May 10, 2024

Seithi Saral

Tamil News Channel

கறி விருந்து/ சிறுகதை/ கடையம் பாலன்

1 min read

Kari virunthu / Short story By Kadayam Balan

“மஞ்சு தாத்தா வரப்போறாங்க… இப்படியா தலைய விரிச்சிப்போட்டுகிட்டு இருக்கிறது. போய் குளிச்சிட்டு களையா இரு…”
15 வயது மகளுக்கு கட்டளையிட்டாள் மரகதம். காலையிலேயே குளித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்து பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று மாமனார் கந்தசாமி பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கி வந்திருந்தாள்.
மாமனார் வயதாலும் சுறுசுறுப்பானவர். இளம் வயதில் அவர் படாத கஷ்டம் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாத அவரது குடும்பத்தில் இவர் தலையெடுத்த பின்னர்தான் முன்னேற்றம் தலைகாட்டியது. ஓயாது உழைத்தார். எந்தெந்த வியாபாரம் முன்னேற வழிகாட்டுமோ அதையெல்லாம் செய்தார். வாழ்க்கையில் உயர்ந்தார். சொத்துக்கள் வாங்கி குவித்தார். இதனால் அவர் தனது இல்லற வாழ்க்கையை கூட தாமதமாகத்தான் ஆரம்பித்தார்.
தனது ஒரே மகனுக்கும் வாழ்வில் முன்னேறுவதற்கான மந்திரத்தை உபதேசித்தார். அதோடு தொழிலில் பயிற்சியும் கொடுத்தார். இப்போது அந்த பகுதியில் பெயர் சொல்லும் அளவுக்கு பெரிய குடும்பமாக அவர்கள் குடும்பம் திகழ்கிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு. அதனால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆபரேஷன் நடந்தது. தற்போது மீண்டும் வீடு திரும்புகிறார். இவ்வளவு சொத்துபத்துக்கு காரணகர்த்தாவாக விளங்கிய அவருக்கு வயதானாலும் மரியாதை சிறிதும் குறையவில்லை. வீட்டில் உள்ள அனனவரும் அவரை தெய்வமாகவே கருதுகிறார்கள். குறிப்பாக மருமகள் மரகதம் அவரை மாமனாராக பார்க்கவில்லை. பெற்ற தந்தைபோல் போற்றுகிறாள். எதை செய்தாலும் மாமனாரிடம் கேட்டகாமல் செய்வது கிடையாது. உடல் நலம் சரியில்லாமல் போனதும் எல்லோரையும் விட மரகதம்தான் மிகவும் கவலை அடைந்தாள். தற்போது வீட்டுக்கு வருவது அவளுக்கு எல்லையில்லா சந்தோஷம்.
வெளியில் கார் வரும் சத்தம் கேட்டது. பேத்தி மஞ்சுவும் குளித்துவிட்டு தாத்தாவை வரவேற்க தயாரானாள். மரகம் ஆரத்தி தட்டை தயார் செய்து வாயிலுக்கு வந்தாள்.
கார் கதவை மகன் செல்வகுமார் திறந்து வெளியே வந்தான். அடுத்து ஊன்று கோலுடன் கந்தசாமி வெளியே வந்தார். தான் பார்த்து பார்த்து கட்டிய மாடி வீட்டை ஏறெடுத்து பார்த்தார். வீட்டுக்கு பிணமாகத்தான் வருவோமோ என்ற எண்ணத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்றவர் மீண்டு வந்ததை நினைத்து உள்ளூர மகிழ்ந்து கொண்டார்.
மருமகள் ஆரத்தி எடுத்து கற்பூரத்தை சாலையின் நடுவில் கொட்டினாள். மாமனார் வீட்டுக்குள் சென்றார். வாசல்படிக்கு உள்ளே ஓரமாய் நின்று கொண்டிருத பேத்தி மஞ்சுவின் தலையை தடவி கொடுத்து அணைத்துக் கொண்டார். உள்ளே சென்ற அவரை அவரது மனைவி புகைப்படத்தில் புன்னகைத்தபடி பழைய மாலையோடு வரவேற்றாள். “உனக்கு இந்த வீட்டில் இன்னும் கொஞ்ச நாளைக்கு வாழ கொடுத்து வைக்கல…” என்று மனைவியை பற்றி மனதுக்குள் நினைத்துக் கொண்டு தனது அறைக்கு சென்றார், கந்தசாமி.
அங்கே அவருக்கு தேவையான சகல வசதியையும் செய்து வைத்திருந்தாள் மரகதம். அவருக்காக கணவரிடம் போராடி வாங்கிய பிரத்யேக படுக்கை. நீட்டி மடக்கிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது. அருகே எளிதாக உட்கார்ந்து எழுந்திரிக்கும் அளவுக்கு சேர். கட்டில் அருகே விளக்கு, மின்விசிறிக்கு வேண்டிய சுவிட்போர்ட்டு. எல்லாமே தனது மருமகள் வேலையாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்திருந்தார், கந்தசாமி.
“எதுக்கும்மா இவ்வளவு ஏற்பாடு… நான்தான் இப்போ நல்லா குணமாயிட்டேனே..”
“இல்ல மாமா நீங்க எந்த கஷ்டமும் படக்கூடாது. உங்கள நல்லா கவனிக்கிறத தவிர வேறு எங்களுக்கு என்ன வேலை. நீங்க சம்பாதிச்ச பணம் உங்களுக்கு இந்த அளவுக்கு கூட பயன்படாவிட்டால் அந்த பணத்துக்கு என்ன மரியாதை…
என்னங்க… மாமாவுக்கு என்னென்ன கொடுக்கணும்ன்னு டாக்டர் லிஸ்ட் கொடுத்தாரா?”
“ஆமா மரகதம்… இந்த மாத்திகளை வேள தவறாம கொடுத்துடு.. சாப்பாட்டு அப்புறமா, முன்னாடியா என எல்லாத்தையும் டாக்டர் விவரமா எழுதி கொடுத்திருக்காரு… தவறாம கொடுத்துடு…”
“அது சரிங்க… சாப்பாடு விஷயத்துல என்னென்ன சொன்னாரு…”
“என்னடி வயசான காலத்துல சாப்பாடுல்ல என்ன கட்டுப்பாடு… எங்க அப்பா கேட்கிறத… அவங்க நாக்குக்கு ருசியானத செஞ்சு கொடு…”
என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான் செல்வகுமார்.
“அவனுக்கு எதுவுமே தெரியாதும்மா… சின்ன பிள்ளையிலேயே கண்டதையும் சாப்பிடுவான். காய்ச்சலுக்கு கூட அவன் கஞ்சி குடிச்சதை பார்த்ததே இல்லை. இந்த வயசான காலத்துல கண்டதையும் சாப்பிட முடியுமா? இவன் இப்படித்தான். அதனால நானே டாக்டர்கிட்ட என்னென்ன சாப்பிடலாம்ன்னு ஒரு லிஸ்டே வாங்கிகிட்டு வந்திருக்கேன்… அதுபடி எனக்கு கொடும்மா…” என்று கந்தசாமி டாக்டரிடம் எழுதி வாங்கிய பட்டியலை மருமகளிடம் கொடுத்தார்.
அதற்குள் கந்தசாமி வீடு வந்ததை அறிந்த அக்கம்பக்கத்தார்கள் நலம் விசாரிப்பதற்காக ஒவ்வொருவராக வந்துவிட்டனர்.
“அந்த காலத்து உடம்பு… அதனாலத்தான் இந்த வயசிலேயும் ஆபரேஷனை உடம்பு தாங்கிகிட்டு..” இது ஒருவர்.
“நீங்க எல்லாத்துக்கும் செய்ய உதவிதான் உங்க உசிர காப்பாத்தி இருக்கு..”
“உங்கள் மருமக புண்ணியம்தான் உங்கள இந்த வீட்டுக்கு மீண்டும் கொண்டு வந்திருக்கு…”
“ஐயா எனக்க நீங்க செய்த உதவியை மறக்க மாட்டேன். நீங்க நல்லா இருக்கணும். உங்களால இன்னும் எத்தனையோ பேரு வாழணும்.”
&இப்படி ஒவ்வொருவராக புகழ்ந்து கொண்டிருக்க… புகழில் மயங்கிய கந்தசாமி புன்னகையை பதிலாக தெரிவித்துக் கொண்டிருந்தார்.
மேலும் தனக்கு ஆஸ்பத்திரியில் செய்த சிகிச்சை.. ஆந்த ஆஸ்பத்திரியில் தனக்காக செய்த வசதிகள் எல்லாவற்றையும் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்.
வந்தவர்கள் அனைவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள் மரகதம்.
“மாமா நீங்க ரெஸ்ட் எடுங்க…”
மரகதம் நாசுக்காக சொன்னதை பக்கத்தில் இருந்த அனைவரும் புரிந்து கொண்டனர். “ஐயா நீங்க கொஞ்சம் படுத்து எந்திரியுங்க…” என்று கூறியபடி அனைவரும் விடை பெற்றனர்.
அவர்கள் போனதும் மாமனாரை பார்த்த மரகத்தின் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது.
“ஏம்மா அழுற… கவலைப்படாதே”
“இல்ல மாமா இது ஆனந்த கண்ணீர்…”
“எனக்கு ஒரு பொட்டப்பிள்ளை இல்லியேன்னு ரொம்ப நாளா கவலையா இருந்தது. செத்த அப்புறம் மேல விழுந்து பொட்டப்புள்ளத்தாம்மா அழும். ஆனா நீ வந்த பிறகு அந்த பொட்டப்புள்ள இல்லியேங்ற கவலை இல்லம்மா.. மகளுக்கு மகளாவும் மருமகளுக்கு மருகளாவும் இருக்கம்மா…”
“அதப்பத்தியெல்லாம் எதுக்கும்மா இப்ப பேசிறீங்க… நல்லதே பேசுங்க..”
“அதான் இப்போ நல்லதுதானே நடக்கு…”
“ஆமா மாமா… நீங்க ஆஸ்பத்திரியில இருந்தப்போ உங்க பேத்தி பெரிய மனுஷி ஆயிட்டா..”
“ஆமாம்மா பையன் எங்கிட்ட சொன்னான். எங்க அவளுடைய சடங்க பார்க்காம போயி சேர்ந்துடுவேனோன்னு நினைச்சேன். நல்லவேளை ஆண்டவன் புண்ணியத்துல புழைச்சி வந்துட்டேன்.”
“என்ன மாமா நீங்க உங்க பேத்தி கல்யாணத்தை பார்ப்பீங்க.. அவளுக்கு குழந்தை பிறக்கிறதையும் பார்க்கணும்…”
“அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்…”
“மாமா உங்க பேத்தி சடங்கை கூட நீங்க வந்தபிறகுதான் வைக்கணும்ன்னு உங்க மகன்கிட்ட கண்டிப்பா கூறிட்டேன்.. இனிமே ஜாம்ஜாம்ன்னு கொண்டாட வேண்டியதுதான்… மாமா எங்க தூரத்து சொந்த பந்தங்களையெல்லாம் கூப்பிடுவேன். தெரியாம நம்ம மேல கோபமா இருக்கிறவங்களை எல்லாம் அவங்க வீடு தேடி போய் அழைப்பேன்… நீங்க கோபப்படக்கூடாது.”
“நான் ஏனம்மான கோபப்படப்போறேன். எல்லாம் உன் இஷ்டம். உன்னை எதிர்த்து என் மகன்தான பேசப்போறானா என்ன?”
அன்றைய பொழுது இனிமையாய் இருந்தது கந்தசாமிக்கு.
மறுநாள் காலையில் புது உற்சாகத்தில் கண்விழித்தார் கந்தசாமி. முந்தைய நாள் இரவு கண்ட கவனை நினைத்து கந்தசாமி பூரித்துக் கொண்டிருந்தார். கனவில் வந்தது அவரது மனைவி. சற்று வாடிய முகம். அல்லது கணவரை நினைத்து பொறாமை கொண்ட முகம் என்று கூட சொல்லலாம்.
“ஏம்மா அவ்வளவு சீக்கரம் போய் சேர்ந்துட்ட. நீ உயிரோட இருந்திருந்தா நம்ம பேத்தி சடங்க பார்த்திருக்கலாம்… நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான்… சரி நீ அங்கேயே இருந்து பேத்திய நல்லபடியா வாழ்த்தணும் என்ன?” என்று கனவில் அவர் சொன்னது நினைவுக்கு வந்தது.
காலாட சற்று நடக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அது முடியாது. வாசல் படி வரை சென்று அமரலாம் என்று புறப்பட்டார்.
வெளியே வாசப்படி அருகே மகன் தோட்டத்து வேலைக்காரனுடன் பேசிக் கொண்டிருந்தான்.
“எப்பா எப்படியும் 10 கிடாவாது வேணும்..”
“சரி”
“நல்லதாப்பபாத்து வாங்கி தொழுவத்திலே கட்டிப்போடு”
“ஆட்டு வியாபாரிய பார்த்து உங்க பேரை சொல்லியே வாங்கி வந்துடறேன்.”
“கறி நல்லா இருக்கணும்”
“சரி இளம் குட்டி ஆடா பிடிச்சிடுவோம்”
“இல்ல.. இல்ல… குட்டி ஆட்டுக்கறி மிருதுவா இருக்கும். ஆனா ருசியா இருக்காது.”
“அப்படி பெரிய கிடாவா வாங்கிடவா..”
“பெரிய கிடாதான் வாங்கணும். ஆனா, வீட்டுல கட்டி வளர்க்கிற ஆடா பார்த்து வாங்கணும். அப்பத்தான் கறி மிருதுவாவும் கொஞ்சம் கொழுப்பு நிறைஞ்சியும் இருக்கும்.”
“சரி வீடு வீடா போய் வாங்கி சேர்த்துடறேன்.”
“ அதேபோல் சமையல் காரன்கிட்டயும் சொல்லி வை. வர்றவங்களுக்கு எந்த குறையும் வைக்க கூடாது. எல்லாரும் திருப்பதியா சாப்பிட்டுட்டு போகணும்..”
உள்ளே இருந்து கேட்ட கந்த சாமிக்கு மனம் துள்ளிக் குதிக்கணும்போல இருந்தது. கறி சாப்பிடக்கூடாது என்று டாக்டர் சொன்னாலும் அன்று மட்டும் கூட ரெண்டு மாத்திரைய சாப்பிட்டு கறிசோன்றை ஒரு வெட்டு வெட்டிடணும் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
வெளியே மகனின் உரையாடல் தொடர்ந்தது….
வேலைக்காரன் கேட்டான்.
“சமையல் காரனுக்கு அட்வான்ஸ் கொடுத்துடவா…”
“கொடுத்துடுப்பா.. சரி.. தோட்டத்துல அந்த வேலி ஓரம் புதரா கிடக்க இடத்தை சுத்தமாக்கி வை.. நல்லபடியாக கல்லறை கட்ட கொத்தனாருக்கும் அட்வான்ஸ் கொடுத்துடு..”
“சரி எத்தனை நாளைக்குள்ள கட்டி முடிக்க சொல்லணும்.”
“டாக்டர் ஒரு வாரம் கூட தாங்காதுன்னு சொல்லி இருக்காரு.. திடீன்னு உங்க அப்பாவுக்கு உயிர் போயிடும்ன்னு சொன்னாரு… பெரியவங்க ஆஸ்பத்திரியிலே உயிர் போக விரும்ப மாட்டாங்கன்னு வீட்டுக்கு கொண்டு போக சொல்லிட்டாரு.. சாகிற வரைக்கும் எந்த வலியும் உபாதையும் இல்லாம இருக்கறதுக்குத்தான் மாத்திரை எல்லாம் எழுதி கொடுத்திருக்காரு… ஆனால் இதையெல்லாம் எங்க அப்பாவுக்கு தெரியாது. அவரு சாகிற வரைக்கும் நிம்மதியா இருக்கணும்.”
“சரி.. சரி.. சீக்கிரம் வேலை பாரு…”
உள்ளே இதை கேட்டுக் கொண்டிருந்த கந்தசாமிக்கு தலையே சுற்றியது. ஒரு வாரம் தாங்குமா… தள்ளாடி தள்ளாடி தனது அறைக்குச் சென்று படுத்துக் கொண்டார். கவனில் வந்த மனைவி தன்னை அழைக்கத்தான் வந்தாளோ.. சிறிது நேரம் மனக்குழப்பத்தில் இருந்த அவருக்கு மனைவியிடம் சேரப்போவதை நினைத்து, அதற்கான நேரத்தை எண்ண ஆரம்பித்தார்.
ஆனாலும் ஒருவேளை தாத்தாவுக்கு கறி விருந்து கிடைக்க. காலம் அனுமதிக்கலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.