தூதரக பெண் அதிகாரி சென்னைக்கு தப்பி ஓட்டம்
1 min read
சொப்னா சுரேஷ்
₹13.5 கோடி தங்கம் கடத்தலில் தொடர்பு-தூதரக பெண் அதிகாரி சென்னைக்கு தப்பி ஓட்டம்
Embassy woman escapes to Chennai8.7.2020
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. இது தொடர்பாக புகார் எழுந்தது. இதையடுத்து மத்திய அரசின் அனுமதி பெற்று சுங்க லாகா அதிகாரிகள் பார்சலை பிரித்தனர். அதில் ₹13.5 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்த சரித்குமார் கைதானார். அவரிடம் நடந்த விசாரணையில், தூதரக நிர்வாக செயலாளராக பணியாற்றிய சொப்னா சுரேஷுக்கு கடத்தலில் பங்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே சொப்னா சுரேஷ் வீட்டுக்கு கேரள முதல்வரின் முதன்மை செயலாளர் சிவசங்கரன் அடிக்கடிசென்று வந்துள்ளார்.
ஆகவே இருவருக்கும் நெருங்கிய நட்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து நேற்று அதிரடியாக சிவசங்கரன் முதன்மை ெசயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் ஓராண்டு விடுமுறையில் சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் தேடப்படும் சொப்னா சுரேஷ் தலைமறைவாகி விட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
அவரை சுங்க லாகாவினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இவருக்கு சந்தீப்நாயர் என்பவர் நெருக்கமாக இருந்தது தெரியவந்துள்ளது. சந்திப் நாயரும், சொப்னாவும் சேர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிராவல்ஸ் ஏஜென்சி தொடங்கினர். அந்த நிறுவனத்தை கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். சந்தீப்நாயருக்கும் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று சுங்க லாகாவினர் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றபோது அவரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அங்கிருந்த அவரது மனைவியை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க சொப்னா சுரேஷ் ஒருவருக்கு தொலைபேசியில் பேசியதை சுங்க லாகாவினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த அழைப்பு சென்னையில் இருந்து வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் சென்னைக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது. அவரை கைது செய்ய சென்னை போலீஸ் உதவியை நாடவும் சுங்க லாகாவினர் முடிவு செய்துள்ளனர். கடத்தல் தங்கம் கடந்த 27ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சிக்கியது. இது குறித்து ஒரு நாள் முன்பே சொப்னா சுரேசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் அவர் முந்தைய நாளே திருவனந்தபுரத்தில் இருந்து தலைமறைவாகி விட்டார்.
இதற்கிடையே அவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்குள் அவரை கைது செய்ய சுங்க லாகாவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தங்கம் கடத்தில் விவகாரத்தில் சிக்கியுள்ள கேரளாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கர் முதல்வர் பினராயி விஜயனுக்கு மிகவும் நெருக்கமானவர். தங்கம் கடத்தல் விவகாரம் முதல்வர் அலுவலகத்துக்கும் கடும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதால் வேறு வழியின்றி சிவசங்கரை முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக மாற்றி உள்ளார். மேலும் அவரை ஓராண்டு விடுப்பில் செல்லும்படியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.