நெல்லை அருகே குழந்தையை எரித்துக்கொன்று பெண் தற்கொலை
1 min read
Woman commits suicide by burning baby near Nellai
15/10/2020
நெல்லை அருகே குடும்பத்தகராறில் பெண் குழந்தையை எரித்துக் கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தகராறு
நெல்லை அருகே மானூரை அடுத்த பள்ளமடையைச் சேர்ந்தவர் ஆறுமுகநயினார் என்ற அமல்ராஜ் (வயது 34). இவர் சென்னையில் ரெயில்வே துறையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், மானூர் அருகே மாவடியைச் சேர்ந்த சுப்பையா-ராமலட்சுமி தம்பதி மகள் பாக்கியலட்சுமிக்கும் (31) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் சென்னையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கங்கா என்ற மகள் இருந்தாள்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) இரவில் அமல்ராஜ் தன்னுடைய மனைவி, குழந்தையுடன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார்.
கொலை-தற்கொலை
நேற்று(புதன்கிழமை) காலையில் அமல்ராஜ் தனது சொந்த ஊரான பள்ளமடைக்கு செல்லாமல், மாமனாரின் ஊரான மாவடிக்கு மனைவி, குழந்தையை அழைத்து சென்றார்.
மாமனாரின் வீட்டில் மனைவி பாக்கியலட்சுமி, குழந்தை கங்கா ஆகியோரை விட்டு விட்டு, அமல்ராஜ் மட்டும் அங்கிருந்து பள்ளமடையில் உள்ள தனது வீட்டுக்கு தனியாக புறப்பட்டு சென்றார். பின்னர் பாக்கியலட்சுமியின் தாயார் ராமலட்சுமி சிறிது நேரத்தில் ரேஷன் கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார்.
அப்போது வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த பாக்கியலட்சுமி திடீரென்று குழந்தை கங்கா மீதும், தனது உடலின் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகிய குழந்தை கங்காவும், பாக்கியலட்சுமியும் அலறி துடித்தனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். உடனே அவர்கள் பாக்கியலட்சுமி, குழந்தை கங்கா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை கங்கா ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
பாக்கியலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பாக்கியலட்சுமியிடம் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார்.
அப்போது அவர், தன்னை பற்றி இணையதளத்தில் கணவர் அவதூறாக பதிவு செய்ததாகவும், இதனால் மனவேதனையில் தீக்குளித்ததாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி இரவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.