May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

கோழி காய்ச்சல் / இது விலைபோகாத கோழி/ கடையம் பாலன்

1 min read

Koli kachal / Short story by Kadayam Balan

1-/10/2020
முருகன் இந்த அலுவலகத்தில் அயராது பாடுபட்டவர். அவரின் உழைப்புக்கு எதைக் கொடுத்தாலும் ஈடுகட்ட முடியாது. அவரின் உழைப்பு நமது அலுவலகத்துக்கு இனி கிடைக்காமல் போவது நமக்குத்தான் இழப்பு. அன்பாக பழகக்கூடியவர். எந்த பளுவான வேலையையும் இனிய முகத்துடன் செய்து முடிப்பவர். ஆனாலும் நிர்வாகத்தின் ஆள் குறைப்பு நடவடிக்கையால் இவரை இழக்க வேண்டியது இருக்கிறது. இனி ஓய்வு வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்”
-இப்படி அலுவலக மேலாளர் புகழுரைத்தாலும் முருகன் இறுக்கமான முகத்துடனேயே இருந்தார். வேண்டா வெறுப்பாக அவர் கொடுத்த நினைவு பரிசை பெற்றுக்கொண்டார். அவர் கழுத்தில் தாங்கிய மாலை அரிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதன்பின் வைத்த இனிப்பு கார வகைகளையும் சுவைக்காமல் மருந்துபோல் தின்று முடித்தார்.
மீண்டும் மேலாளர் அவரிடம் வந்து, “மிஸ்டர் முருகன் உங்களால இனி வேற வேலை எதுவும் செய்ய முடியாது. உங்க பசங்க ரெண்டு பேரு இருக்காங்கல்ல. பெஸ்ட் ஆப் யுவர் ரிட்டயர் லைப்” என்று கை குலுக்கிவிட்டு சென்றுவிட்டார்.
குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
அலுவலகத்தில் வேலையின் போது நடந்த ருசிகரமான சம்பவங்களை அவ்வப்போது ஜூனியர்களிடம் சொல்லி உற்சாகமூட்டும் முருகன் இன்று எண்ணற்ற பழைய சம்பவங்களை எடுத்துக்காட்டி அறிவுரை சொல்லுவார் என்று பலர் எதிர்பார்த்தது வீணாய் போனது.
அடுத்த நொடியில் அவருக்கு நெருக்கமான சக ஊழியர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களால் எதுவும் பேச முடியவில்லை. கண்களில் மளமளவென்று கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. ஆனால் முருகனின் இறுகிய முகம் இப்போது மலர்ந்தது-

“சார்… இந்த ஆபீசுக்காக நாயா ஒழச்சீங்க… ஆனா நன்றி கெட்ட உலகம்.. மேனேஜர் இப்படி உங்கள பழிவாங்கக் கூடாது.”
“என் பொண்டாட்டிய ஆஸ்பத்திரியில சேர்ந்திருந்தப்போ நீங்க மட்டுமில்ல… உங்க வீட்டுக்கார அம்மாவயும் ஆஸ்பத்திரிக்கு கூட்டியாந்து உதவியா இருந்தீங்ளே… அத மறக்க முடியாது…”
“மேனேஜருக்கு தனிப்பட்ட முறையில் எத்தனை உதவி செஞ்சிருக்காரு. ஆனா அந்த ஆளு கொஞ்சம் கூட நன்றி கெட்டவர். ஆள் குறைப்பு நடவடிக்கைன்னு சொல்லி இவரை மட்டும் வேலைவிட்டு நீக்கியிருக்கிறான்.”
“அன்று ஒரு நாள் ஹெட் ஆபீஸ்ல இருந்து ஒரே நாளைக்குள்ள ஒரு வருட வரவு செலவு கணக்க அனுப்ப சொல்லி உத்தரவு வந்திச்சி. விடிய விடிய மேனேஜரோட உக்காந்து வேல முடிச்சி கொடுத்த ஒரே ஆளு இவருதானே.”
-இப்படி தங்கள் தங்கள் ஆதங்கத்தை சொல்ல வேண்டும் என்று நினைத்த முருகனது நட்புகள் கூட அடுத்து தங்கள் வேலைக்கு வேட்டு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அமைதி காத்தார்கள்.
அனைவரிடமும் இருந்து விடைபெற்று கொண்டு வேகமாக வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
வீட்டில் மனைவி, மகன்கள் அவரை வரவேற்றனர்.
“ஆபீஸ்ல உங்களுக்கு ஒரு நினைவுப் பரிசுக்கூட தரலியா?”
“தந்தாங்க அந்த சிடுமூஞ்சி மேனேஜரு கையால வாங்கின எதையும் வீட்டுக்கு கொண்டு வர கூடாதுன்னு அதை வழியிலயே ஆபீஸ் பையங்கிட்ட கொடுத்துட்டு வந்துட்டேன்.”
“இதுவரைக்கும்தான் ஆபீஸ் ஆபீசுன்னு இருந்தீங்க… வீட்ல இருக்கிற கொஞ்ச நேரமும் கோபமா, டென்சனா இருப்பீங்க.. அதுக்கு நல்ல பலன் கிடைச்சுது…இனிமே…” – மகன் முடிக்கும் முன்னே…
“இல்லடா… இனிமே நான்வீட்ல கோபப்பட மாட்டேன். உங்களோட மகிழ்ச்சியா இருப்பேன். இந்த ஆபீஸ்ல வேல வேலன்னு அலஞ்சி சொந்தக்காரங்களோட உறவையும் பாசத்தையும் தவறவிட்டதுதான் மிச்சம். நேரம் காலம் பாக்காம வேலை பாத்து என்னத்த கண்டேன்.” என்றார் வெறுப்போடு.
ஆனால் முகத்தில் என்றும் இல்லா மகிழ்ச்சி.
“நீங்க பயந்து பயந்து உழைச்சது எங்க மனசை படபடக்க வச்சிது… போதும்பா சாமி.. இனிமே நிம்மதியா இருங்க.”
மூக்கு கண்ணாடியை கழற்றி மேஜை டிராயரில் வைக்கும்போது என்றோ பார்க்க வேண்டும் என்று வாங்கி வைத்திருந்த வியட்நாம் வீடு பட சி.டி. அவர் கண்ணில் பட்டது. ஏதாவது ஒரு டி.வி. சேனலில் அந்தப்படத்தை ஒளிப்பரப்பினாலும் அதை பார்க்க அலுவலக வேலை அனுமதி தராது. சி.டி. வாங்கி ஆண்டுகள் பல ஆகி விட்டன. அதை பார்க்கக்கூட நேரம் இல்லை. புதுப்படமாக இருந்தால் அது இப்போது அடிக்கடி சுழன்று தேய்ந்து பழசாய் போயிருக்கும். அந்தப் படத்தின் பெருமை புரியாமல் பிள்ளைகள் சி.டி.யை தொடாமல் பாதுகாத்து வைத்திருந்தனர்.
முருகன் சி.டி.யை பிளேயரில் போட்டுப்பார்த்தார். ம்ஹூம்.. சி.டி.பிளேயர் எல்லாம் ஓரம்கட்டப்பட்ட பொருளாகி விட்டது.
தந்தையின் ஆர்வத்தை புரிந்துகொண்ட மகன்
“கொஞ்சம் பொறுங்கப்பா.. வியட்நாம் வீடு படத்தை பென்டிரைவில் பதிந்து தரேன், அதுக்கப்புறம் டிவியில போட்டு பாருங்க.”
அதற்குள் கொல்லைப்புறம் வந்த முருகன்…
“என்ன முருங்க மரம் வெட்டி கிடக்கு?”
“நான்தாங்க வெட்டச் சொன்னேன். நல்லா காய்ச்ச மரம்தான். இப்போ தாறுமாறா வளர்ந்துட்டுது. எப்போ யாருமேல முறிஞ்சி விழுமோ தெரியல.. அதான் வெட்டச் சொன்னேன்.”
அதன் அருகே மணிபிளாண்ட் செடி நட்டு வைக்கப்பட்டிருந்து.
“இது எதுக்கு வேண்டாத செடி…” அதை பிடுங்கினார், முருகன். செடி அறுந்து சிதைந்தது.
மகனின் உதவியால் டிவியில் படத்தை பார்த்தார். அந்தப் படத்தின் சிவாஜிகணேசன் பிரிஸ்டிஜ் பத்மநாப அய்யராக உருமாறியிருப்பார். அவர் ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்ததும் தனக்குள்ளே பொறுமுவார். தனக்கு ஓய்வு பெறும் வயது வந்தாலும் பதவி காலத்தை நீட்டிப்பார்கள் என்று ஏதிர்பார்த்திருப்பார்.
ஆனால் முருகனின் நிலைமை அப்படியல்ல. ஓய்வு பெற இன்னும் சில ஆண்டுகள் இருக்கும் முன்பே ஆள் குறைப்பு நடவடிக்கை என்று கூறி பணியில் இருந்து விலக்கிவிட்டார்கள்.
வேலையில் இருந்துதான் விடுவித்தார்கள். நிம்மதியாக வீட்டுக்குப்போகச் சொன்னார்களா? கடந்த ஒரு வருடமாக.. வேலையை நிம்மதியாக பார்க்கவிடவே இல்லை. அவர் அலுவலகத்தில் பட்ட வேதனை சொல்லி முடியாது. மாங்கு மாங்குன்னு வேலை பார்த்தாலும் அதற்கு மரியாதை இல்லை. மானேஜரோட சொந்தக்காரன் ஒருத்தன் செய்த தவறுக்கு இவரை மேனேஜர் அழைத்து வாங்கு வாங்குன்னு வாங்கியது இன்னும் அவரது நெஞ்சைவிட்டு அகலவில்லை. கடைசி காலத்தில் அவர் மெமோ எழுதுவதற்கே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது இருந்தது.
இவையெல்லாவற்றையும் கூட மறந்தாலும்…. அன்று, அவர் சொன்ன வார்த்தை மட்டும் இன்றும் நெஞ்சை அடைக்கிறது.
“என்னய்யா… இந்த ஆபீச விட்டு வெளியில போனா உன்ன ஒரு நாய்கூட மதிக்காது. என்ன முருகன்… இந்த காரியத்தை இப்படியா செய்றது.. உங்களால இந்த ஆபீசுக்குத்தான் நஷ்டம். நீங்க இந்த வேலய விட்டு போனா.. உங்களுக்கு கொடுக்கிற சம்பளத்தை 5 பேருக்கு கொடுக்கலாம். புதுசா வேலை கொடுத்த மாதிரியும் இருக்கும். ஆபீசுக்கும் லாபம். இந்த ஆபீச விட்டா உங்கள மாதிரி ஆளுங்களுக்கு வேல யாரு கொடுப்பா.. ஒரு பைசாக்கூட சம்பாதிக்க முடியாது.”
அன்று வாங்கிய இந்த இலவச சன்மானம்(?) எப்போதும் மறக்க முடியாது.
அந்த மாத சம்பளம் மாதாந்திர கடனை அடைக்கத்தான் உதவியது. இந்த மாதச் செலவுக்கு கடன் வாங்க தயக்கம். காரணம்…கிராஜுட்டி பணம் எப்போ வரும்ன்னு தெரியல… பிராவிடண்ட் பண்ட் வர குறைஞ்சது ஆறு மாசமாகும். பையன்களுக்கும் வேலை இல்ல.
வேலையை விட்டு வந்து ஒரு வாரத்திற்குள் வீட்டில் பற்றாக்குறை தலைகாட்டத் தொடங்கியது. வழக்கமாக மாத இறுதியில் அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். காரணம் மறுநாள் சம்பளம்.. ஆனால் இந்த மாதம் எதை நினைத்து மகிழ்ச்சி அடைய…
அப்போது டெலிவிஷனில் வாழநினைத்தால் வாழலாம் என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
அந்த நேரத்தில்…
“என்ன சார் ரிட்டேய்டு ஆகுறீங்களே… இந்த கடைய விலைக்கி வாங்கி நடத்துறீங்களா?”
“என்ன அண்ணாச்சி.. நீங்க எங்க போறீங்க?”
“எங்க சொந்த ஊருல ஒரு கடையிருக்கு. தோட்டம் தொறவும் உண்டு. அப்பா, அம்மாவுக்கு வயசாயிட்டு. அதனால அவங்களால எல்லாத்தயும் பாக்க முடியல.. இப்போ நா அங்க போயித்தான் ஆகவேண்டியிருக்கு. அதான் இந்த கடைய நீங்க எடுத்து நடத்துறீங்களான்னு கேட்டேன்.”
“அண்ணாச்சி இவ்வளவு நாளும் மாடா உழைச்சாச்சி மன உளைச்சலுக்கும் ஆளாயிட்டேன். இனிமே நிம்மதியா வீட்ல ரெஸ்ட் எடுக்க போறேன்”
அன்று கடைக்காரர் சொன்ன வார்த்தை இன்று நினைவுக்கு வந்தது.
கடைய யாருக்கும் விட்டிருப்பாரோ… சந்தேகம் சற்று கலக்கத்தை கொடுக்க அந்தக் கடையை நோக்கி கால்கள் விரைந்தன.
“அண்ணாச்சி கடைய இன்னும் விக்கலியே..”
“இல்ல சார்… என்ன உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் இருக்காங்களா?”
“இல்ல அண்ணாச்சி நானே கடைய நடத்தலாம்ன்னு இருக்கேன்… ஆனா இப்போ பணம் கையில இல்ல… கூடிய சீக்கரம் ஆபீஸ்ல இருந்து பணம் வந்துரும்.”
“பணத்தை பத்தி கவலையில்ல அண்ணாச்சி… கடைய பூட்டாம நடத்துங்க… அப்பத்தான் கஸ்டமரை விடாம இருக்க முடியும்.”
அந்த மனிதாபிமான அண்ணாச்சி வியாபாரத்தின் நுணுக்கத்தையும் சரக்கு எங்கே எப்படி வாங்க வேண்டும், யார்-யாரிடம் எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்ற விவரங்களை அக்குவேறு ஆணி வேறாக சொல்லிக்கொடுத்தார்.
கடை கல்லாப்பெட்டியில் அமர்ந்தார் முருகன். கடையின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. காலம் ஓடியது. ஆனாலும் அலுவலகத்தில் நேரம் பார்க்காமல் வேலை செய்த அனுபவம் அவரது சோம்பலை ஒதுக்கிவிட்டு சுறுசுறுப்பை வரவழைத்தது. ஒரு வருடத்தில் எதிர்பாராத வருமானம். கடை டிபார்ட்மெண்ட் ஸ்டோராக மாறியது. இந்த ஸ்டோர் சில குட்டிகளையும் போட்டது. இதுவரை இவர் மட்டும்தான் வேலை பார்த்து வந்தார். இப்போது மகன்கள், மனைவி என அனைவரும் வேலை பார்க்கிறார்கள். அந்த குட்டி கடைகளை ஆள் வைத்து வேலை வாங்கினார்கள்.
அன்றைய தினம் கடையின் முன்பு பிளாட்பாரத்தில் காய்கறிகளை தரம் பிரித்துகொண்டிருந்தார். அப்போது முருகனின் பழைய மேனேஜர் அங்கு வந்தார்.
“என்ன முருகன்…. இங்கத்தான் வேலை செய்றீங்களா… பரவாயில்ல… ஒங்கபாடு… உங்க முதலாளி இந்த கொரோனா காலத்திலேயும் உங்களுக்கு வேலை கொடுக்கிறாரு… ஆனா நம்ம கம்பெனிதான்…”
“என்ன சார்… என்னாச்சு?”
“கொரோனா ஊரடங்கு பத்துநாள்ல முடியும்ன்னு சொன்னாங்க.. அது இழுத்துக்கிட்டே போகுது… சம்பளம் எதுவுமே வரல.. அதான்…”
முருகனின் பதிலுக்கு காத்திராமல் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்த தற்காலிகமாக அமர்ந்திருந்த ஊழியனிடம் சென்ற அவர்
“உங்க கடையில… எனக்கு ஏதாவது வேலை இருக்குமா?”
“வேலையா… அதுவும் இந்த கொரோனா காலத்திலயா?”
“ஆமா… வீட்ல கொஞ்சம் கஷ்டம்…”
“எங்க முதலாளிக்கிட்ட கேளுங்க.. அண்ணாச்சி இங்க வாங்க.. இவரு வேலை கேட்கிறாரு…”
“முருகன் அங்கே வந்து நின்றார்..”
“முருகன் நீங்களா இந்த கடைக்கு முதலாளி…”
“ஆமா சார்”
“எப்டி.. எப்டி…” ஆச்சரியமாக கேட்டுக்கொண்டிருந்தார்
இந்த நேரத்தில் முருகனின் மனைவி ஒரு கருத்தக் கோழியோட வந்தாள்,
“என்னடி கோழிய எடுத்துக்கிட்டு வார,,,”
“கொரோனா பரவிக்கி்ட்டு இருக்குங்க… இந்தக் கோழிக்கும் நோவு வந்துடக்கூடாது பாருங்க.. அதான் வித்துறலாம்ன்னு கொண்டாந்தேன்.”
“ஏண்டி இந்தக் கோழிக்கு ஏற்கனவே காய்ச்சல் வந்து தப்பிச்சிட்டு, அதனால இனிமே அது நோவால சாகாது.. வீட்டுக்கு கொண்டுப் போ…”
“சார்.. ஆபீல நான் பட்ட கஷ்டத்தை எப்படியோ தாங்கி இருந்துட்டேன். இந்த கோழி காய்ச்சல் மாதிரி அந்த கஷ்டம் என்ன இனிமே சாய்க்காது.”
“முருகன் எனக்கு.. இங்க..”
“சார் அடுத்த சந்துக்குள்ளே நமக்கு ஒரு குடோன் இருக்கு.. அங்கே போய் வர்ற சரக்கையும் எடுக்கிறதயும் கணக்கு வச்சி கண்காணிச்சா போதும்..”
“ஏல… சரவணே.. சார குடோன்ல கொண்டு விடு.. அங்க புதுசா வாங்கின சேரயும் மேசயையும் கொண்டு போடு…”
“குடோனுக்கு மேச சேரு எதுக்கண்ணாச்சி”
“ஏல… கொண்டு போடுன்னா போடு… எதுத்து பேசாத..”
முருகனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது போல் இருந்தது. ஆனால் அங்கே முருகன் இல்லை. வீட்டுக்கு நடையை கட்டிவிட்டார்.
வீட்டின் கொல்லபுறத்திற்கு வந்தார். அங்கே அவரோட கருத்தக் கோழி பக்கத்துவிட்டு மற்ற கோழிகளுக்கு அண்ணாவியா நின்று கொண்டிருந்தது.
திரும்பிப் பார்த்தார்…
வெட்டிப்போட்ட முருங்கை மரத்தின் ஒருபகுதி தளிர்த்து இளம் பச்சையாய் படர்ந்திருந்தது.
அன்றைய கூட்டுக்காக முருங்க கீரையை முருகனின் மனைவி பறித்துக் கொண்டிருந்தாள்.
அதன் அருகே வெட்டிப்போட்ட முருங்கை மரக்கிளையில் வேண்டாத மணிப்பிளாண்ட் கொடி படர்ந்திருந்தது.
“என்னங்க இந்த முருங்க மரக்கட்டய அள்ளிட்டு்ப்போறதுக்கு கடையில இருந்து பையன வரச் சொல்லுங்க. இந்த கொடி எப்படியோ வளர்ந்திருக்கு…”
அந்தக் கொடியை பிடுங்கப்போக மனைவியை தடுத்தார்.
“வேண்டாம்.. அதப்புடுங்காத… இப்போதைக்கு அந்த முருங்க கம்புகள எடுக்க வேண்டாம்.. அப்படியே கிடக்கட்டும்.”
மணி பிளாண்ட் தனது இலைகள் மூலம் மகிழ்ச்சியோடு முருகனுக்கு நன்றி தெரிவித்தது.
…கடையம் பாலன்.
-……………..
இந்தக் கதை ஒரு பத்திரிகை நடத்திய போட்டிக்கு அனுப்பப்பட்டு பரிசுக்கு தகுதியற்றது என்று நிராகரிக்கப்பட்டது.
ஒவ்வொரு பத்திரிகையும் தங்களுக்கு என்று பிரத்யே நடை மற்றும் போக்கை எதிர்பார்ப்பார்கள். அந்த போக்கு இதில் இல்லை என்றே நினைக்கிறேன்.
பல கதைகளின் கரு எனது ஆதங்கத்தில் இருந்து உருவானது. அப்படி உருவான கதையில் இதுவும் ஒன்று.
நன்றி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.