May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

இ-பாஸ் ரத்து- மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து- கோவில்கள் திறப்பு- மெட்ரோ ரெயில் ஓடும்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

1 min read

Cancellation of e-pass system – Bus transport within districts – Opening of temples – Commencement of Metro Rail service; Edappadi Palanisamy announcement

3-8-3030

தமிழ்நாட்டில் வருகிற 1-ந் தேதி முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது. சென்னை நகரம் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும். மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும். கோவில்கள் திறக்கப்படும்- என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின்
வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த
நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி,
இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல்
கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர்
சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும் நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர்
இழப்பும் குறைவாக இருந்து வருகிறது.

பொருளாதார பாதிப்பு

அரசு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகளால், அரசின்
நலத்திட்டங்கள் மக்களை பெருமளவில் சென்று சேர்ந்துள்ளதால், பொருளாதார பாதிப்பில்
இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு, வேலைவாய்ப்பின்மையும் இரண்டே
மாதங்களில், ஆறில் ஒரு பங்காக குறைந்துள்ளது எனவும், தனி நபர் வருவாய் படிப்படியாய்
உயர்ந்து கொரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது எனவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த
இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக்
குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்ட
ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்
அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன்
நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில்
31.8.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின்
வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும்,
பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீட்டிப்பு

பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும்,
29.8.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள்
தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார
வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த
அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை
தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.8.2020 முடிய தமிழ்நாடு
முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள
பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 30.9.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

இ-பாஸ் ரத்து

எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும்
1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

1) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள்
பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும்
வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம்
தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்.
ஆதார், பயணச் சீட்டு
மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் நு-ஞயளள விண்ணப்பித்த
அனைவருக்கும் ஆன்லைன் முறையில் கணினி மூலமே சுய அனுமதி
உடனடியாக பெறும் வகையில் இ-பாஸ் வழங்கப்படும்.

வழிபாட்டுத்தலங்கள்

2) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம்
அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள்
அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு
நாளைக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை
நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கர்ப்பகிரகம் போன்ற
புனித இடத்திற்கும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட
எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். வழிபாட்டுத்

வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் தரிசனம் இரவு 8.00 மணி வரை மட்டும்
அனுமதிக்கப்படும்.

பஸ்போக்குவரத்து

மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து,
சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல்,
நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மெட்ரோ ரெயில்

4) பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7.9.2020 முதல் இதற்கென
வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

தியேட்டர்களுக்கு அனுமதி இல்லை

5) வணிக வளாகங்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களுடன், மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு
நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும்,
வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயக்க தடை தொடரும்.

6) சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8.00 மணி
வரை இயங்க அனுமதிக்கப்படும்.

7) அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்
பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி
வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்க
அனுமதிக்கப்படுகிறது.

8) சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல்
தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க
அனுமதிக்கப்படுகிறது. எனினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தவிர்க்க
இயலாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்களை
வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

9) தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள்
மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க
அனுமதிக்கப்படுகிறது.

பூங்காக்கள்

10) உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக, பூங்காக்கள் மற்றும்
விளையாட்டு மைதானங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும்,
விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

11) திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு
நடைமுறைகளை பின்பற்றி 21.9.2020 முதல்
திறக்க அனுமதிக்கப்படுகிறது.
12) தற்போது 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள்,
1.9.2020 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். எனினும்,
தனியார் மற்றும் அரசு அலுவலகங்களிலும், தொழிற்சாலை போன்ற
பணியிடங்களிலும், கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை
தொடர்பு அலுவலராக நியமித்து, முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை
பின்பற்றுவதையும், நோய்த் தொற்று உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை
தவிர்க்கவும், அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதை
உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வங்கிகள்

13) வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன்
இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

ஊட்டி

14) நீலகிரி மாவட்டத்திற்கும்(ஊட்டி), கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை
வாசஸ்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த
மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியுடன்
இ-பாஸ் பெற்று செல்ல அனுமதிக்கப்படுவர்.

15) திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி
நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய
அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி
கிடையாது.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து

16) ஞாயிற்றுக் கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு, செப்டம்பர்
மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.

ரெயில்போக்குவரத்து

17) மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட
தடங்களில் மட்டும் செயல்படும். எனினும், மாநிலத்திற்குள் பயணியர் ரெயில்கள்
செயல்பட 15.9.2020 வரை அனுமதியில்லை. 15.9.2020க்குப் பிறகு,
தமிழ்நாட்டிற்குள் பயணியர் ரெரயில்கள் அனுமதிப்பது பற்றி, சூழ்நிலைக்கேற்ப முடிவு
எடுக்கப்படும்.
18) விமானப் போக்குவரத்து மூலம் பயணிக்கும் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும்
உள்ளூர் பயணிகள், இரயில் போக்குவரத்து மூலம் பயணிக்கும் பிற மாநில
பயணிகள், தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தொற்றை
கண்டறிதலுக்கான புதிய நடைமுறை வெளியிடப்படும்.

19) தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில்
இருந்து 25 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 50
விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில்
விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.

144 தடை உத்தரவு

மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது
இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து
அமலில் இருக்கும்.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு
முழுமையாக கடைபிடிக்கப்படும்.

தொடரும் தடைகள்

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு
உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி
நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல்
தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல்
பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள்
அதிகம் கூடும் இடங்கள்.

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர
சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து
மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள்,
கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை
தொடரும்.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி
சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து
செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல்
வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த
நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
மாண்புமிகு அம்மாவின் அரசு அமல்படுத்தி வரும் கட்டுப்பாடுகள் மற்றும் நோய்
கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர பரிசோதனைகள் மூலம்
நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்றால்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் உள்ள நிலையில்
மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய
நிலையில் அரசு உள்ளது. இதனால் நோய்ப்பரவலை மேலும் பரவுவதை கட்டுப்படுத்த இயலும். எனவே, பொதுமக்கள் அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு
அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்
கொள்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.