கஞ்சன் என்று சொன்ன வஞ்சகன் யாரோ? சிவாஜி சேவைகள் இதோ….
1 min readWelfare Services of Shivaji Ganesan
1-10-2020: நடிகர்திலகத்தின் 93-வது பிறந்தநாள் பதிவு:
அன்றைய காலத்தில் சிவாஜி கணேசனை கஞ்சன் என்று அவருடைய ரசிகர்களே எண்ணும் அளவுக்கு மறைமுக பிரசாரத்தில் யாரோ ஒருவர்(?) ஈடுபட்டு இருந்தார். எட்டாத கிராமத்தில் இருக்கும் ஒரு சாதாரண ரசிகன் கூட “சிவாஜி சிக்கனமாக இருக்கலாம்… அவரது நடிப்பும் படமும் என்னை நல்லவனாக, நாட்டுப்பற்று உள்ளவனாக மாற்றின” என்றுதான் பெருமைப்பட்டு கொண்டிருந்தான். அன்று சிவாஜி சிக்கனவாதி என்றே நினைக்கும் அளவுக்கு பொய் பரப்பியவர் யாராக இருந்தாலும், சிவாஜி கணேசன் கொடுத்த உதவிகளை இப்போது அறியும் பலரையும் வியக்க வைக்கிறது. பிற்காலத்தில் அவர் தனது வீட்டையே விற்கும் நிலைக்கு வந்ததென்றால் அதற்கு அவர் யாருக்கும் தெரியாமல் செய்த உதவிதான் காரணம்.
அவர் நாட்டுக்காக செய்த சேவைகள் சில…
1962-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-சீனா போரின் போது அப்போதைய பிரதமர் நேருவை சந்தித்து ரூ.40 ஆயிரம் கொடுத்த முதல்நபர்.
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி( பாசமலரின் இந்தி ஆக்கம்) திரைப்படத்தின் அகில இந்தியாவின் ஒருநாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக கொடுத்தார்.
1965-ம் ஆண்டு பாகிஸ்தான் போரிட்டபோது அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் தன்னுடைய நகைகள் அனைத்தையும் (தாலியைத் தவிர) கமலா அம்மையார் கழற்றி கொடுத்தார். அவற்றின் மொத்த எடை 400 பவுன். அதே நாளில் சிவாஜிகணேசன் தனக்கு பரிசாக கிடைத்த 200 பவுன் தங்க பேனாவை கொடுத்தார்.
1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17, 18 -ந் தேதிகளில் நீதியின் நிழல், களம்கண்ட கவிஞன் நாடகங்கள் நடத்தி வசூலான தொகை ரூ.1 லட்சத்தை யுத்த நிதியாக தமிழக முதல் அமைச்சர் பக்தவச்சலத்திடம் கொடுத்தார்.
துணை ஜனாதிபதி ஜாகீர்உசேனிடம் இந்தியா-பாகிஸ்தான் போர் நிதியாக ரூ.15 ஆயிரம் கொடுத்தார்.
1999-ம் ஆண்டு கார்க்கில் போர் நிதியாக தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் ரூ-.1 லட்சம் கொடுத்தார்.
விடுதலை வீரர்கள்
1965-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது போரில் ஈடுபட்டு காயம்பட்ட வீரர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த சிவாஜி கணேசன் தமிழகத்தின் முன்னணி கலைஞர்களை போர் முனைக்கே அழைத்துச் சென்று கலைநிகழ்ச்சி நடத்தி மகிழ்வித்தார்.
நேதாஜி சுபாஷ்சந்திரபோசின் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய பி.என்.பிள்ளை அவர்களை சாந்தி தியேட்டரின் நிர்வாகியாக நியமித்தார்.
சாந்தி தியேட்டரின் நிர்வாகியாக இருக்கும் வேணுகோபாலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார்.
கார்கில் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி கார்க்கில் தீபம் ஏற்றி தியாகிகளை போற்றினார்.
1972-ம் ஆண்டு ராஜா சினிமா மூலம் சென்னை நகரில் வசூலான ஒரு நாள் தொகையை விமானப்படையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு அர்ப்பணித்தார்.
கல்விப் பணி
1958-ம் ஆண்டு முதல் 1961 வரை வீரபாண்டிய கட்டப்பொம்மன் நாடகம் நடித்து (112 முறை) அதன் மூலம் வசூலான தொகையில் நாடக செலவு, உறுப்பினர்கள் சம்பளம் போக ரூ-.32 லட்சத்தை பல கல்லூரிகளுக்கும் நூலகங்களுக்கும் கொடுத்தார்.
1968-ம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியின் கட்டிட நிதிக்காக ரூ.40 ஆயிரம் கொடுத்தார்.
திருச்சியில் உள்ள ஜமால்முகமது கல்லூரி கட்டிட நிதிக்காக 1968-ம் ஆண்டு வியட்நாம் வீடு நாடகம் நடத்தி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்தார்.
சிவாஜி-பிரபு அறக்கட்டளை அமைத்து திரையுலகில் நலிந்த பிரிவில் உள்ள கலைஞர்களின் பிள்ளைகள் பள்ளிப்படிப்பைத் தொடர வழிவகுத்தார். மாநகராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்தினர் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. இதுவரை பல லட்சக்கணக்கான பணம் செலவிடப்பட்டு ஏராளமான ஏழை எளியவர்கள் பயன்பெற்று உள்ளனர்.
மதிய உணவு திட்டம்
1959-ம் ஆண்டு பிரதமர் நேருவிடம் மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ-.1 லட்சம் கொடுத்தார்.
1982-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை பிரபு நேரில் சந்தித்து சத்துணவு திட்டத்திற்காக தன் சார்பில் ரூ-.25 ஆயிரமும், சிவாஜி கணேசன் சார்பில் ரூ-1 லட்சம் கொடுத்தார்.
புயல் வெள்ளம்
1960-ம் ஆண்டு தமிழகம் பெரும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது அப்போதைய முதல் அமைச்சர் காமராஜர் மேற்பார்வையில் சிவாஜி தனி மனிதனாக 1 லட்சம் உணவு பொட்டலங்களையும் 800 மூட்டை அரிசியையும் தானமாக கொடுத்தார்.
1957 முதல் 1961-ம் ஆண்டு வரை மும்பையில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்வி செலவிற்கு ரூ.5 லட்சம் நிதி கொடுத்தார்.
1964-ம் ஆண்டில் மராட்டியத்தில் கொய்னா பூகம்பம் நிதியாக அந்த மாநில முதல்-அமைச்சர் ஒய்.பி.சவானிடம் ரூ-.1 லட்சம் கொடுத்த முதல் நடிகர் சிவாஜி.
1966-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட போது நிதிஉதவியாக ரூ-.10 ஆயிரம் அளித்தார்.
1975-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டபோது ரூ-.1 லட்சம் நிதி வழங்கினார்.
1953-ம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதிக்காக விருதுநகரில தெருதெருவாக சென்று பராசக்தி வசனம் பேசி ரூ-.12 ஆயிரம் வசூலித்து கொடுத்தார்.
1961-ம் ஆண்டு தாம்பரத்தில் காசநோய் ஆஸ்பத்திரி கட்டுவதற்கு பிரதமர் நேருவிடம் ரூ-.1 லட்சம் கொடுத்தார்.
சிலை அமைக்க உதவி
சிவாஜி கணேசன் தன் தலைவரான காமராஜருக்கு பல இடங்களில் சிலை அமைக்க நிதி உதவி செய்தார். ஆனால் அத்தோடு அவரது சேவை நின்றுவிட வில்லை.
1964-ம் ஆண்டு மும்பையில் வீரசிவாஜி சிலை அமைத்துக் கொடுத்தவர் இந்த சிவாஜி கணேசன்.
1968-ம் ஆண்டு சென்னை கடற்கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்க நிதி கொடுத்ததோடு அதற்கு மாடலிங்காக இருந்து போஸ் கொடுத்தவர் சிவாஜி கணேசன்.
1971-ம் ஆண்டு வீரபாண்டிய கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் 47 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி அதில் கட்டப்பொம்மன் சிலை யை நிறுவினார்.
1972-ம் ஆண்டு ஆப்பனூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையை அமைத்துக் கொடுத்தார்.
1975-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி தனது பிறந்த நாள் அன்று அவரது வீட்டிற்கு வந்த பெருந்தலைவர் காமராஜரிடம் பீகார் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.1 லட்சம் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் அவரது பிறந்தநாளையட்டி ரசிகர்கள், மாலை, சால்வைக்குப்பதிலாக பணத்தை கொடுத்தனர். அந்தப் பணத்தையும் பீகார் வெள்ளி நிவாரணத்துக்கு சிவாஜி கணேசன் கொடுத்தார்.
1993-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் லாட்டூரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு நிவாரணமாக ரூ.1 லட்சம் கொடுத்தார்.
கக்கன்
காமராஜரின் தொண்டரான கக்கன் அப்பழுக்கற்றவர். மந்திரி பதவி வகித்தபோதும் ஏழைமையைத் தேடிச் சென்று ஏழ்மையாய் மறைந்தவர். இவரது குடும்பத்திற்கு 1973-ம் ஆண்டு சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி, அப்போது கிடைத்த தங்கப்பதக்கத்தையும் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைத்த ரூ-.15 ஆயிரத்தை கொடுத்தார்.
1972-ம் ஆண்டு காஷ்மீர் மாநில முதல்-மந்திரி மீர் கசிமிடம் அந்த மாநில தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி நிதிக்காக ரூ-.25 ஆயிரம் கொடுத்தார்.
சென்னை பெசன்ட் நகரில் மங்கையர்க்கரசி மகளிர் மன்ற கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தை நடத்தி ஒரு நாள் வசூலை கொடுத்தார்.
அதேபோல் சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமண மண்டபம் கட்ட தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி ஒரு நாள் வசூலைக் கொடுத்தார்.
சென்னை கோடம்பாக்கத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை நலிந்த நடிகர்-நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக கொடுத்தார்.
கோவில் பணி
வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவிலில் மணி அமைக்கும் முழுச் செலவையும் ஏற்றார்.
வல்லக்கோட்டை முருகன் கோவில் திருப்பணிக்காக கிருபானந்தவாரியாரிடம் ரூ.-10,001 நன்கொடையாக கொடுத்தார்.
சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோபில் தெப்பக்குளத்தின் திருப்பணிக்கான முழு செலவையும் இவரே ஏற்றார்.
திருச்சி திருவானைக்கா கோவில், தஞ்சை முத்துமாரியம்மன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களுக்கு யானை வாங்கிக் கொடுத்தார்.
இவை தவிர எத்தனையோ ரசிகர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று உதவி இருக்கிறார். எத்தனையோபேருக்கு படவாய்ப்பை கொடுத்து இருக்கிறார். பலரை பட அதிபராக்கி இருக்கிறார்.
-கே.சந்திரசேகரன் எழுதிய சிவாஜி ஒரு வரலாற்றின் வரலாறு என்ற புத்தகத்தை கையாண்ட கடையம் பாலன்