மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் கமல்ஹாசன்
1 min read
Kamal Haasan is the chief ministerial candidate of the Makkal neethi maiyam party
16/10/2020
2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அக்கட்சியின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் அடுத்த ஆண்டு (2021) சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும், தேர்தல் அறிக்கை தயாரிப்பது, வேட்பாளர்கள் தேர்வு பற்றியும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்கு பிறகு அக்கட்சி சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வேட்பாளர்கள்
2021 சட்டசபை தேர்தலின்போது தனித்துப் போட்டியிடுவது அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது, வேட்பாளர்களை இறுதி செய்வது, தேர்தல் வெற்றிக்கான வியூகம் அமைப்பது, கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பை கமல்ஹாசனுக்கு அளிக்கப்படுவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் வேட்பாளர்
கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் கூறும்போது சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையத்தின் முதல்-அமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றார்.