November 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தோல்வியில் வெற்றி கண்ட பெருந்தலைவர்

1 min read

Kamaraj who saw victory in defeat

2/10/2020
தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் முதன்முதலில் தோல்வியை தழுவிய நேரம். பெருந்தலைவர் காமராஜரும் வெற்றிவாய்ப்பை இழந்த காலம். காங்கிரஸ் காங்கிரஸ் தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர். செய்நன்றி மறந்த மக்கள் ஏமாற்றிவிட்டனரே என்று கதறி அழுதனர். ஆனால் காமராஜரோ எப்போதும்போல் சாதாரணமாக இருந்தார். காமராஜரை காணவந்த நிர்வாகிகள் எதிர் கட்சியினரின் பொய்பிரசாரத்தை நம்பி மக்கள் வாக்களிக்காமல் போய்விட்டார்களே என்று கொதித்தனர். ஆனால் காமராஜரோ இதுதான் ஜனநாயகம். சுதந்திரம் வேண்டி போராடியதன் பலனை இப்போது கண்டேன் என்றார். இப்போதுள்ள சில அரசியல்வாதிகளைப் போல போல ஓட்டுப்போடாத மக்களை திட்டவில்லை. கள்ள ஓட்டு போட்டார்கள் என்று கதறவில்லை. தேர்தலில் தில்லுமுல்லு என்று ஒப்பாரி வைக்கவில்லை. அவர்களும் ஆளட்டுமே என்று பெருமிதம் கொண்டார்.
இதனை அடுத்து அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைத்தது. அந்த காலத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லை. மாணவர்கள் வெளியில் தங்கி படிக்கவேண்டிய நிலை. இதனால் ஏழை மாணவர்கள் பலர் படிக்க முடியாத நிலை உருவானது. தற்போது பிரபல டாக்டராக இருக்கும் பாலசுந்தரம்(அப்போது மாணவர்) தலைமையில் மாணவர்கள் அமைச்சர் சத்தியவாணிமுத்துவிடம் சென்று தங்களுக்கு விடுதி வசதி செய்து கொடுக்கும்படி கோரினர். ஆனால் அந்த அமைச்சரால் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் விரக்தியில் இருந்த மாணவர்களிடம் ஒருவர் காமராஜரிடம் முறையிடுங்கள் உங்களுக்கு வழி கிடைக்கும் என்றார். எதிர்க் கட்சியாக காங்கிரஸ் இருக்கும் நிலையில் காமராஜரால் எப்படி வழி கிடைக்கும் என்று என சந்தேகம் கொண்டனர் மாணவர்கள். இதை அந்த நபரிடமே கேட்டனர். காமராஜரிடம் செல்லுங்கள் காரியம் நிறைவேறும் என்றார் அந்த நபர். மாணவர்களோ காமராஜர் போராட்டம் நடத்தி மாணவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வழிவகை செய்வார் என்று நினைத்திருக்கலாம். இப்போதுள்ள அரசியல் கட்சியினர் அதைத்தானே செய்கிறார்கள். கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்பார்கள். ஆனால் காமராஜர் மாணவர்களின் பிரச்சினையை அரசியலாக்க விரும்பவில்லை. அதன்மூலம் அரசியல் லாபம் அடையவும் விரும்பவில்லை. காங்கிரஸ் விசுவாசிகளாக இருந்த தொழில் அதிபர்களை அழைத்தார். அவர்கள் மூலம் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் அறைகள் அமைத்து சாப்பாட்டுக்கும் ஏற்பாடும் செய்தார்.
இந்த செய்தி மறுநாள் பத்திரிகைகளில் வெளிவர முதல் அமைச்சர் அண்ணாதுரை அதிர்ச்சி அடைந்தார். அமைச்சரை அழைத்து கடிந்து கொண்டார். அரசு சார்பில் மாணவர்களுக்கு விடுதிக்கு வழிவகை செய்தார். மாணவர்கள் மகிழ்ந்தனர். கல்வியைத் தொடர்ந்தனர்.
மாணவர்களின் வாழ்வாதார பிரச்சினையை அரசியல் ஆக்காமல் அவர்களுக்கு வழிவகை செய்தவர் காமராஜர். அவர்தான் பெருந்தலைவர்.
அந்த அவதார மனிதன் ஓர் அரசியல் அகராதி. தோற்றாலும் மக்களுக்கு சேவை செய்து சாதனை படைக்கலாம் என்ற காமராஜரின் உயரிய சிறப்பை மக்களுக்கு உணர்த்தவே இறைவன் அவரை தேர்தலில் தோல்வியடையச் செய்தார். பெருந்தலைவா நீ தோல்வியை இன்முகத்துடன் வரவேற்றாய். மக்கள் சேவைக்கு பதவி முக்கியமல்ல என்பதை உணர்த்தினாய். தேர்தலில் தோல்வி கண்டாலும் சாதனை செய்த பெருமகனார். நீ தான் மக்கள் தலைவர். உன் வழியில் நடை பயில இன்னும் ஓர் அரசியல்வாதி பிறக்க வில்லையே என்ற ஆதங்கம் என்னுள். ஆனாலும் அவதாரம் யுகத்துக்கு ஒன்று தானே நடக்கும்.

_ கடையம் பாலன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.