June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

பாதுகாப்பான சூழல்உருவான பிறகே பள்ளிகள் திறக்கப்படும் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

1 min read

8.8.2020

Schools will be reopened only after a safe environment – Chief Minister Edappadi Palanisamy


சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்,கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு நேரடியாக சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உயிரிழக்க நேரிட்டால்,அவர்களுக்கு ₹50 லட்சம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு இன்சூரன்ஸ் மூலம் இந்தத் தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.மற்ற பணியாளர்கள் உயிரிழந்தால் ₹10 லட்சம் வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தொகை ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு இரு மொழிக்கொள்கை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் தான் தொடர்பு மொழி என்பதில் அறிஞர் அண்ணா,எம்ஜிஆர்,ஜெயலலிதா வழியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆலோசிக்க தமிழக அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசின் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதேபோன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு திருத்த சட்டம் குறித்தும் குழு அமைக்கப்பட்டு, ஆலோசனை நடைபெற்று வருகிறது.குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்று பாதிப்பு குறைய வேண்டும்.குழந்தைகள் மீது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து இந்தியா முழுவதும் என்ன நிலைப்பாடு எடுக்கப்படுகிறதோ, அதன்படி தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கும்.கொரோனா பரவலில் இருந்து,பாதுகாப்பான சூழல் உருவான பிறகே பள்ளிகள் திறக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நீலகிரி மாவட்டத்தில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளனர்.தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.அனாவசியமாக நிறைய பேர் செல்கிறார்கள். அதை தடுப்பதற்காகத்தான் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோருக்கு உடனடியாக இ-பாஸ் வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு இ-பாஸ் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். வெளிமாநில தொழிலாளர்களுக்காக விண்ணப்பிக்கும் போது,அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுவார்கள்.இ-பாஸ் நடைமுறைகளை இன்னும் எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *