June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு மருந்து; பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்

1 min read
Medicine for corona; Patanjali fined Rs 10 lakh by HIgh court

6-8-2020
கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி மக்ககளின் அச்சத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது

பதஞ்சலி நிறுவனம்

பதஞ்சலி நிறுவனம் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி‘கொரோனில்’ என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது. இந்த மருந்தானது கொரோனா நோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது என்று பகிரங்கமாக விளம்பரப்படுத்தியது.

இந்த மருந்தை 7 நாட்கள் சோதனை செய்ததாகவும் மற்றொரு பதஞ்சலி தயாரிப்புடன் சேர்த்து இம்மருந்தை எடுத்துக்கொண்ட அத்தனை கொரோனா நோயாளிகளும் பூரண குணமடைந்துவிட்டதாகவும் பதஞ்சலி நிறுவனம் கூறியது. ஜெய்ப்பூரை சேர்ந்த நிம்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியது..

இந்த மருந்து அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே மருந்து குறித்த ஆய்வு, சோதனை விவரங்களை மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்டது. மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் விவரங்களையும் ஆயுஷ் அமைச்சகம் கேட்டுள்ளது. மேலும், இப்பிரச்சினையை முழுமையாக ஆய்வு செய்யும் வரை மருந்தை விளம்பரம் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தியது.

மோசடி வழக்கு

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வக்கீல் பல்ராம் ஜகத் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாபா ராம்தேவ் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, நிம்ஸ் பல்கலைக்கழக இயக்குநர் பி.எஸ்.தொமார்; அவரது மகன் அனுராக் தொமார், மூத்த அறிவியலாளர் அனுராக் வர்ஷ்னே ஆகியோர் மீதும் மோசடி வழக்கு பதிவாகியுள்ளது.

பதஞ்சலி மருந்து விவகாரத்தில் பாபா ராம்தேவ் மீது பல்வேறு தரப்பினர் புகாரளித்துள்ளதாக ஜெய்ப்பூர் போலீஸ் டிசிபி அசோக் குப்தா தெரிவித்துள்ளார். பதஞ்சலி அறிமுகப்படுத்தியுள்ள மருந்துக்கு ஆயுஷ் அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என புகார் அளித்த வழக்கறிஞர் பல்ராம் ஜகத் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்னொரு வழக்கு

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆருத்ரா இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம், கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை ‘கொரோனில் 92 பி’, ‘கொரோனில் 213 எஸ்பிஎல்’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது. கொரோனில் என்ற பெயருக்கு வணிகச்சின்னத்தையும் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு கொரோனில் என பெயர் சூட்டியுள்ளதாகவும் கூறி, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும், இதன்மூலம் தங்கள் நிறுவனத்தின் வணிகச் சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகவும் கூறி, ஆருத்ரா இன்ஜினியர்ஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதுதொடர்பான மனுவில், கொரோனில் பெயரை பயன்படுத்த பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்திற்கும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளைக்கும் தடை விதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ரூ.10 லட்சம் அபராதம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்கக் கோரியும், தடை உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரியும் பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் மனுக்கள் தாக்கல் செய்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வணிகச் சின்ன பதிவுத்துறையில் கொரோனில் என்ற பெயரில் ஏதேனும் பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என விசாரிக்காமல், அதே பெயரில் மாத்திரை தயாரித்துள்ளதால், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.மேலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் நிறுவனம் எனக் கூறும் பதஞ்சலி நிறுவனம், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி, மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி மேலும் லாபம் பார்க்க முயற்சிப்பதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அபராதமாக விதிக்கப்பட்டுள்ள 10 லட்சம் ரூபாயில், 5 லட்சம் ரூபாயை, எந்தவித அங்கீகாரத்தையும் தேடாமல் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு சிகிச்சை வழங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் வருகிற 21-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்து என்பது எதிர்ப்பு சக்தி மருந்து தானே தவிர, கொரோனாவை குணப்படுத்தாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *