May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

எல்லாம் ஒரு கணக்கு / சிறுகதை / முத்துமணி

1 min read

Ellam oru kanakku / Short story by Muthu mani

வந்தவங்களல்லாம்” வாங்க வாங்க”ன்னு கையயெடுத்துக் கும்பிட்டு வரவேற்று,”சாப்பிட போங்க” கண்ணனும் கமலாவும் அன்போடு வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். புது அனுபவம்தான். அருகில் ஐந்து வயது மகள். அவளுக்கு ரொம்ப சந்தோஷம் புது வீடு கட்டியதில். அவளுடைய பள்ளித் தோழிகள் கூட சிலர் வந்திருக்கிறார்கள்.

“யானை அசைந்து இழுக்கும் வீடு அசையாமல் இழுக்கும்”ன்னு சும்மாவா சொன்னாங்க?. எவ்வளவு சிக்கனமாப் பார்த்துப் பார்த்துச் செலவழிச்சாலும் 28 லட்சம் வந்திருச்ச. “வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தைப் பண்ணிப் பாருன்னு சொல்லுவாங்க”. எப்படியோ கஷ்டப்பட்டு வீட்டைக் கட்டிட்டோம். கொஞ்சம் கஷ்டம்தான். லோன் அடைக்கிற வரைக்கும் கொஞ்சம் சிக்கனமா இருக்கணும்.”

“சரி. இப்போ வந்தவங்களைக் கவனி. எல்லாரும் சாப்பிட்டீங்களா? ன்னு கேளு. இந்த உன் தங்கச்சிய காணோம். பந்தி நடக்குற இடத்தில் யாராவது நிக்கணும்.அவளப் போகச் சொல்லு.சாப்பிட யாரும் கூப்பிடலாம்னு நாளைக்குக் குறை சொல்லுவான் “.

“யோவ். வாழ்த்துக்கள் வீடு சூப்பரா இருக்கு” சாப்பிட்டு முதல் ஆளாய் வந்து, பன்னீர்செல்வம் சொன்னான்.
“ரொம்ப சந்தோசம். சாப்பிட்டியா? வீட்ல வரலையா?”.
” அவ இன்னொரு கல்யாண வீட்டுக்குப் போயிருக்கா. இன்னைக்கு ஹெவியான முகூர்த்தம்”. பன்னீர்செல்வம் கவரைக் கொடுத்தான்.
லாபம் ஒண்ணு மனதுக்குள் நினைத்துக் கொண்டு கண்ணன் அதை வாங்கிப் பாக்கெட்டுக்குள் திணித்தான். இதுதான் முதல் வரவு. இந்த மாதிரி நல்ல காரியங்களுக்குச் செய்கிற மொய் எல்லாம் ஒரு வகை கடன் மாதிரிதானே. இப்போது எல்லாரும் கொடுப்பார்கள். அவன் வீட்டுல விசேஷம் வரும்போது பதிலுக்கு நாம செய்யணும்.
அடுத்து வரிசையாக் கூட்டம் கூட்டமாச் சாப்பிட்டு சாப்பிட்டு வர “வீட்டைப்பார்த்தீர்களா? எப்படி இருக்கு?” என்று கேள்வி கேட்க, சில பேர் கேட்காமலேயே பாராட்டி விட்டுச் செல்ல பாத்திரங்கள, பார்சல் எல்லாவற்றையும் வாங்கி வாங்கி ஆவலோடு அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
சில பேர் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“கொத்தனாரா காண்ட்ராக்ட்டா? சில பேர் கேள்வி.
“கொத்தனார் வச்சு பார்க்க முடியாதுன்னு என்ஜினியர் காண்ட்ராக்ட் விட்டுட்டேன்”.

“பரவாயில்ல, நல்லாப் பண்ணிருக்கான் “சதுர அடிக்கு எவ்வளவு கேட்டான்? இது போன்ற கேள்விகள் பதில்கள்.
“சார் பெயிண்டிங் சூப்பர்.கலர் உங்க செலக்சனா?”.
“அதெல்லாம் இவள் செலக்சன்.”

“ஏ! மீனுக்குட்டி . உங்க புது வீடு சூப்பர். ரொம்ப நல்லா இருக்கு. உன் புது டிரஸ் சூப்பர். உன் பேரு தான் வீட்டுக்கு வச்சிருக்கா? மீனா பவன்” பிள்ளையைக் கன்னத்தில் கிள்ளிட்டு ச்செல்லும் சொந்தக்காரி.

“நல்லவேளை ஒரே நேரச் சாப்பாடு மட்டும் போட்டு, நல்லா கிராண்டா பண்ணிட்டீங்க. காலையில் டிபன் போட்டு, மதியம் சாப்பாடு போட்டு, அது எல்லாம் கஷ்டம் இந்தக் காலத்தில் யாரும் ஆற அமர உட்கார்ந்துட்டு போறதில்லை. இதுதான் சரி”. இது ஒரு ஒரு பாராட்டு.

 "சமையல் யாரு? உள்ளூரா? வெளியூரா?. "நல்லா இருந்ததா?' "ரொம்ப நல்லாப் பண்ணி இருக்கான். அதுலயும் அந்தப் பாயசம் ரொம்ப ஸ்பெஷல்". 

“இருங்க .வீட்டில் அக்கா வந்திருக்காங்களா? அப்படியே ஒரு போட்டோ எடுத்துக்கலாம் வாங்க வாங்க”.
விடைபெற்றுச் செல்லும்போது எல்லோருக்கும் தாம்பூலக் கவர் மறக்காது, கொடுப்பதற்கு ஆள் வைத்திருந்தார்கள். அதிகம் பேரை அழைக்கவில்லை. சுருக்கமாச் செய்ய வேண்டும் என்பதற்காக. ஆனாலும் கண்ணனின் பேண்ட் பாக்கெட், சட்டை பாக்கெட் எல்லாம் நிறைந்துவிட்டது .அதுபோக கமலா கையிலும் சிலர் கொடுத்துவிட்டுப் போனார்கள்.
கமலாவின் தம்பிதான் வாசலில் டேபிள் சேர் போட்டு ஒரு நோட்டும் போட்டு மொய் வசூல் செய்து கொண்டிருந்தான்.

கூட வேலை பாக்குற “கோபால் சொன்னார்.” இது மாதிரி வீடு பால் காய்ச்சுவதற்கு வரக்கூடிய மொய் பணம், எதையும் ஈடு கட்டாது. நீங்க போடுற சாப்பாடு செலவு ,மற்ற செலவுகளுக்குச் சரியா போயிடும்”
மதியம் சாப்பாடு முடிஞ்சு எல்லாரும் இடத்தைக் காலி பண்ணிட்டு போறதுக்கு மூணு மணிக்கு மேல ஆயிடுச்சு. குடும்பத்து ஆட்கள் மட்டும் சாவகாசமாக உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். “உடம்பெல்லாம் ஒரே வலி”.
“எனக்கும்தான் கை கால்ல்லாம் வலிக்குதுங்க .ஓடியாடி வேலை செஞ்சாச்சு”. “எப்படியோ வீட்டைக் கட்டியாச்சு. பால் காச்சாச்சு. யாரும் எந்த குறையும் சொல்லக்கூடாது. வந்தவங்க எல்லாம் சாப்பிட்டாங்களா?”
“மூணு பந்தி நடந்தது. எல்லாரும் நல்லாச் சாப்பிட்டாங்க. மிச்ச மீதிதான் கிடந்தது. கவலைப்படாதீங்க.” என்று கமலாவின் தங்கை கணவர் கூறினார்.

“நம்ம வீட்டு ஆட்களுக்கு நைட் சாப்பிடுவதற்கு ஒன்னும் கஷ்டப்பட வேண்டாம். மதிய உள்ள சாப்பாடு நிறைய இருக்கு. அதையே வச்சுச்ச் சமாளிச்சுக்கலாம்”.
“ஓஹோ அப்படியா? பரவாயில்லை. நான் எல்லாம் மதியம் கூட சாப்பிடவே இல்லை .டென்ஷன் பசியே தெரியவில்லை”.

“அக்கா அந்த சின்ன ரூமில் பரிசாக வந்த பாத்திர பண்டங்கள், பார்சல் எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்கேன்” என்றாள் மாலதி.
“அத்தான், இந்தாங்க நோட்டு. இந்தாங்கபை, எல்லாம் விவரமா எழுதிருக்கேன். பையில் பணம் இருக்கு” . ஒப்படைத்துட்டு அவன் படுக்கப் போயிட்டான்.
அதுக்குள்ளே மணி ஏழு ஆயிடுச்சு “கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்ட்டு படுத்துத் தூங்குவோம் வெளிய லைட் போடுங்க. ஆஃப் பண்ணக்கூடாது”. ரெண்டு பேரும் ஆர்வத்தோடு அந்த அறைக்குள் சென்று எல்லாக் கவர்களையும் கீழே கொட்டி நோட்டை எடுத்து வைத்துக்கொண்டு,” நான் பிரிச்சுப் பிரிச்சுப் பார்த்துச் சொல்றேன். நீ பேரோட எழுதி வையி”. அதே நோட்டை தலைகீழாக வைத்துக் கொண்டு பிள்ளையார் சுழி போட்டுக்கொண்டு தயாரானாள்.
சின்னக் குட்டி வந்திருந்த பார்சல்களை அவிழ்த்து பார்ப்பதில் ஆர்வம் காட்டினா. “பொறுடா.பிரிச்சிடாத, பிறகு பெயர் தெரியாமல் போய்விடும் கொஞ்சம் பொறு. அம்மா வந்துடறேன். பார்க்கலாம்.”

"உன் தம்பி புதுசா, டபுள் டோர் பிரிட்ஜ் வாங்கி கொடுத்துட்டான். உன் தங்கச்சி பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் வாங்கி கொடுத்திட்டா". 

முதல் கவரைப் பிரித்துப் பார்த்தான். “கருத்தபாண்டி எழுதிக்கோ. எங்க பெரியப்பா மகன். நூறு ரூபா கஞ்சப் பய.”.” அடுத்தது வாழ்க வளமுடன் முருகேசன்”. யாரு அவரா?. 200 ரூபா.

“அடுத்து பேச்சிமுத்து .உனக்குத் தெரியாது யாருன்னு?. இவர் வர மாட்டா ருன்னு நினைத்தேன். 201 வச்சிருக்காரு..
பத்மான்னு ஒரு கவர்’ யாரடிஅவ பத்மா?”
“அவ என் பிரெண்ட்”
“500ரூபா இருக்குடி.” கமலா சிரித்துக் கொண்டாள்.
“இது எதிர்த்த வீட்டுக் கவர்.பரவாயில்லை 300 ரூபா வச்சிருக்கான்”.
“இது என் கூட வேலை பாக்குற ராமசாமி.. அவன் வரலையே. கூட்டத்தில் பார்த்த ஞாபகம் இல்லை. யாரிடமாவது கொடுத்து விட்டுருப்பான். எழுதிக்கோ 500 ரூபாய்”.
“இது என்ன கவர் பெருசா இருக்கு?. “ஓ. நம்ம பழைய வீட்டு பக்கத்துல….சொக்கலிங்கம்.”
“அவரா சரியான கஞ்சாம்பட்டி ஆச்சேஅந்தக் கணக்கு வாத்தியாரு?”.
“ஆமா அவன்தான்.பெரிய கவருக்குள்ள 100 ரூபாயை வச்சிருப்பான். அதைத் தூக்கி ஓரமா வையி. கடைசியாப் பார்க்கலாம் .இப்பப் பாத்தா எரிச்சல் தான் வரும் .குடும்பத்தோட நாலு பேர் வந்து மூக்குப் பிடிக்கத் தின்னுட்டுப் போயிட்டான். பொறாமை பிடிச்ச பைய போகும்போது வீட்டை ஒரு மாதிரியா சுத்திச் சுத்தி பார்த்தான். அவன் பார்த்த பார்வையிலே ஏதாவது சுவத்தில கீறல் விழுந்தாலும் விழுந்துரும். சூடம் சுத்திப் போடணும் அவ்வளவு நல்ல மனசு அவனுக்கு”
“மணிகண்டன்”. “எங்க மாமா. பிரிச்சுப் பாருங்க சீக்கிரமா. நிறைய வச்சிருப்பாங்க”. “ஏண்டி அம்பது ரூபா உங்க ஊர்ல நிறையவா?”.
” இது யாரு உங்க தங்கச்சி. பாருங்க.”.
“500 ருபாடி.அவா படுற பாட்டுல இதுவே அதிகம்.”
எல்லாத்தையும் பிரிச்சிப் பார்த்து எழுதி டோட்டல் சரிபார்க்க மணி இரண்டு ஆயிடுச்சு.
“அவன் சொன்னது சரிதான். இன்னைக்கு ஆன செலவு தான் வசூலாகிருக்கு. எக்ஸ்ட்ரா எதும் கிடையாது .சரியா? தூக்கம் வருது போய் படு”.
“ஏங்க அந்தச் சொக்கலிங்கம் கொடுத்த, பெரிய கவர பிரிக்கவில்லையே.”
“அதை எப்படி ஒட்டி இருக்கான் பாரு”. எடுத்து பிரித்தாள். ஒரே நோட்டு 2000 ரூபா.
” நல்லா பாருடி . அவன் சும்மாத் தின்னுட்டுப் போறவன். இது வேற யாராவது இருக்கும்”.
“அவரேதான். இன்சியல் எல்லாம் சரியா இருக்கு “..
” நான்தான் தப்புக் கணக்கு போட்டுருக்கேன். ச்சே… ஆளுதான் எதையாவது குண்டக்க மண்டக்க பேசுவான். நல்ல மனசு தான் அவனுக்கு. வசதி இருக்கு ஆனா கை விலங்கி ச் செலவழிக்க மாட்டான்னு நெனச்சேன். என் மேல கொஞ்சம் பிரியம் தான் வச்சிருக்கான். நான்தான் புரிஞ்சுக்கல. அவன ரொம்ப திட்டிட்டேன். இதுவரைக்கும் யாருக்கும் .2000 ரூபா மொய் எழுதியிஇருக்க மாட்டான். அவனப் போயி நான் பாட்டுக்கு பேசிட்டேன்”.
“போன வருஷம் அவர் வீடு கட்டும் போது கூட நான் நூறு ரூபா தான் செஞ்சேன்.”

” சரி சரி இருக்கட்டும் அவர் வீட்டில் நல்ல காரியம் நடக்கும். அப்ப நாமும் நல்லா செஞ்சிடலாம். இப்ப பேசாம தூங்குங்க”
கட்டிலில் படுத்துக்கொண்டு மேலே ஓடுகிற புது ஃபேன். பால்ஸ் சீலிங் சூப்பரா போட்டிருக்கான். சந்தோசத்தில் தூக்கம் கூட வரல புதிய கனவு முடிச்சாச்சு. கார் செட் ஓடு சேர்த்துக் கட்டியாச்சு. அடுத்து கொஞ்சம் சிக்கனமாக இருந்தா காரும் வாங்கிடலாம்.

  காலையில் எந்திரிக்கவே பத்து மணிக்கு மேல ஆயிடுச்சு. கொஞ்சநஞ்சம் இருந்த சொந்தக்காரர்களும் ஊருக்குப் போய்ட்டாங்க. செல்போனை எடுத்துப் பார்த்தான் கண்ணன். ரெண்டு மூணு மிஸ்டுகால் ஒரே நம்பரிலிருந்து. யாராவது நேத்து வர முடியாதவங்க போன் பண்ணி இருப்பாங்க என்று நினைத்துக்கொண்டே அதே நம்பருக்கு போன் பண்ணி," ஹலோ" என்றான். 

“யோவ் நான்தான் சொக்கலிங்கம்”.
“வேற நம்பரா இருக்கு?”.
“ஆமா இது ஜியோ நம்பர்”.
“ரொம்ப சந்தோசம் நேத்து குடும்பத்தோடு வந்ததுக்கு”.

“ரெண்டு மூணு தடவ போன் பண்ணி இருக்க நான் சைலன்ட்ல போட்டு ரெஸ்ட் எடுத்துட்டு’ சாரி. என்ன விஷயம்?.”

“ஒண்ணுமில்ல வீட்டுக்குப் புது பிரிட்ஜ் உன் மச்சினன் வாங்கிக் கொடுத்திட்டான்னு சொன்ன.ஏற்கனவே பயன்படுத்திக் கிட்டிருந்த பழைய ஃப்ரிட்ஜ் ,வாஷிங் மெஷின் எல்லாம் என்ன பண்ண போற?”. “வாஷிங்மெஷின் ஏற்கனவே ரிப்பேர். பிரிட்ஜ் நல்லவ்ஓடிட்டுத் தான் இருக்கு ஆனா. வாங்கி பத்து வருஷமாச்சு. வாடகை வீட்டில் நல்லாப் பயன்படுத்தியாச்சு. அதை யாருக்காவது விலைக்குக் கொடுத்துட வேண்டியது..” “என்ன விலைக்குக் கொடுக்கப் போற?. அத நான் வாங்கிக்கிறேன்.”
“நீயா? நீ பணக்காரன் பழச வாங்கி என்ன செய்யப் போற?”.
“இல்ல எங்க வீட்டு வேலைக்காரி ஒண்ணு வேணும்ன்னு ரொம்ப நாளா கேட்டுட்டே இருக்கா. என்ன வில சொல்ற?.”
“என்ன ஒரு 3000 இருந்தால் கொடுத்திடலாம்”.
” யோ மூவாயிரத்துக்குப் போகாது. 2500 ரூபாய் கொடுக்கிறேன். கடைக்குப் போனா ஆயிரம் ரூபாய் தான் கொடுப்பான். வேணும்னா சொல்லு நாளைக்குத் தூக்கிட்டுப் போயிடறேன்”.
“சரி பரவாயில்லை. நமக்குள்ள என்ன இருக்கு ?வியாபாரமா? சும்மாதானே. நாளைக்கு வந்து எடுத்துட்டு போரும்”.
சாயங்காலம் நாலு மணிக்கு வண்டியோடு வந்து விட்டான் சொக்கலிங்கம்.வந்தவனுக்கு ஒரு டீ போட்டுக் கொடுத்துட்டு மறுபடியும் ஒரு சுத்து வந்து வீட்டைப் பார்த்துட்டு. பழைய ஃப்ரிட்ஜை, வண்டியில் ஏற்றிட்டு. இந்தாரும் என்று கையில் கொடுத்தான். வாங்கிப் பாக்கெட்டில் வைக்க ப் போனேன். “யோவ் யார் பணம் கொடுத்தாலும் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வைக்கணும்”. பார்த்தேன். 700 ரூபாய் மட்டும் இருந்தது. நான் கேட்காமல் அவனே சொன்னான். “நேத்து சட்டை பாக்கெட்டுக்குள்ள உமக்கு மொய் செய்ய 200 ரூபா நோட்டு வச்சிருந்தேன். அதோட சேத்து 2000 நோட்டு ஒண்ணும் வச்சிருந்தேன்.பந்தியில் உட்கார்ந்து சாப்பிடும் போதுதான் பக்கத்துல இருந்த ஒருத்தனனிடம், ஒரு கவரை வாங்கி ரூபாய் கொடுத்து வைக்கச் சொன்னேன். வச்சிட்டு இரண்டு சோத்துப் பருக்கையை வச்சு ஒட்டி உன்னிடம் கொடுத்துட்டேன்.வீட்ல போய்தான் .பார்த்தேன் 200 ரூபாய்க்கு பதில் 2000 நோட்ட தவறுதலா உள்ள வச்சுட்டேன். பரவாயில்ல. அதுல 200 போக ஒரு 1800 . இதுல ஒரு 700 . மொத்தம் 2500 ரூபா சரியாப் போச்சு. வரட்டுமா. யோவ் வண்டிய எடு.எல்லாம் ஒரு கணக்குத்தானே.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.