May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தாலிக்கட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை உதறித் தள்ளியப் பெண்

1 min read

The woman who refused to marry at the time of the beating

1/11/2020

தாலிக்கட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை உதறித் தள்ளியப் பெண் தனது காதலனை திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார்.

திருமணம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டக்கண்டி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், கோத்தகிரி அருகே உள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களின் திருமணத்தை மிகவும் எளிமையாக திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 29-ந் தேதி மட்டக்கண்டி கிராமத்தில் திருமண விழா நடந்தது. திருமண விழாவில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

திருமணத்தின்போது அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் மாப்பிள்ளை மாலையும் கழுத்துமாக வந்தார் . அவர் மண மேடையில் அமர்ந்திருந்தார்.
அப்போது மணமகளை உறவினர்கள் மாலை அணிவித்து அழைத்து வந்தனர். மாப்பிள்ளை அருகே மணமகள் அமர்ந்து இருந்தார்.

அந்த குடும்பத்தாரின் வழக்கப்படி மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு, மணமகன் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என்று 3 முறை கேட்க வேண்டும். 3 முறையும் சம்மதம் என்று சொன்ன பிறகே மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட வேண்டும்.

அதன்படி மாப்பிள்ளை தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று பெண்ணிடம் கேட்டார். முதல் 2 முறை கேட்டபோது மணமகள் எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. மணப்பெண்ணுக்க சரியாக கேட்கவில்லை என்று நினைத்த மணமகன், 3-வது முறையாக சத்தமாக என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டார்.

மறுப்பு

உடனே மணமகள் உங்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் இல்லை என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ஏன் திருமணம் வேண்டாம் என்று கேட்டனர்.

அப்போது பேசிய மணமகள், நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன். ஏற்கனவே அவர் திருமணமானவர். அவருக்கு குழந்தை உள்ளது. எனக்காக அவர் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டார். அவருடைய குழந்தைக்கு நான்தான் தாயாக இருந்து பராமரிப்பேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன். அவர் எனக்காக காத்து இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்துவிடுவார் என்று கூறி மணமேடையை விட்டு இறங்கினார்.

உடனே அந்த மணப்பெண்ணின் உறவினர்கள் அவரை அடிக்க முயன்றனர். அந்த பெண்ணின் பெற்றோரும் தன் மகளிடம் எப்படியாவது திருமணத்திற்கு சம்மதி என்று மன்றாடினார்கள். அதற்கு அவர், எனது காதலரை தான் நான் திருமணம் செய்வேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

உடனே உறவினர்கள் மணமகனை பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்திலேயே கூறி இருக்கலாமே என்று கேட்டனர்.
அதற்கு அந்த பெண், எனக்கு பேசுவதற்கு யாரும் அனுமதி கொடுக்கவில்லை. ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு, பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு, அவருக்கு துரோகம் செய்ய எனக்கு மனமில்லை. எனவே நான் சென்னையை சேர்ந்த எனது காதலரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

வலைதளத்தில் ….

இந்த காட்சியை திருமண விழாவுக்கு வந்திருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டார்.

தற்போது அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. மஞ்சூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றுக்கூறி மணமகள் மணமேடையில் இருந்து எழும்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.