த்தாராம். அவங்க பேரு ரோஸி”.
“அப்போ வீட்டு வாசலில் ஆப்ரகாம்ன்னு போட்டிருக்கு அதுதான் அந்த அம்மாவோட ஹஸ்பண்ட் பேரா?”.
“ஆமாடா.”
நவீன் வீட்டில், அவங்க அப்பா சொல்லிட்டு கொண்டிருந்தார்.
“நவீன் . இந்த அம்மா திருநெல்வேலியில் கான்வென்ட் டீச்சர். அவங்க கணவர் காஷ்மீர் பார்டரில் வேலை பார்த்தார். கல்யாணம் ஆனதும் காஷ்மீர் போனவர், ஒரு வருஷம் கழிச்சு தான் வந்தார். அப்ப ஆறு மாசம் லீவுல இந்த வீட்டைக் கட்டி முடித்தார். ” – முனியசாமி வீட்டில் பாட்டி அவனிடம் சொன்னாள்.
“லீவு முடிஞ்சு காஷ்மீருக்குப் போனவரு சண்டையில் செத்துப் போயிட்டாரு. அவரு உடம்பு தான் இங்க வந்தது. இது நடந்து நாப்பது அம்பது வருஷம் இருக்கும்.”
“அங்கதான்பா, இடம் இருக்கு .அங்க விளையாடினா, அந்த லூசுக் கிழவிக்கு என்ன?”. கேட்ட டேவிட்டுக்கு அப்பா சொன்னார்.

“அந்த டீச்சர் வாழ்க்கையில ஒரு நல்லதையும் பாக்கலடா. கல்யாணம் முடிஞ்ச உடனே கணவர் இறந்துட்டாரு. இவங்களுக்குப் பிள்ளையில்லை. கிட்டதட்ட ஐம்பது வருஷமா தனியா வாழ்றா. நான் சின்னப் பையனா இருக்கும்போதே பார்த்துருக்கேன்”.
மதன் அம்மா சொன்னது.
“அவளுக்குச் சொந்தபந்தம் யாரும் இருப்பதாத் தெரியல. யாருமே வீட்டுக்கு வர மாட்டாங்க. வேலைக்காரி, சாந்தா மட்டும் காலையில வந்துட்டு சமையல் பண்ணி வச்சுட்டுப் போய்டுவா. அவகிட்ட கூட ஒழுங்கா பேச மாட்டாங்க. அப்புறம் டிரைவர் ஆறுமுகம் போன் பண்ணினால் மட்டும். வருவான். கார் எடுத்துட்டு போயிட்டு வந்திடுவாங்க. ஞாயிற்றுக்கிழமை சர்ச் , அப்புறம், ஆஸ்பத்திரி அவ்வளவுதான். வேற எங்கேயும் போமாட்டாங்க.”
முனியசாமியின் பாட்டி, தொடர்ந்து சொல்லிக்கிட்டுருந்தா. “நம்ம ஊர்லயும் யார் வீட்டு விசேஷத்திற்கும் வர மாட்டாங்க.ஒரு மன வியாதி மாதிரி, தனிமை மட்டும் தான் பிடிக்கும் ரொம்ப கோவம் வரும். உங்கள மாதிரி பிள்ளைகளைப் பாத்துட்டா பிடிக்காது. சத்தம் கேட்டால் கூட பிடிக்காது.”
“ஆமாம்மா, உள்ள போன பந்து திரும்பத் தர மாட்டா. அடுப்புல
போடறேன்ன்னு கொண்டு போயிடுவா.” பாபு அம்மாவிடம் சொன்னான். “ஆமாடா சொந்தபந்தம் ஏதும் இல்லாமல் தனியாக வாழுற வங்களுக்கு, எப்படிடா விட்டுக் கொடுக்கிற மனம், அன்பு, பாசம் எல்லாம் வரும்?. நீங்க விளையாடறதுக்கு வேற இடம் பாருங்க”.

மறுநாள் காலையில் அதே இடத்தில்,” டேய் நான் புதுப் பந்து வச்சிருக்கேன்” என்றான் நவீன்.
“மறுபடியும் பந்து உள்ள போயிடுச்சுன்னா?, சாத்தான் வந்து கத்துமேடா.”
அப்போது அங்கு வந்த டிரைவர் “டேய் தம்பிகளா போயிடுங்க. வீணாப் பிரச்சனை வரும்” சொல்லிக்கிட்டே உள்ளே போனான். “டேய் கிழவி இன்னைக்கு வெளியே போறா, நமக்குப் பிரச்சனை இல்ல. கார் போனதும் ஜாலியா விளையாடலாம்.” என்றான் முனியசாமி.
பத்து நிமிடத்தில் வண்டி வெளியில் போனது. ஒரே கொண்டாட்டம்.
நவீன் அடித்த அடியில் பந்து உள்ளே போயிடுச்சு. ரெண்டு பூச்செடிகள் நாசமாப் போச்சு.
“டேய் என்னடா பண்றது?”. மதன் கேட்டான்.
“நவீன் கொஞ்சம் மெதுவா அடிடா. உன்னால தாண்டா எப்போது வம்பு வருது” என்று கோபப்பட்டான் பாபு.
“டேய் நீங்க என்னத் தூக்கிக் காம்பவுண்ட் வால் மேல விடுங்க நான் நைஸா, உள்ள குதிச்சு பந்தத் தூக்கிட்டு வந்துடறேன்”. என்றான் நவீன்.
“ஆமாடா நல்ல ஐடியா”.

இவர்கள் பேசிக்கிட்டுடிருக்கும் போதே கார் வந்துட்டது. கார் கண்ணாடியை இறக்கிக்கிட்டு, “சாத்தான்களே இன்னிக்கு வந்துட்டீங்களா? பூச்செடி எல்லாம் நாசமா பண்ண?. போங்க போங்க” என்று விரட்டி விட்டு உள்ளே போனாள்.

“இந்தப் பந்தும் ,போச்சாடா. உடைந்த பூச்செடிகளைப் பார்த்துட்டு இங்கிலீஷில் திட்டுவா”. ஓடிப்போய் தெருக்கோடியில் நின்று கொண்டார்கள்.
“என்னடா இந்த கிழவி இப்படி பண்ணுறா?”
இவளை ஏதாவது பண்ணனும்”.
“டேய் பந்து போய் செடி மேல பட்ட உடனே அவளுக்கு ரொம்ப கோவம் வருது.”
“ஆமாடா செடி அவளுக்கு உயிர்”
“அவளைப் பழி வாங்க ஒரு நல்ல ஐடியா. இன்னைக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு சுவரேறிக் குதிச்சி எல்லா பூச்செடியையும் வேரோடு பிடிங்கி எறிஞ்சிட்டு வந்துடனும்”
இரவு 9 மணி சத்தமில்லாமல் ஒவ்வொருவராக மெதுவாஏறி எப்படியோ, இறங்கிட்டாங்க. ஒரு லைட் மட்டும் எரிஞ்சுது. “அந்த இருட்டுக்குள் டேய் கவனமா எல்லாத்தையும் பிடுங்கு.”
“டேய் நீ அந்த ரோஜாவைப் புடுங்கி எறி நவீன்.”
அப்போது வீட்டுக்குள்ளிருந்து ,”ஜீசஸ் ஓ காட்’ ப்ளீஸ் சேவ் மீ” என்று கிழவியின் அலறல் சத்தம் கேட்டது.
“கிழவி ஏண்டா கத்துறா?” என்றான் பாபு. “வாங்கடா என்னன்னு பார்க்கலாம்?”
வீட்டுக் கண்ணாடிக் கதவு உடைந்து கிடந்தது. உள்ளே முகமூடி போட்ட திருடன் ஒருவன் கையில் கத்தியுடன் பாட்டியைக்குத்த முயன்று கொண்டிருந்தான். அவள் அவன் கைகளைப் புடிச்சுகிட்டுக் கத்துறா. ஐந்து பேரும் பக்கத்திலிருந்த எதை எதையோ எடுத்து அவனைத் தாக்க, அவன் கையிலிருந்த மூட்டையைக் கீழே போட்டுட்டு ஓடிட்டான். ஆனால் ,கீழே விழுந்த பாட்டியின் மண்டை உடைந்து, ரத்தம் வழிந்து மயக்க நிலைக்கு போய்ட்டா. மதன் கையில் கூட லேசா கத்தி பட்டு ரத்தம் வந்துருச்சு.
நவீன் சொன்னான். “டேய் பாட்டிக்கு ஆபத்து. உடனே அந்தப் போனில் 108 க்குப் போன் பண்ணு. அப்படியே நம்பர் 100 போடு போலீஸ் வரும்.”
எல்லாம் நடந்தது. ஆம்புலன்ஸ் வந்தது. போலீஸ் வந்தது. பாட்டி தென்காசி மருத்துவமனையில். இரவு மணி 11.
பாட்டிக்கு முனியசாமியின் ரத்தம் சேர்ந்தது. அவசரத்திற்குக் கொடுத்தாச்சு.ராத்திரி ரெண்டு மணிக்குப்பிறகுதான் பாட்டி கண் திறந்து பார்த்தா. அங்க நடந்ததையெல்லாம் பக்கத்தில் இருந்த நர்ஸ் சொன்னாங்க. பாட்டி அழுதா.
பாபு சொன்னான்.”அழாதீங்க பாட்டி, நீங்க நல்லா ஆயிட்டீங்க”.
டாக்டரும் போலீசும் பையன்களை ரொம்பப் பாராட்டினாங்க. “நல்ல பையன்கடா நீங்க”
“நாங்க ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் எய்டு கிளாஸ் எல்லாம் படிச்சிருக்கோம். பாட்டி மயங்கி விழுந்ததும் அங்கருந்து ஒரு துணியைக் கிழிச்சித் தலையில கட்டுப் போட்டோம். தண்ணீர் குடிக்க வச்சோம்.அவங்களத் தூக்கி கட்டில்ல படுக்க வச்சிட்டுப் போன் போட்டோம்.”

அஞ்சு பேரையும் காணலன்னு விடிய விடிய தேடிருக்காங்க. நாலு மணிக்கெல்லாம் போலீஸ் ஜீப்பில் வந்து இறக்கிட்டு, அஞ்சு பேரும் நல்ல பையங்க சொல்லிட்டுப்
போயிட்டாங்க. அப்புறம் காலையில டிரைவர், வேலைக்காரி எல்லாம் போய்ப் பாட்டியைக் கவனிச்சிட்டாங்க. மூணு நாள் கழிச்சு ரோசி, வீட்டுக்கு வந்தாச்சு.
டிரைவர் ஆறுமுகம் நவீன் வீட்டுக்கு வந்தான்.” தம்பி உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு வா. அம்மா சொன்னாங்க. வீட்டில் சொல்லிட்டு வரீங்களா?”.

கட்டிலில் படுத்திருந்த பாட்டி “வாங்கடா, பக்கத்துல உட்காருங்க. கட்டிலில் உட்கார வச்சுக்கிட்டா. அவர்கள் தோளில் கை வச்சுக்கிட்டு “என் உயிரையே காப்பாத்திருக்கீங்க”.
“பாட்டி உங்களுக்குப் பிள்ளைகள் இல்லியா?”. “யாருடா சொன்னா? வெளியே நிற்கிறது எல்லாம் யாரு?என் பிள்ளைகள். அவங்களுக்குத் தண்ணி ஊத்தி, உரம் வச்சு வளர்ப்பேன். தினமும் அவங்களோட பேசுவேன் . அவங்களும் என்கூட பேசுவாங்க. ஒருத்தன் வாடினா கூட எனக்குத் தூக்கம் வராது . ஏன்னா, எல்லாரும் என் பிள்ளைகள். அந்த தென்ன என் மூத்தப்புள்ள. இங்க இருக்கு பாரு பாலா, அது அடுத்தப் புள்ள. இதோ இருக்காளே மல்லிகை,
அது என் பொண்ணு . இந்த ரோஜா எல்லாம் என் பேரப்பிள்ளைகள்.”

சுவரை ஏறிட்டு பார்த்தார்கள். சுவர் முழுவதும் சின்னக் குழந்தைகளின் படங்கள் விதவிதமாக.
“டேய் அந்த ரூமுக்குள்ள ஒரு பீரோ இருக்கு .அதுக்குள்ள உங்க பந்து எல்லாம் இருக்கு எடுத்துட்டு வா”.
“அப்ப தீவைத்து கொளுத்தலையா”
” இல்லடா, ஏன் வைத்துலயும் ரெண்டு புள்ளையை கர்த்தர் கொடுத்துருந்தா, உங்கள மாதிரி நாலஞ்சு பேரப் பிள்ளைகளால் இந்த வீடு நெறஞ்சு கோலாகலமாக சந்தோசமாக இருக்குமே .அப்படி இல்லாம போச்சேன்னுதான் உங்களைத் திட்டி கிட்டே இருந்தேன்”.
“நாங்க இருக்கோம் பாட்டி உங்களுக்குப் பேரப்பிள்ளைகள்”.
“நிஜமாவாடா, நான் சாகிற வரைக்கும் என்னோடு இருப்பீங்களாடா?”
“இருப்போம் பாட்டி உனக்கு என்ன வேணாலும் செய்வோம்”.

“டேய் ஆறுமுகம், நாளைக்குத் தென்காசிகடைக்குப் போய், நிறைய கிரிக்கெட் பேட், பால் எல்லாம் வாங்கிட்டு வா. என் பேரப்பிள்ளைகள் விளையாடனும். நாளையிலிருந்து வீட்டுக்குள்ளேயே நிறைய இடம் இருக்கு .இங்கேயே விளையாடுங்க. மாரியம்மா, பிள்ளைகள் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வா”
மறுநாள் அந்த வீட்டில் பெரிய காம்பவுண்டுக்குள் கிரவுண்டு போலஇருந்த இடத்தில்,ஐந்து பேரும் விளையாட ,ஈசி சேரில் உட்கார்ந்து அதை ரசித்துச் சந்தோசமா பார்த்துக் கிட்ட்டே, “இப்பதாண்டா இது வீடு.டேய் பார்த்து, போடு’ அப்படிச் செய்’ குட் ,சூப்பர் இப்படிச்செய்” என்று கமெண்ட் வேற.
“அடுத்த வாரம் கிறிஸ்மஸ். மறுநாள் எங்களைத் தென்காசிக்குக் காரில் கூட்டிட்டுப் போனாங்க. டிரஸ் வாங்கி கொடுத்தாங்க பாட்டி.
“டேய் பாட்டிக்கு நாம கிறிஸ்துமஸ் கிப்ட் ஏதாவது
கொடுக்கணும்”.
“அவங்க பிள்ளைகளை நாம் கொன்னுருக்கோம். அதனால நர்சரி கார்டன் போய் நிறைய பிள்ளைகளை வாங்கிக் கொடுக்கணும்.”

===
2 அப்பா தாத்தா.

அந்தக் காலத்தில் பதினாறு பிள்ளைகளைப் பெற்றவர்கள் உண்டு. இப்ப ஒண்ணு அல்லது ரெண்டு. அத்தோடு நிறுத்திக் கொள்கிறார்கள். காரணம் சூழ்நிலை மிகவும் மாறிவிட்டது. விலைவாசி விண்ணைத் தொட்டுவிட்டது. பிள்ளைகளின் தேவைகள் அதிகரித்துவிட்டன. அந்தக் காலத்தில் பிள்ளைகளை எப்படித்தான் வளர்த்தார்களோ?. தெரியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்ப்பதிலே, ஆயிரம் சிரமங்கள். இப்படி யோசித்துக் கொண்டே வந்த போது எதிரில் வந்தான் மூக்கன். அவனுக்கு ஊருக்குள்ள பேரு மீசை மூக்கன். அவ்வளவு பெரிய மீசை அவனுக்கு.
அவனைப் பார்த்த பிறகுதான் அந்தக் காலத்துக் குசேலர்கள் இன்னும்,இருக்கத்தான் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஏனென்றால் மூக்கணுக்கு வரிசையா, ஐந்து பெண் மக்கள். அவனுக்கு வயசு என் வயது, அதாவது ஐம்பதுக்கு மேலிருக்கும்.

” தமிழ் ஐயா வணக்கம்” என்றான். “வணக்கம். நல்லா இருக்கீங்களா?”.
“நல்லா இருக்கேன்.கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்தது போல வந்துட்டீங்க. உங்ககட்ட ஒரு யோசனை கேட்கணும்.” இவன் என்ன கேட்கப் போகிறவன்?. திருமண வயதில் நிறைய பெண்களை வைத்திருக்கிறான். எங்கேயாவது மாப்பிள்ளை பார்க்கச் சொல்வான்.

 "ஐயா போனவாரம் ஆறாவது நமக்கு பொம்பளப் புள்ள பிறந்திருக்கு". என்றான். நமக்கா?,அடப்பாவி இவனுக்கு வேற வேலையே இல்லையா ?. உலகம் எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. 

“அப்படியா? சந்தோசம்.
” ஜன கன மன பாடுவதாக இல்லையோ?”. “ஐயா, என்னதான் பொம்பள பிள்ளைக இருந்தாலும் ,கொள்ளி வைக்க ஒரு பையன் வேணுமய்யா. பையனைப் பெக்காமாப் போனா நம்மள ஆம்பளைன்னு மதிக்குமா இந்த ஊரு? சொத்து சுகத்த காப்பாத்த, நம்ம வம்ச விருத்திக்கு ஒரு பையன் வேண்டாமாயா? ஆம்பள புள்ளையப் பெக்கலன்னா இந்த மீசைக்கு என்ன மரியாதை?. ஒவ்வொரு தடவையும் பையன் பிறப்பான்னு நினைச்சுதான் எல்லாமே. ஆனா பொட்டையா வந்து பிறக்குது. அதுக்காகக் கழுத்தை நெரிச்சாக் கொல்ல முடியும்?”.
” சரி இப்போ உன் பிரச்சனை என்ன?.” “மூத்தவ பிறந்ததும், உங்ககிட்ட கேட்டுத்தான் வான்மதின்னு பேர் வச்சேன். அடுத்தது பானுமதி, மூணாவது சாருமதி, நாலாவது வெண்மதி ,அஞ்சாவது வேல்மதி எல்லாமே உங்க யோசனதான்.இப்போ ஒன்னு பிறந்திருக்கு .என்ன பேர் வைக்கலாம்ன்னு, தமிழ் ஐயா உன்கிட்ட கேக்குறேன்.?”.
“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி. இனிமே உனக்கு வாழ்க்கையில கிடைக்காதது நிம்மதி ஒன்றுதான். இந்தப் பிள்ளைக்கு நிம்மதின்னு பேரு வச்சுட்டு, நிம்மதியா இரு.” “நல்ல பேரா சொல்லிட்டீங்க ஐயா. அதுக்குத்தான் ஊருக்குள்ள என்ற தமிழ் அதுக்குத்தான் ஊருக்குள்ள தமிழ் படிச்ச ஒருத்தர் இருக்கணும்”.
“சரி இதோடு நிறுத்திக்கோ”.
” ஐயா அதை மட்டும் சொல்லாதீங்க, ஆம்பளப் பையன பெத்து அவன் வாயால என்ன அப்பான்னு கூப்பிட்டாத்தான் என் நெஞ்சு வேகும். நேத்தே ஜோசியக்காரன் சொல்லிட்டான். ஏழாவது, பையன்தான் நீங்க சொல்லி நான் கேட்க மாட்டேன். இந்த விஷயத்தில் பேர் வைக்க மட்டும் உங்ககிட்ட வருவேன், பையனை பெத்துட்டு. மீசையை முறுக்கிக் கொண்டே போனான்.
ஆனா ஒண்ணு மூக்கன் நினைத்ததைச் சாதிச்சிட்டான் 58 வயதுக்கு பிறகுப் பையனைப் பெத்துட்டான். அவனைக் கையில பிடிக்க முடியல. மீசைய முறுக்கிக்கிட்டு எனக்கு ஆம்பளச் சிங்கம் பிறந்துட்டான். சொல்லிக்கிட்டே திரிந்தான். கோவிலுக்கு போய் வேண்டுதலை நிறைவேற்றினான். அந்தப் பயலுக்கு இரண்டு வயது ஆகும்போது மூக்கணுக்கு 60 ஆயிருச்சு.மீசை நரச்சுப் போச்சி. பையனுக்குப் பேச்சு வந்தது. என்ன ஒரு சிக்கல்? ஆசையோடு காத்திருந்த மூக்கணைப் பார்த்துப் பையன் சொன்னான்” தாத்தா”…
மூக்கன் செத்துட்டான்… அழுதுகொண்டே “தாத்தா இல்லடா. அப்பாடா”
பையன் கேட்டான். “அப்படியா தாத்தா?”.. “ஐயையோ “தலையில் அடித்துக்கொண்டு'” தாத்தான்னு சொல்லாதடா”. பையன் சொன்னான் “சரி தாத்தா”.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.