May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இரட்டைச் சொற்கள்-1 / மூக்கும் முழியும்

1 min read

double words -1 / Mookkum muzhium By Muthumani

1.மூக்கும் முழியும் – முத்துமணி எம்.ஏ. எம்.பில்.

  ஒருவருக்கு, முகத்தில் மூக்கு நேர்த்தியாக, சரியான அளவில் அமைந்துவிட்டால் போதும் 90 விழுக்காடு அந்த முகம் அழகான முகம் ஆகிவிடும். இதைக் கருத்தில் கொண்டு முகத்திற்கு மூக்கு அழகு என்று கவிஞர் வைரமுத்து பாடியிருக்கிறார். உண்மையிலேயே ஒருவரைப் முகத்தைப் பார்த்தவுடன் அவரின் மூக்கைத் தான் கேலி செய்வார்கள்.
கொஞ்சம் சப்பி இருந்தால் சப்பை மூக்கு என்றும் நுனியில் கொஞ்சம் வளைந்து இருந்தால் கிளிமூக்கு என்றும் பெயர் வைத்துவிடுவார்கள். இன்றும் சைனா காரர்களையும் ஜப்பான் காரர்களையும் சப்பை மூக்கன் என்றே அழைக்கிறோம் அல்லவா? மூக்ககரையன் வருகிறான் என்று குழந்தைகளைப் பயமுறுத்துவார்கள். முகத்திற்கு அழகு தருவதில் முக்கியமான உறுப்பு மூக்குதான். சரியான அளவில் இருந்தால் நல்ல எடுப்பான மூக்கு என்று சொல்வார்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி ஆராய்ந்து சொன்னவர்கள் அவரது மூக்கின் அளவை, அழகை, எடுத்துச்சொல்லி அழகான மூக்கு.அதனால்தான் எல்லா வேடங்களும் அந்த முகத்திற்குப் பொருந்துகின்றன என்று எழுதி இருக்கிறார்கள்.
அடுத்த இடத்தில்தான் கண்கள் அமைகின்றன. கண்களைப் பார்த்து கோயக் கண், மாறுகண், முட்டைக் கண் என்றெல்லாம் குறை பேசத் தோன்றும். அதேநேரத்தில் அழகாக இருந்தால் அதுவும் பெண்ணாக இருந்தால் கோலவிழி என்றும் குமுதவிழி என்றும் வேல்விழி மீன்விழி என்றும் வர்ணிக்கத் தொடங்கிவிடுவார்கள். கண்கள் விஷயத்திலும் நடிகர் திலகத்தை எடுத்துச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவரது கண்கள் பேசும் கண்கள் என்று சொல்வார்கள்.வாயால் வசன உச்சரிப்பு இல்லாமலேயே அவரது கண்கள் மட்டுமே பேசும் வல்லமை உடையவை.எல்லா உணர்வுகளையும் கக்குபவை.
முகத்தின் கன்னம், உதடுகள் புருவங்கள், நாடி , நெற்றி போன்ற இதர உறுப்புகள் ஓரளவிற்கு அழகை நிர்ணயம் செய்ய உதவினாலும் மூக்கும் கண்களும்தான் முதலிடம் பெறுகின்றன.
அதனால்தான் பெண் பார்க்கப் போகும் இடத்தில் பெண்ணின் அழகைச் சொல்லும் போது,பொண்ணு நல்ல மூக்கும் முழியுமாக இருக்கிறாள். என்று கூறுகிறார்கள். இங்கு முழி என்பதை விழி என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் மூக்கும் முழியும் என்ற இரட்டைச் சொற்கள் சேர்ந்து நின்று அழகு அல்லது அழகான முகம் என்ற பொருளைத் தருகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.