April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

அமுதாவின் ஆசைகள்-9/ நாடகம்/ கடையம் பாலன்

1 min read

Amuthavin Aasaikal-9/ Drama by Kadayam Balan

காட்சி 9

இடம்-அசோக்குமார் வீடு

பங்கேற்பவர்கள்- அசோக்குமார், அமுதா, பவித்ரா, ஆனந்த்

———==============

அசோக்குமார்: என்ன அமுதா இன்னிக்கு பவித்ரா செமஸ்டர் லீவுல இன்னிக்கு வர்றதா சொன்னாளே. இன்னும் காணலியே.

அமுதா: ஆமாங்க. அவளத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கேன். அவளுக்காக டிபன் எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன்.

அசோக்குமார்: நான் கொஞ்சம் அவசரமா வெளியே போகணும். பஸ் ஸ்டாண்டில போய் கூட்டிக்கிட்டு வரணுமா?

அமுதா: இல்லைங்க இப்ப வந்திருவேன்னு போன்ல சொன்னா. அதோ அவளே வந்துட்டாள்.

(பவித்ரா தோள் பையுடன் வருகிறாள்)

அமுதா: வா பவித்ரா உன்னைத்தான் அத்தான் கேட்டுக் கொண்டிருந்தாங்க.

அசோக்குமார்: பவித்ரா படிப்பெல்லாம் எப்படி இருக்கு? பரீட்சை எல்லாம் எப்படி எழுதின?

பவித்ரா: நல்லா எழுதி இருக்கேன் அத்தான்.

அமுதா: வாசல்பக்கம் யாரோ நிற்கிறாங்களே! அது யாரு?

பவித்ரா: ஓ… ஆனந்த் வாங்க… உள்ளே வாங்க….

(ஆனந்த் வருகிறான்)

பவித்ரா: அக்கா இவரு எனக்கு தெரிஞ்சவரு, தனியா வந்தேனா… எனக்கு ஹெல்ப்புக்காக வந்தாரு.

அமுதா: தம்பி வாங்க. உங்க பேரு ஆனந்தா? நல்லா இருக்கீங்களா? என் தங்கச்சிக்கு உதவி செஞ்சதுக்கு நன்றி.

அசோக்குமார்: பவித்ரா… வழக்கமா தனியாத்தானே வருவே. இன்னிக்கு மட்டும் உனக்கு ஹெல்ப் பண்ண இவரை கூட்டிக்கிட்டு வந்திருக்கியே. ஏம்மா.

பவித்ரா: இல்ல அத்தான். நேத்திக்கு நான் பஸ்சுக்கு காத்திருந்தேனா. அப்போ நாலைந்து பசங்க என்னை சுற்றி நின்னுக்கிட்டு, கிண்டலும் கேலியும் செய்தாங்க. அதனாலத்தான் இவரை துணைக்கு அழைச்சிட்டு வந்தேன்.

அசோக்குமார்:  தம்பி உனக்கு எந்த ஊருப்பா?

பவித்ரா: கோயம்புத்தூர்…

அசோக்குமார்: நான் அவன்கிட்ட கேட்கிறேம்மா… தம்பி இவக்கூட படிக்கிறீயா? உங்க அப்பா பேரு என்ன?

பவித்ரா: அத்தான் இவங்க அப்பா கோபாலகிஷ்ணன். பெரிய பிஸ்னஸ் மேன். இவரு  அவங்க அப்பாவுக்கு ஹெல்ப்பா இருக்காரு.

அசோக்குமார்: என்ன பவித்ரா நான் அங்கிட்ட கேட்கிற கேள்விக்கெல்லாம் நீ பதில் சொல்ற…

பவித்ரா: சாரி அத்தான் அவரு கொஞ்சம் கூச்ச சுபாவம்.

அசோக்குமார்: ஆமா ஆமா கூச்ச சுபாவம்தான். பார்த்தாலே தெரியுது. அதான் ஒரு பொம்பளக்கு துணையா அவ பின்னாடி வந்திருக்காரு.

ஆனந்த்: இல்ல சார்.. பவித்ராதான் பயமாக இருக்கு என்கூட வீடு வரைக்கும் கொண்டு வந்து விடுங்கன்னு சொன்னா.

அசோக்குமார்: பவித்ரா… இவரு உன்னோட படிக்கல. பிறகு எப்படி உனக்கு பழக்கம். 

அமுதா: என்னங்க உதவி செஞ்சிருக்காரு. அதுக்குப்போய் இப்படி சந்தேகப்பட்ட கேள்வி மேல கேள்வி கேட்கிறீங்களே..

அசோக்குமார்: இப்படி கேள்வி மேல கேள்வி கேட்காமத்தான் எத்தனையோ பெத்தங்க தலைகுனியும் நிலைக்கு ஆளாய் இருக்காங்க.

அமுதா: என் தங்கச்சி அப்படி ஒண்ணும் மோசமானவ கிடையாது. அவள சந்தேகப்படாதீங்க.

அசோக்குமார்: அமுதா நான் சதேகப்படலியே.. யாரும் சந்தேகப்படற மாதிரி நடந்துக்க கூடாது.

அமுதா: அதுக்காக வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படியா கேட்கிறது. கொஞ்சமாவது டீசண்டா நடந்துக்க தெரியுதா? அன்னிக்கு என்னடான்னா ராஜேஷ் உதவி செய்யறதாக சொன்னாரு. அதுவும் நம்ம நன்மைக்காக சொன்னாரு. அவரை பரதேசி பய, வில்லங்கம் அப்படி இப்படின்னு திட்டறீங்க.. யாரையும் நம்பாம தனி ஆளா நில்லுங்க..

அசோக்குமார்: இதோ பாரு நான் சொல்றத சொல்லிட்டேன். இனிமே இங்கே நின்னா என்னை வில்லனாவே ஆக்கிடுவ.

(அசோக்குமார் போகிறான்)

பவித்ரா: என்ன அக்கா நம்ம அத்தான் நல்லவருன்னு நினைச்சேன். இப்படி இருக்கிறாரு?

அமுதா: அவரு கிடக்கிறாரு. தராதரம் தெரியாத மனுஷன். தம்பி நீங்க பெரிய பணக்காரங்களா?

ஆனந்த்: நாங்க அப்படி ஒண்ணும் பணக்காரங்க இல்லை. கவர்ன்மெண்டுக்கு 100 கோடி அளவுக்கு சொத்தை கணக்கு காட்டியிருக்கோம். கணக்கில காட்டாத   சொத்தைபற்றி எங்க அப்பா எங்கக்கிட்டக்கூட சொன்னது கிடையாது.

அமுதா: ஏ அப்பா இவ்வளவு சொத்த வச்சிக்கிட்டு பணக்காரன் இல்லைன்னு சொல்றீங்களே தம்பி.

ஆனந்த்: எங்க அப்பா டாடா பிர்லாவை கணக்கில வச்சி நாம  ஏழைங்கன்னு சொல்வாங்க. எப்படியாவது இந்தியாவுல உள்ள பணக்காரங்கள் வரிசையிலல பத்துக்குள்ள வரணும்ன்னு ஆசைப்டறாங்க. அதுக்காகத்தான் கடுமையாக உழைக்கிறாங்க. நானும் அவங்களுக்கு உதவியா இருக்கேன்.

அமுதா: தம்பி நீங்க சாப்பிட்டுத்தான் போகணும். இருங்க ஐந்து நிமிஷத்தில சமைச்சிடுதேன். நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க.( உள்ளே செல்கிறாள்.)

பவித்ரா: ஆனந்த் எங்க அத்தான் கேட்டதை தப்பா நினைச்சுக்காதீங்க. அவருக்காக நான் உங்கக்கிட்ட  சாரி சொல்றேன்.

ஆனந்த்: நோ நோ இதுக்கெல்லாம் எதுக்கு சாரி. உங்க அக்காள் என்னை நம்புறாங்களே அதுவே போதும். உண்மையிலே உங்க அக்கா கிரேட்.

பவித்ரா: பொதுவா எங்க அத்தான்தான் எனக்கு சப்போட்டா இருப்பாரு. ஆனா இன்னிக்கு ஏதோ மூடுல இருக்காரு. உங்க நிலைமை தெரிஞ்சிக்கிட்டா அவரும் எதிர்க்க மாட்டாரு.

ஆனந்த்: என்ன பவித்ரா… பணத்துக்காகத்தான் நீயும் என்னை விரும்பறீயா?

பவித்ரா: உங்க முகத்தையே பார்க்காம காதலிச்சேனே.. உங்க பணத்துக்கவா ஆசைப்படுவேன்.

ஆனந்த்: சரி பவித்ரா நேரம் ஆயிடுச்சு. நான் கிளம்பறேன்.

பவித்ரா: நில்லுங்க எங்க அக்கா சமைச்சிட்டாங்க… சாப்பிட்டுட்டு போங்க.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.