ராகு-கேது பரிகார தலம் காளகஸ்தி
1 min read
Rahu-Ketu Parikara temple Kala kasthi
1-9-2-020
பஞ்சபூதத்தலங்களில் வாயு தலமாக விளங்குவது காளகஸ்தி. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் இக்கோவில் ராகு-கேது தலமாகவும் விளங்குகிறது. ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் தோஷம் விலகி பலன் பெறலாம். இக்கோவில் ராகுத்தலமாக விளங்க காரணம் என்ன? அதன் புராண வரலாறு இதோ…
சிலந்தி
பொதிகையில் உற்பத்தியாகி பொங்கிவரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் வசித்துவந்தவன் சத்தியசாகரன். ஆச்சாரத்தை அனுஷ்டிக்கும் அந்தணர் குலத்தவரான இவருக்கு முற்பிறவி தீவினை பயனாக தீய எண்ணங்களை கொண்ட ஒரு மகன் பிறந்தான். அவன் வீடு மற்றும் உற்றார் உறவினர்களை துரந்து கொங்கு நாடு சென்றான். அங்கு நெசவு தொழில் செய்யும் ஒருவரிடம் சரண் அடைந்து தனது பெயரை கரம்பன் என்று மாற்றிக் கொண்டான். நெசவாளர் குலப் பெண்ணை மணந்து கொண்டான்.
அதன்பின் அவன் தான் செய்த தவறுக்கு பரிகாரம் தேட தர்ம காரியங்களில் ஈடுபட்டான். அவனது இல்லறமும் நல்லறமாக அமைந்தது. அவனது புகழ் நாலாபுறமும் பரவத்தொடங்கியது. வயது முதிர்ந்த நிலையில் அவனிடம் ஒரு அந்தணர் சிவனுக்கு துணி கேட்க கரம்பன் தன்னிடம் உள்ள விலை உயர்ந்த புத்தம்புதிய துணியை தானமாக கொடுத்தான். மேலும் அவன் சாகும் வரை நெசவு தொழில் பற்றியே சிந்தித்து கொண்டிருந்தான்.
இதனால் அவன் அடுத்த பிறவியில் வலை பின்னும் சிலந்தியாக பிறந்தான். அச்சிலந்தி காளகஸ்தியில் உள்ள சிவனுக்கு தனது வலையால் பந்தல் மற்றும் மாடங்கள், கோபுரங்கள் போல் அமைத்து வழிபட்டு வந்தது.
யானை
இமையமலைத் தொடரின் அருகில் வாழ்ந்த ஒரு ஏழை அந்தணன் பிறரிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு சிவபூஜைகளை செய்து வந்தான். பாம்பு கடித்து இறந்த அவன் மறுபிறவியில் வலிமை மிக்க கஸ்தி என்ற யானையாக பிறந்தான். அந்த யானையும் காளகஸ்தியில் உள்ள சிவன்பால் அன்பு கொண்டு தினமும் மாலைப் பொழுதில் பூஜை செய்து வழிபட்டு வந்தது.
பாம்பு
இமயமலைச் சாரலில் வாழ்ந்து அந்தணன் சிறந்த சிவபக்தன். அவன் ஒருமுறை கந்தர்கள் ஜாதி வைரங்களை கொண்டு சிவபூஜை செய்வதை கண்டான். அவர்களிடம் இப்படி பூஜை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று வினவினான். அதற்கு அவர்கள் இந்த பிறவியிலேயே கைலாய த்தை அடையலாம் என்றனர். அப்படியானால் பூஜைக்கான வைரங்களை எப்படி பெறலாம் என்று கேட்க அதற்கு அவர்கள் பாம்பாக பிறந்தால் நாக லோகத்தில் இருந்து விதவிதமான வைரங்களை பெறலாம் என்றனர். இதனால் இறைவனிடம் தான் பாம்பாக பிறக்க வேண்டும் என்று வேண்டினான். அதன்படி அடுத்த பிறவியில் அவன் காளன் என்ற பாம்பாக பிறந்தான். அந்த பாம்புவும் காளகஸ்தி வந்து சிவன்பால் பற்று வைத்தது. அது தினமும் காலையில் வைரக் கற்களை எடுத்து வந்து சிவலிங்கத்தின் மீது வைத்து பூஜித்தது.
அது வணங்கி சென்ற பின் யானை வந்து எம்பெருமான் இந்த கற்களை தாங்குவானா? என்று நினைத்து அதனை அப்புறப்படுத்தி மென்மையான மலர்களை சிவலிங்கத்தின் மீது வைத்து வணங்கியது. தான் வைத்த வைரக் கற்கள் தூக்கி எறிவது யானைதான் என்பதை அறிந்த பாம்பு அதன்மீது கோபம் கொண்டது. அதனை பழிவாங்க காத்திருந்தது.
அது மாசி ஏகாதசி தினம். அன்று யானை வழக்கம் போல் பூஜை செய்ய வந்தது. மறைந்து இருந்த பாம்பு அதன் தும்பிக்கை வழியாக மூக்கினை அடைந்து தன் விஷத்தை கக்கியது. அப்போது தான் இறந்தாலும் தன் எதிரியை கொல்லாமல் விடக்கூடாது என்று கருதிய யானை தன் தலையை பாறையில் மோதியது. இதில் பாம்பும் யானையும் இறந்தன. அப்போது அந்த பாம்பும் யானையும் தேவர்களாக உருமாறி வந்தனர். மேலும் சிவன், பார்வதியோடு அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.