செங்கோட்டையில் 100 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்டார்
1 min read
100-year-old grandmother rescued from Corona at Red Fort
10-9-2020
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்ற செங்கோட்டையைச் சேர்ந்த 100வயது மூதாட்டி பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
100 வயது மூதாட்டி
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காமராஜ் காலனியைச் சேர்ந்தவர் கல்யாணி ஆசாரி மனைவி இசக்கியம்மாள் (வயது 100). இவருக்கு கடந்த 1-ந் தேதி அன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூச்சுத்திணறல் தீவிரத்தை கருத்தில் கொண்டு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. சிடி ஸ்கேன் மூலம் அவருடைய நுரையீரலில் உள்ள பாதிப்பின் மூலம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
குணம் அடைந்தார்
அவர் 6 நாட்கள் கொரானோ நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வழக்கமான வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று(வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டார்.மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பும் போது இசக்கியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் அனைத்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.
பேட்டி
இதுபற்றி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றுவது மிகவும் கடினம். மேலும் பல இடங்களில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தேவையற்றது என்றெல்லாம் பலரும் பேசிய நிலையில், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்த 100 வயது மூதாட்டி ஒருவாரமாக தீவிர சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
காப்பாற்ற முடியும்
மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை தளர்த்தியுள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடர்பு கொண்டு கொரோனா பரிசோதனை செய்து, தக்க சிகிச்சை பெற்று, தங்களை நோயிலிருந்து காப்பாற்றி கொள்வதோடு, தங்கள் குடும்பத்தினற்கு நோய்த்தொற்று பரவாமலும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் தெரிந்த உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை மேற்கொண்டால் நிச்சயம் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே காலம் தாழ்த்தாமல் சிகிச்சை அளிக்கப்பட்டால் நிச்சயமாக காப்பாற்ற முடியும்.
இவ்வாறு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் கூறினார்.
தென்காசியில் கொரோனா நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் 64 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த எண்ணிக்கை 6092 ஆக அதிகரித்தது. இன்று 90 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து இதுவரை மாெத்தம் 5315 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாெத்தம் 664 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று பலி இல்லை என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 123 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த எண்ணிக்கை 10774 ஆக அதிகரித்தது. இன்று 111 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து இதுவரை மாெத்தம் 9490 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாெத்தம் 1092 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இன்று 2 பேர் பலி என்பதால் பலி எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது.