பஸ்போக்குவரத்து தொடங்கியாச்சி! ஆனால்…
1 min readBus traffic has started! But…
1-9-2020
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. குறிப்பாக இ-பாஸ் முறை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால் இ-பாஸ் இல்லாமல் எல்லோரும் வெளியூர்களுக்கு சென்று வரலாம்.
அவசர தேவைக்கு…
அதே நேரம் ஒரு சாதராண ஏழையால் அவசரத் தேவைக்காக வெளியூர் சென்று வர இயலாது. சென்னையில் இருந்து ஒருவர் அவசரத் தேவைக்காக திருநெல்வேலி வர வேண்டும் என்றால், அவர்கள் இ-பாஸ் இன்றி வரலாம். ஆனால் அவர்களுக்கு வாகன போக்குவரத்து இல்லை. தனியாக காரில் வரவேண்டும். இல்லை என்றால் வாடகை காரில் வரவேண்டும்.
இந்த கொரோனாவை பயன்படுத்தி பலர் சென்னையில் இருந்து வாடகை காரை இயக்குகிறார்கள். அதில் சென்னையில் இருந்து நெல்லை வர வேண்டுமானால் குறைந்தது 4 ஆயிரம் ரூபாய் கட்டணம் கொடுக்க வேண்டும். இது சாதாரண ஏழைகளால் கொடுக்க முடியாது.
இதனால் பலர் ரத்த சொந்த உறவுகள் இறப்புக்குகூட சொந்த ஊருக்கு வர முடியாமல் இருக்கிறார்கள்.
சென்னையில் இருந்து முக்கிய ஊர்களுக்கு கார்,வேன் சென்று வருகிறது. ஆனால் மற்ற நகரங்கள் இடையே இந்த வசதியும் இல்லை. அவர்கள் தனியாக கார் பிடித்துதான் வெளியூர் செல்ல வேண்டும். அதற்கு பணத்தை அள்ளி வீசி வேண்டும்.
இதனால் இ-பாஸ் இல்லை என்று அறிவித்தாலும் இது சாதாரண ஏழைகளுக்கு பயனுள்ளதாக இல்லை. எனவே முக்கிய ஊர்களுக்கு இடையே அவரச தேவைக்காக செல்பவர்களுக்கு அரசு பஸ் போக்குவரத்தை விட வேண்டும். அதில் பயணம் செய்பவர்களுக்கு காரண காரியங்களை அறிந்து கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம். இதனால் ஏழைகள் பயன்பெறுவதோடு போக்குவரத்து துறைக்கும் வருமானம் கிடைக்கும்.
மாவட்ட எல்லைக்குள்..
மேலும் தற்போது மாவட்ட எல்லைக்குள் மட்டும் பஸ்களை இயக்குகிறார்கள். ஒரு காலத்தில் மாவட்டம் என்பது பரந்து விரிந்து இருந்தது. அப்போது சாதாரண மக்கள் தங்கள் தேவையை மாவட்டத்திற்குள்ளேயே பூர்த்தி செய்துவிடுவார்கள். ஆனால் இப்போது பல மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு விட்டதால் சாதாரண தேவை மற்றும் அன்றாட வேலைக்குகூட அண்டை மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தற்போது இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே அன்றாட வேலைக்கு பக்கத்து மாவட்டங்களுக்கு செல்கிறார்கள். மற்றவர்கள் வேலைக்குச் செல்லாமல் முடங்கி கிடக்கிறார்கள். எனவே அவர்கள் வசதிக்காக காலையிலும் மாலையிலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் பஸ்களை இயக்கலாம்.
மின்சார ரெயில்
சென்னை நகரில் தற்போது பஸ்களை அனுமதித்து இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் வெகு தொலைவில் இருந்து வருபவர்கள் குறைந்தது மூன்று பஸ்களில் ஏறி இறங்கி வரவேண்டும். அவர்கள் தடையின்றி வேலைக்கு வர மின்சார ரெயில்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும். எனவே மிகுந்த கட்டுப்பாடுகளுடன் காலையிலும் மாலையிலும் மின்சார ரெயில்களை இயக்கலாம்.
தற்போது மெட்ரோ ரெயிலை இயக்குவது நல்லதுதான் என்றாலும் அதில் கட்டணம் மிக அதிகம். மேலும் முழுவதும் ஏ.சி.யில்தான் அது இயங்கும். கொரோனா நேரத்தில் இது உகந்தது இல்லை. எனவே அதைவிட மின்சார ரெயில்தான் வசதியானது.
இவைகளை அரசு கவனத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று சாதாரண பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
-கடையம் பாலன்