நடிகை குஷ்பு நாளை பாரதீய ஜனதாவில் இணைகிறார்
1 min read
Actress Khushboo joins Bharatiya Janata Party tomorrow
11/10/2020
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நாளை பாரதீய ஜனதாவில் சேருகிறார்.
நடிகை குஷ்பு
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராக இருப்பவர் நடிகை குஷ்பு. இவர் பல நாட்களுக்கு முன்னதாகவே காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியானவண்ணம் இருந்தது. ஆனால், அந்த தகவல்களை குஷ்பு தொடர்ந்து மறுத்து வந்தார்.
ஆனால், பாரதீய ஜனதா அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக்கொள்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தபோதும் குஷ்பு புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால், அவர் பாரதீய ஜனதாவில் இணைய உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இணைகிறார்
இதை உறுதிப்படுத்தும் விதமாக குஷ்பு குடும்பத்தினர் டெல்லியில் பாரதீய ஜனதா தலைவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், தேவையற்ற தகவல்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் குஷ்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி குஷ்பு நாளை(திங்கட்கிழமை) பாரதீய ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் குஷ்பு அக்கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.