இ-பாஸ் நடைமுறையில் இருப்பது ஏன்?- எடப்பாடி பழனிசாமி பதில்
1 min read
Why e-pass is in practice? - Edappadi Palanisamy Answer
6-8-2020
தமிழ்நாட்டில் இ-பாஸ் நடைமுறையில் இருப்பது ஏன் என்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் அவர் பங்கேற்றார். பின்னர்அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முக கவசம்
இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம் தான். மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. காய்ச்சல் முகாம்கள் நடத்துவதுதான் தொற்று குறையக் காரணம். மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 4000 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
முகக்கவசம் மற்றும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. மதுரையில் பிளாஸ்மா சிகிச்சையில் 7 பேர் நலமடைந்துள்ளனர். கொரோனா நோயாளிகளை குணப்படுத்த பிளாஸ்மா தானம் செய்ய மக்கள் முன் வரவேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் ரூ.103 கோடியில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன.
மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ இடங்கள் 150-ல் இருந்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இ-பாஸ்
தமிழகத்தில் இ-பாஸ் வழங்க மேலும் ஒரு குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழலுக்கு வழிவகுக்கக் கூடாது என்பதற்காகத்தான் கூடுதலாக ஒரு குழு அமைக்கப்டுகிறது. தேவையின்றி வெளியூர் செல்லக்கூடாது என்பதற்காகவே இ-பாஸ் நடைமுறையில் இருக்கிறது.
முன்னதாக வடபழஞ்சியில் அதிநவீன கொரோனா சிகிச்சை மையத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
தென்மாவட்டங்களில் தொழில் தொடங்க வருவோருக்கு சென்னையை விட அதிக சலுகை வழங்கப்படுகிறது. கொரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்குக் கிடையாது. தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
கொரோனாவை எதிர்த்து அரசு கடுமையாக போராடியும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
25 கோடி ரூபாய்
மேலும் அவர் கூறும்போது, மதுரையில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறினார். உலக சுகாதார அமைப்பு, ஐசிஎம்ஆர். வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வீடு வீடாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் தெரிவித்தார். மதுரை மக்கள் உயர்தர சிகிச்சை பெற எய்ம்ஸ் மருத்துவமனை அமையப் பெற உள்ளதாகவும், மதுரையில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையத்திற்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல் அமைச்சர் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி , வைகை ஆற்றை மேம்படுத்த 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்