May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

இரட்டை சொற்கள்-2 /வாயும் வயிறும்

1 min read

double words in tamil -2 / Vaaium vairum By Muthumani

வாயும் வயிறும் / முத்துமணி எம்.ஏ., எம்.பில்

மூக்கும் முழியுமாக இருந்த பெண்ணுக்கு அவளுக்கு ஏற்ற ஒரு பையனோடு ஒரு நல்ல நாளில் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. சில மாதங்கள் ஆயின. இப்போது அவள் வாயும் வயிறுமாக இருக்கிறாள். எல்லோர்க்கும் மகிழ்ச்சி. அதாவது அந்தப் பெண் குழந்தை உண்டாகி இருக்கிறாள், விரைவில் அம்மாவாகப் போகிறாள் என்பதை இச்சொற்கள் குறிக்கின்றன.
தொன்றுதொட்டு கிராமங்களில் குழந்தை உண்டான பெண்களை இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். அதற்கு என்ன பொருள் என்று ஆழமாக யோசித்தாலும் பொருள் விளங்கிக் கொள்ள முடியவில்லை. வயிற்றில் குழந்தை இருப்பதால் வயிற்றைச் சொல்கிறார்கள். வயிற்றின் அளவு மாறிவிடும் வயிறு பெரிதாகிவிடும், யார் பார்த்தாலும் அவர்கள் கண்ணில் முதலில் அவள் வயிறு தான் தென்படும்.வயிற்றில் குழந்தை இருக்கிற காலத்தில் அடிக்கடி வாய் குமட்டும். குமட்டிக்கொண்டு, மசக்கை என்பார்களே அதுவும் மேலும் அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டும் இருக்கிற காரணத்தினாலோ என்னவோ வாயையும் சேர்த்துச் சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் வயிற்றுக்குள் குழந்தை இருப்பதால் முறையான உணவை அடிக்கடி உண்டு கொண்டிருப்பார்கள் அல்லது உண்ணச் சொல்லிக் கட்டாயப் படுத்திக்கொண்டு இருப்பார்கள்.
மொத்தத்தில் வாயும் வயிறுமாக இருக்கிறாள் என்று சொன்னால் அந்தப் பெண், குழந்தை உண்டாகி இருக்கிறாள். தாயாகப் போகிறாள் என்பது பொருள்.

(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.