May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

குழந்தைக்காக… / சிறுகதை / கடையம் பாலன்

1 min read

Kuzhathaikka / Short sory by Kadayam Balan

24-9-2020

குழந்தைக்காக…
வேறு வழியே இல்லை. இன்று அங்கே போய்தான் ஆக வேண்டும். தனது இந்த முடிவை இரண்டு வயது செல்ல மகள் சுஜாவின் சோர்ந்த முகமே  எடுக்க வைத்தது. காலியான பால் டப்பா, ஆசையாய் விளையாடிய ஆடும் பொம்மை உடைந்தது. சக்கரத்தை இழந்த நடைவண்டி, எதிர்வீட்டு குட்டியின் புதிய ஆடை&இவைகள் தான் சுஜாவின் வாட்டத்திற்கு காரணம். பசியால் துடித்த அந்த பாப்பாவுக்கு பால் பவுடருக்குப் பதில் அரிசி சாதம் வடித்த கஞ்சியில் சிறிது வெல்லத்தை கலந்து கொடுத்தாள். ருசி  மாறுகிறது என்பதை பசி அறிய வைக்கவில்லை. குடித்து முடிந்தும் அயர்ந்து தூங்கி விட்டாள். ஆனால் அந்த மழலையின் முகத்தில் எத்தனையோ ஏக்கம் இருப்பதை விமலா கவனித்தாள். அடுத்த நொடியில் அவள் கண்களில் நீர் பொங்கியது. முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.
காதல் கணவரை பிரிந்த அந்த நாளில் தோழியிடம் மட்டும் தனிமை வாட்டும் நிலையை பேசுவாள். அவருடன் இருந்த அந்த மகிழ்ச்சியான காலம் திருவிழாபோல் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்று எடுக்கப்போகும் முடிவு அந்த தோழிக்குகூட தெரியாது.
செல்போனை எடுத்தாள். பேலன்ஸ் மிக குறைவாக இருந்தது. மிஸ்டு கால் கொடுத்த அடுத்து நொடியில் செல்போனில் அழைப்பு வந்தது.
“நான் விமலா பேசறேன்…”
“……………….”
“இப்போ நான்…  வேணுமா… நான் வரட்டுமா…”
தயங்கி தயங்கி பேசப் பேச கண்கள் இரண்டும் சாரை சாரையாக நீரை வெளியேற்றியது.
“சரி இன்னும் அரை மணி நேரத்துக்கெல்லாம் அங்கேயே வந்துடுதேன்…”
குளியறைக்கு சென்ற ஐந்து நிமிடத்தில் பளிச்சென்ற மேனியுடன் கமகமக்கும் சோப்பு வாசனையுடன் வெளியே வந்தாள்.
அப்போது வீட்டில் இருந்த எப்.எம். ரேடியோவில் ‘எங்கள் தங்க ராஜா’ படத்தில் இருந்து ‘கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம் கடை தெருவில் விற்குதடா ஐயோ பாவம்’ என்ற பாடல் ஒலித்தது.
ரேகா, சூட்கேசுக்குள் நீண்ட காலமாக சிறைப்பட்டு கிடந்த பட்டுச் சேலைக்கு விடை கொடுத்தாள். ஆனால் அந்த பட்டுச் சேலை அவளின் பிறந்த மேனியை சிறைபிடித்தது. சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியில் சரசரவென சிரிப்பொலியோடு காற்றில் முந்தானையை பறக்க வைத்தது.
முகத்தின் படர்ந்திருந்த சோகத்தை முகப்பவுடரும், உதட்டுச்சாயமும் மறைத்தது, இப்போது விமலாவை பார்க்க ஒரு குழந்தைக்கு தாய் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
“குணமிருந்தும் தவறு செய்வாள், குழந்தைக்காக ஒருத்தி…” என்ற பாடல் வரியை பறைசாற்றிக் கொண்டிருந்த ரேடியோவை ஆப் செய்தாள், விமலா.
பக்கத்து வீட்டு கதவை தட்டினாள்.
“அக்கா நா..  அவசரமாக வெளியே போக வேண்டியிருக்கு, தூங்ற குழந்தைய கொஞ்சம் பார்த்துகங்க… நான் அரை மணிநேரத்துல வந்துடறேன்.”
“சரி போயிட்டு வாம்மா…”
“அவசரமா போறவளுக்கு பட்டுச் சேலையும் மேக்கப்பும் எதுக்கு?” இந்த எண்ணம் பக்கத்து வீட்டு அக்காளுக்கும் வரத்தான் செய்தது. விமலா இருக்கும் அவரசத்தில் இதற்கெல்லாம் விளக்கம் கேட்க முடியுமா? கேட்டால்தான் உண்மையான பதில்தான் கிடைக்குமா?
அடுத்து நொடியில் சொல்லி வைத்தாற்போல ஆட்டோ வீட்டின் வாசலில் தயாராக நின்றது. அவசர அவசரமாக ஆட்டோவுக்குள் நுழைந்தாள்.
“தம்பி அந்த தோட்டத்து பங்களாவுக்கு போப்பா…”
“சரிக்கா…”
ஆட்டோ புறப்பட்டது. டிரைவருக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சில கண்ணாடியில் அவள் முகம் பிரதிபலித்தது-. அவளின் முகம் அவளுக்கே அழகாக தெரிந்தது.
“தம்பி அந்த பூக்கடையிலே போய் நாலு முழம் மல்லிகை பூவும் ஒரு ரோஜாவும் வாங்கிட்டு வா… அப்புறமாக காசு கொடுத்துடறேன்.”
“சரிக்கா…”
முகத்தை வெளியே காட்டாமல் ஆட்டோவுக்குள் ஒடுங்கி போய் அமர்ந்து கொண்டாள். ஆட்டோ டிரைவர் வாங்கி வந்த மல்லிகை சரத்தையும், ரோஜாவையும் கூந்தலில் சூட்டினாள். அடேயப்பா புதுப்பெண்ணாகவே மாறிவிட்டாள்.
ஆட்டோ வழக்கமான வேகத்தில் பயணித்தது.
“தம்பி நான் இப்போது போறதை வெளியிலே யாரிடமும் சொல்லிடாதப்பா”
“என்னக்கா அப்படி சொல்றீங்க… இதையெல்லாம் நான் வெளியிலே சொல்வேனா.. இந்த விஷயம் எனக்கு மட்டும்தானேக்கா தெரியும்.”
ஆட்டோ முன்னே செல்ல… விமலாவின் மனம் பின்னோக்கி நகர்ந்தது.
ஏழையாய் பிறந்த விமலாவுக்கு அழகையும் அறிவையும் கொடுக்க இறைவன் தவறவில்லை.  சாதாரண ஆடைகூட அவள் அணிந்தால் அதன் மதிப்பு கூடிவிடும். கடைகளில் விற்கும் பாசி மாலைகூட அவள் கழுத்திற்கு போனால் முத்தாகவும், வைரமாகவும் மின்னும்.
பிளஸ்&2 படித்துக் கொண்டிருந்த அவளை எப்படியாவது மடக்கி மனைவியாக்கிவிட வேண்டும் என்று பின்தொடர்ந்தான் விஜயன். காதல் ஒருவரின் வாழ்க்கையே புரட்டி போட்டுவிடும் என்பதை எத்தனையோ கதைகளில் படித்தவள்தான் விமலா. அதான் விஜயனின் காதல் பார்வையும், காதல் கடிதங்களும் அவளை சிறிதும் சலனம் கொள்ள வைக்கவில்லை.
இறுதியில் காதல் கத்தரிக்காய் எல்லாம் கதைக்கு உதவாது என்பதை உணர்ந்த விஜயன் தன் தந்தையிடம் விடாப்பிடியாக விமலாவைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறினான். பணக்காரருக்கே உரிய ஆவணமும் அகந்தையும் உடைய அவரது தந்தை எப்படி சம்மதிப்பார். ஆவேசமானார். எரிமலையாய் கொதித்தெழுந்தார்.
ஆனால் மகனின் பிடிவாதம் காரணமாக மகனின் திருமணத்துக்கு சம்மதித்தார். அது சம்மதம் அல்ல. பழிவாங்கும் எண்ணம். யோக்கியனான தன் மகனை விமலாதான் மயக்கி தன் காதலில் விழ வைத்துவிட்டாள் என்ற எண்ணம் அவருக்கு.
பெண் கேட்டார். மகனுக்காக கீழே இறங்கி வந்துவிட்டதாக விமலாவின் தாயிடம் கூறினார். அதை உண்மை என்று எண்ணி விமலாவின் தாயும் சரி சொன்னாள். ஆடம்பரமாக திருமணம் செய்தால் தன் கவுரம் பாதிக்கும் என்று சொல்லி, எளிமையாக கோவிலில் நடத்தவேண்டும் என்றார். இறுதியில் கோவிலில் விஜயன், விமலா கழுத்தில் தாலிக்கட்டினான்.
திருமணமான ஒரு வார காலம் இந்த புதுமணத் தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினார்கள். அதன்பின் விஜயனின் தந்தையின் குள்ளநரி தந்திரத்தை செயல்படுத்தினார். விமலா மீதும் அவளது குடும்பம் மீதும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மானத்தை வாங்கினார். அதெல்லாம் பொய் என்று விஜயன் தன் தந்தையிடம் எடுத்துக்கூறினான். ஆனால் எத்தனையோ சினிமா படங்களில் வில்லன்கள் செய்வது போல் ஆட்களை தயார் செய்து அவளை களங்கப்படுத்தினார்.
&இதையெல்லாம் நினைத்த விமலாவால் அதற்குமேல் நினைக்கும்போது கண்கள் கலங்கின. ஆனால் கண்ணீர் வந்தால் தன் மேக்கப் கலைந்துவிடுமே என்ற பயத்தில் கால ஓட்டத்தை நிகழ் சம்பத்துக்கு கொண்டு வந்தாள்.
எப்படியோ கணவரை பிரிந்து வந்த விமலா தாயின் அரவணைப்பில் வாழ்ந்தாள். அப்போது அவளது தோழி, உன் விஜயன் உன்னைக் கவர்ந்ததுபோல் வேறு பெண்ணையும் கவர்ந்து விட்டானோ என்று திட்டினாள்.  அதற்கு பதிலேதும் சொல்ல முடியாமல் தவித்தாள்.
கணவருடன் வாழ்ந்த ஒரு வார கால வாழ்க்கைக்கு கிடைத்த பரிசுதான் சுஜா. ஓராண்டுக்கு முன் தாயும் இறந்துவிட ஆதரவின்றி தவித்தாள் விமலா. தையல் தைத்தும், குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தும் வாழ்க்கையை நடத்துகிறாள். அந்த வருமானம் அவளுக்கு போதுமானதாக இல்லை. தன் வயிற்றை காயப்போட்டுக் கொள்ளலாம். ஆனால் குழந்தையை எப்படி பட்டினி போட முடியும். அதனால்தான் இந்த முடிவுக்கு துணிந்து விட்டாள்.
ஆட்டோ ஊரைக்கடந்து காட்டுப்பகுதிக்கு வந்தது. கள்ளி மரங்களை வேலியாக கொண்ட ஒரு தோட்டத்துக்குள் ஆட்டோ நுழைந்தது. ஒரு மறைவான இடத்தில் ஆட்டோ நின்றது. வியர்க்காத முகத்தை கைக்குட்டையால் துடைத்தபடி ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினாள். அங்கே வாட்டச் சாட்டமாக ஒருவன் நின்று கொண்டு அவளை வரவேற்று அழைத்துச் சென்றான். அங்கே பம்பு செட் அருகே தனி அறை. அங்கு அழைத்துச் சென்றான். இந்த காட்சியை காண வெட்கப்பட்டு சூரியன் மேற்கே மறைந்து போயிருந்தான். நிலவும் தனது முகத்தை காட்டவில்லை. தோட்டமே இருள் சூழ்ந்தது. பம்பு செட் அறையின் இதுவரை எரிந்து கொண்டிருந்த மின் விளக்கு அணைந்தது.
அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் விளக்கு பளிச்சிட்டது. கதவை திறந்து இரண்டு பேரும் வெளியே வந்தனர். கத்தையான ரூபாய் நோட்டு கட்டு விமலாவின் கைக்கு மாறியது.
“என்ன மன்னிச்சிடுங்க…” &விமலா.
“நீதான் என்னை மன்னிக்கணும் நமக்கு கல்யாணம் ஆகி மூன்றாண்டு ஆகுது. ஒரு வாரம்தான் நாம சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். எங்கப்பா மிரட்டலுக்கு பயந்து நானும் உன்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிட்டேன். எங்க அப்பா மூர்க்கத்தனமானவர். சொத்தை எல்லாம் வேற யாருக்காவது  கொடுத்துட்டு தற்கொலை செய்து கொள்வேன்னு மிரட்டினாரு… அதனால…” என்றான் விஜயன்.
“நான் உங்கள தப்பா நினைக்கலிங்க…. வீட்ட விட்டு வெளியிலே வந்தாலும் அவ்வப்போது நாம இப்படி சந்திக்கிறோமே. ஆனா உங்ககிட்ட பணம் வாங்காம சமாளிக்கலாம்ன்னு நினைச்சேன். அது என்னால முடியலிங்க. இந்த பணத்தை வாங்கத்தான் கூச்சமா இருக்கு… அமா உங்க அப்பா எப்படி இருக்காரு…”
“அவர் உனக்கு செஞ்ச துரோகத்துக்கு அனுபவிச்சிகிட்டு இருக்காரு… டாக்டர் நாள் குறிச்சிட்டாரு… கூடிய சீக்கரம் நாம ஒன்றா சேரும் காலம் வரும். அதுவரைக்கும் நம்ம குழந்தைய நல்லா பார்த்துக்கோ..”
ஆட்டோ நிற்கும் இடத்துக்கு இருவரும் வந்தனர். ஆட்டோவின் முகப்பு விளக்கு வழிகாட்டியது. அவளது வாழ்க்கைக்கும்தான்…
விமலா கணவரைத் தேடி வந்தது, விஜயன் தந்தைக்கு பயந்து நடந்து கொண்டது எல்லாமே குழந்தைக்காகத்தான். ஆம் அந்தப் பூர்வீக சொத்து வேறு கைக்கு மாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

-கடையம் பாலன்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.