அமுதாவின் ஆசைகள்-10/ நாடகம்/ கடையம் பாலன்
1 min readAmuthavin Aasaikal-10/ Drama By Kadayam Balan
காட்சி 10
இடம்- சாலையோரம்
பங்கேற்பவர்கள்- கைசூப்பி கைலாசம், கருப்பன், முனியன்
====================
கருப்பன்: அண்ணே கைலாசம் அண்ணே.
கைசூப்பி கைலாசம்: என்னல கருப்பா… கிண்டலா?
கருப்பன்: அன்னிக்கு அடிச்ச அடி மறக்கல… அதனாலத்தான் மரியாதையா கூப்பிடறேன்.
கைசூப்பி கைலாசம்: அதுக்கு கிண்டல் பண்ணுற மாதிரில்லா இருக்கு. வழக்கமாக கூப்பிடமாதிரி கைலாசம்ன்னே கூப்பிடு.
கருப்பன்: சரி… கை…
கைலாசம்: என்னல சொன்ன… ( கருப்பனை அடி உதைக்கிறான்).
முனியன்: ஏய்… அடிக்காதே.. அடிக்காதே…
(சண்டையை விலக்கி விடுகிறான்)
என்ன கைலாசம்… கருப்பனைப்போய் இப்படி அடிக்கிறீயே… பாவம் டா….
கைசூப்பி கைலாசம்: அண்ணே என்னை கைசூப்பின்னு சொல்றான்.
முனியன்: அன்னிக்குத்தான் இவங்கிட்ட வாங்கி கட்டினியே… இப்பவும் ஏண்டா கைசூப்பி கைசூப்பின்னு சொல்றே.
கருப்பன்: நான் கைசூப்பின்னு சொல்லல்ல.
கைசூப்பி கைலாசம்: நீ சொல்லன்னு சொல்லு.
கருப்பன்: நான் கைசூப்பின்னு சொல்லவே இல்லை.
கைசூப்பி கைலாசம்: நீ என்னை கைசூப்பின்னுதான் சொன்னே.
கருப்பன்: நான் உண்மையத்தான் சொல்றேன். உன்னை கைசூப்பின்னு சொல்லவே இல்லை.
கைசூப்பி கைலாசம்: சொன்னே.(அடிக்க முயலுகிறான்.)
முனியன்: ஏலே கருப்பா… நீ கைசூப்பின்னு சொன்னியா… இல்லியா….
கருப்பன்: அவன் கைமேலே சத்தியமா நான் சொல்லவே இல்லை.
கைசூப்பி கைலாசம்: பாத்திங்களா அண்ணே… இப்பவும் என் கைமேல சத்தியம்ன்னு சொல்றான்.
கருப்பன்: அண்ணே நம்ம கைலாசம் கையில அட்டை கடிச்சிக்கிட்டு இருக்குன்னு சொன்னேன்.
கைசூப்பி கைலாசம்: அடப்பாவி அதை ஏன் அப்பவே சொல்லல.
கருப்பன்: நான் கைன்னு சொல்றதுக்குள்ள என்னை அடி அடின்னு அடிச்சிட்டியே.
கைசூப்பி கைலாசம்: ஆ வலிக்குதே… என்ன செய்ய.
முனியன்: போய் கொதிக்க வசச்ச தண்ணிய அதுல விடு. அட்டை பூச்சி செத்துடும். ஆமா… அட்டை எங்க வச்சி கடிச்சுது.
கைசூப்பி கைலாசம்: அய்யோ வலிக்குதே… நம்ம ஆளு விமலா இருக்கால்ல.. அய்யோ வலிக்குதே… அவா மரத்துல ஏறி முருக்கக்கா பறிக்கச் சொன்னா. அப்பத்தான் இந்த அட்டை பூச்சி கடிச்சிருக்கணும். அய்யோ வலிக்குதே..
முனியன்: இந்த வலிக்கு ஒரு கைகண்ட மருந்து இருக்கு.. செய்றீயா?
கைசூப்பி கைலாம்: சரி சொல்லுங்க அண்ணே. ஆ வலிக்குதே.
முனியன்: உன்னோட கை விரலை எடுத்து வாயில வை. வலிக்காது.
கைசூப்பி கைலாசம்: அண்ணே கிண்டல் பண்ணாதே.. ஆ… வலிக்குதே.
முனியன்: கிண்டல் இல்ல-. வாயில வச்சிப்பாரேன்.
கைசூப்பி கைலாசம்: (கை சூப்புகிறான்) ஆமா வலியே இல்லை.
கருப்பன்: அதோ விமலா போறாளே.
கைசூப்பி கைலாசம்: அய்யோ கையையும் எடுக்க முடியல… விமலாவையும் பார்க்க வேணுமே என்ன செய்ய… நான் வர்றேன்.(போகிறான்)
கருப்பன்: அண்ணே நான் கைன்னுதான் சொன்னேன். ஆனா நீங்க கைசூப்பி, கைசூப்பின்னு சொல்ல வைச்சிட்டிங்க.
முனியன்: அதுதாண்டா அய்யா திறமை.
கருப்பன்: அண்ணே அவனையே நான்தான் கைசூப்பின்னு சொல்ல வைக்கணும். அதாவது அவனே அவன கைசூப்பின்னு சொல்லணும். அது உங்களால முடியுமா?
முனியன்: முடியும். பந்தயம் 500 ரூபாய்.
கருப்பன்: சரி.. ஆனா அவனே நான்தான் கைசூப்பின்னு சொல்லணும்.
முனியன்: சரி.