கவர்னரை அமைச்சர்கள் சந்திப்பு; இட ஒதுக்கீடுக்கு அனுமதிதர கோரிக்கை
1 min readMeeting of Ministers with the Governor; Permission request for 7.5 per cent quota for government school students
20–/10/2020
கவர்னரை அமைச்சர்கள் சந்தித்தனர். மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடுக்கு அனுமதிதர கோரிக்கைவிடுத்தனர்.
7.5 சதவீத இட ஒதுக்கீடு
மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதாவை தமிழக அரசு கொண்டுவந்தது. அந்த மசோதா கவர்னரின் ஒப்பதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை 5 அமைச்சர்கள் இன்று( செவ்வாய்க்கிழமை) சந்தித்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கேபி அன்பழகன், செங்கோட்டையன், சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் கவர்னரை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
பேட்டி
கவர்னருடனான சந்திப்பிற்கு பின் அமைச்சர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
மருத்துவப்படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கினால் தான், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவராக முடியும்
7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு முதல்-அமைச்சர் அறிவுரைப்படி கவர்னரை சந்தித்தோம்
தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கவர்னரிடம் விளக்கி கூறினோம்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக கவர்னர் உறுதி அளித்துள்ளார்
கவர்னரின் பரிசீலனையில் உள்ள மசோதாவுக்கு கட்டாயப்படுத்த முடியாது. சமூக நீதியை பாதுகாக்க விரைந்து முடிவு எடுக்குமாறு அவரிடம் கூறியுள்ளோம். முடிவு எடுக்க கவர்னருக்கு கால நிர்ணயம் விதிக்க முடியாது.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.