கொரோனா பரவலால் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு
1 min read
Postal vote allowed Over 65 Years for Corona Distribution
28-6-2020
கொரோனா பரவல் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டுப்போட அனுமதி வழங்கி சட்டம் திருத்தப்பட்டு உள்ளது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரும் தபால் ஓட்டுப்போடலாம்.
தபால் ஓட்டு
தேர்தல் பணியில் ஈடுபடுவோர், ராணுவத்தினர் மட்டுமே தபால் ஓட்டு போடும் நிலை இருந்தது. மற்றவர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்குச் சென்றுதான் ஓட்டுப்போட வேண்டம்.
இந்த நிலையில், 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் உடல் குறைபாடு உள்ளவர்களும் தபால் மூலம் ஓட்டுப்பதிவு செய்யலாம் என, 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது.
65 வயது
தற்போது, கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, தேர்தல் கமிஷன் பரிந்துரையின்படி, இந்த விதியில், சட்ட அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி, சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில், 65 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளோர், தபால் மூலம் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்யலாம்.
65 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனாவால், அதிகம் பாதிக்கப்படுவதால், அவர்களின் நலன் கருதி, இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறினார்கள்.
கொரோனா நோயாளிகள்
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்கூடதபால் ஓட்டுப்போடலாம் என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவோரும், தபால் மூலம், தங்கள் ஓட்டுகளை பதிவு செய்யலாம் என அதில் கூறப்பட்டு உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த 65 வயதுக்கு மேற்பட்டோர் பயனடைவர். இந்த சட்டத் திருத்தத்தை, இந்த ஆண்டு இறுதி வரை அமலில் வைத்திருக்க வேண்டும் என, சட்ட அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் பரிந்துரைத்துள்ளது