June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

எங்க வீட்டு முருங்கை புராணம் / க.முத்துமணி.

1 min read

History of my drum stick tree By K.Muthumani

முருங்கை மரம், முருங்கைக்காய், முருங்கைக்கீரை இவை நாம் நன்கறிந்த சர்வசாதாரணமான பொருள்கள் என்று உறுதிபடக்கூறலாம். ஒரு முருங்கை மரத்தை உருவாக்க நாம் பெரிதாக எந்த ஒரு முயற்சியையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.முருங்கை மரத்தின் ஒரு சிறிய குச்சியை வெட்டிக் கொண்டு வந்து , நம் வீட்டில் கொல்லைப்புறத்தில் நட்டு வைத்தால் போதும்.மிகப் பெரிய மரமாக உருவாகி ஆறே மாதத்தில் காய்க்கத் தொடங்கி விடும்.

எங்கள் வீட்டில் மேற்குப் பகுதியில், காலி இடத்தில் ஓரிரு பூச்செடிகளைக் கொண்டு,சிறு தோட்டம் போல ஒன்றை அமைத்து வைத்திருந்தேன். கொய்யா, பப்பாளி, சப்போட்டா, வேம்பு மேலும் சில மரங்களும் அங்கு நிரம்பியிருக்கும், அந்தப் பகுதியை நாங்கள் தோட்டம் என்றுதான் அழைப்போம். காலையில் அச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி மகிழ்வது.மாலையில் ஓய்வு நேரத்தில் அந்த இடத்தில் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் பெஞ்ச் அல்லது ஒரு சிறிய ஊஞ்சலில் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பது எல்லாமே இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி.
\
என் மாணவன் ஒருவன், ஒரு நாள் அவனுடைய வீட்டிலிருந்து கொண்டு வந்த ஒரு முருங்கைக் குச்சியை எங்கள் வீட்டுத்தோட்டத்தில், நட்டு வைத்து விட்டு, “இது நன்றாக க் காய்க்கும் ஐயா, காய் மிகவும் நீளமாக இருக்கும். அத்துடன் மிகவும் ருசியாக இருக்கும்”. என்று சொல்லிவிட்டுப் போனான். அன்றைய மாணவர்களுக்கு இது போன்ற குணங்கள் உண்டு என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.
அது குறுகிய காலத்தில் வளர்ந்து பூத்த நாளை மறக்க முடியாது. அந்த வெள்ளைப் பூக்களைப் பார்த்து அவ்வளவு மகிழ்ச்சி எங்களுக்கு. அன்று முழுவதும் அதைப்பற்றியே பேசி காய்க்கும் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். முதல் பிஞ்சு பச்சை நிறத்தில் எலி வால் போல தொங்குவதைப் பார்த்து, அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்த மரம் தந்த காய்களை சமைத்து உண்ட போது அதன் சுவையை நினைத்து மேலும் மேலும் மகிழ்ச்சி அடைந்தோம். நம் மரத்துக் காய், என்று பெருமை வேறு.
நீண்ட காலம் அந்த மரம் காய் காய்த்து, உண்மையிலேயே நல்ல தனிப்பட்ட சுவையுடன் கூடிய முருங்கைக் காய்களைத் தந்து கொண்டிருந்தது அந்த மரம். அந்தப்பகுதியில் வாழ்வோர் பலரும் எங்கள் வீட்டு மரத்தில் இருந்து குச்சிகளை வாங்கிச் சென்று அவர்கள் வீட்டில் தனியாக மரங்களை உருவாக்கியதும் ஒரு கதை.

எங்கள் வீடு தெற்கு நோக்கிய வீடு. வீட்டிற்கு மேற்குப் புறத்தில் இந்தச் சிறிய தோட்டம். அதனை அடுத்து ஒரு நண்பரின் வீடு. அது கிழக்குப் பார்த்த வீடு.எங்கள் வீட்டிற்கும் அவரது விட்டிருக்கும் இடையில் பொதுவான சுற்றுச்சுவர் ஒன்று. இருவரும் சேர்ந்து செலவு செய்து கட்டி இருக்கிறோம்.
அவர், அந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்திருந்தார். அவ்வீட்டில் வாடகைக்குக் குடிபுகுந்த மனிதர் ஒருவர் தினமும் காலையில் அலுவலகம் செல்லும்போது எங்கள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு,” சார் முருங்கை மரம் வாசலில் நிற்கக்கூடாது. வெட்டி விடுங்கள்” என்று கூறுவார்.
பரவாயில்லை யார் என்றே தெரியாது நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஆனால் இவருக்கு நம் மீது எவ்வளவு அக்கறை என்று மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். ஆனாலும் ஒரு பதிலும் சொல்ல மாட்டேன்.ஆனாலும் இதையே வழக்கமாக வைத்திருந்த அவரிடம்,ஒரு நாள் பேசினேன்.”அண்ணே நான் ஒன்றும் வாசலில் முருங்கை மரத்தை வைக்கவில்லையே! மேற்குப்பகுதியில்தானே வைத்திருக்கிறேன்”. மேலும் எங்கள் வீட்டு வாசல் தெற்கு நோக்கி அல்லவா இருக்கிறது?. என்று கேட்டேன்.
அதற்கு அவர்,” உங்கள் வீட்டு வாசலில் இல்லை சார், அது எங்க வீட்டு வாசலில் இருக்கிறது” என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. நம்வீட்டு சுற்றுச் சுவருக்குள் இருக்கும் இந்த மரம் அவர்கள் வீட்டு வாசலில் எப்படி இருக்கும்?. சந்தேகத்தை அவரிடமே கேட்டேன். “சார் மரம் உங்கள் வீட்டுக்குள் தான் இருக்கிறது. ஆனால் எங்கள் வீடு கிழக்குப் பார்க்க இருப்பதால், காலையில் எழுந்தவுடன் கண்ணில் அந்த மரம்தான் படுகிறது. அது சகுனப்படி சரி இல்லை”.முருங்கை மரத்தின் முகத்தில் தினசரி விழிப்பதால் எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி வீட்டில் சண்டை வந்து கொண்டே இருக்கிறது. அதுபோக,பிள்ளைகள் படிப்பு சரி இல்லை. ரெண்டு பேரும் லாஸ்ட் ரேங்க். அதுகளுக்கு நோய்நொடி வேறு வந்துவிடுகிறது”. என்று ஏதேதோ புலம்பினார்.
இவர்களுக்குள் சண்டை வர நம் வீட்டு முருங்கை மரம்தான் காரணமா? இவரது பிள்ளைகள் படிக்காமல் போவதற்கும் நம் வீட்டு முருங்கை மரத்திற்கும் என்ன சம்பந்தம்? எனக்குச் சிரிப்பு வந்தாலும் கூட, அடக்கிக்கொண்டு,” காய்க்கிற மரத்தை எப்படி அண்ணே வெட்டுவது?” என்று அவரிடமே கேட்டேன்.”

” முருங்கை மரத்தை வெட்டுவது ரொம்ப ஈஸி சார். சொன்னால் நானே பத்து நிமிடத்தில் வெட்டிச் சாய்த்து விடுவேன்”. என்று மீசையை முறுக்கினான்.
என்னடா இந்த ஆள் இப்படி இருக்கிறான்? என்று எனக்குள் ஒரு கேள்வி பிறந்தது. அதே நேரத்தில் நாம் எந்த வகையிலும் பிறருக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று சிந்தித்தேன். மேலும் தினமும் காலையில் வீட்டு வாசலுக்கு வந்து குறி சொல்வது போல், தவறாமல் சொல்லி விட்டுப் போவதை, இவன் நிறுத்த வேண்டுமானால் நாம் மரத்தை வெட்டி ஆக வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஆனால் அவரது அறியாமையை எண்ணி சிரிக்காமல் இருக்க முடியவில்லை. “என்ன சார் சிரிக்கிறீங்க?” என்று கேட்டுவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு,” காலா காலத்துல வெட்டுற வேலையைப் பாருங்க சார்” என்று சொல்லிக்கொண்டே போனார்.
ஒருநாள் மாலை பள்ளியிலிருந்து வந்த போது முருங்கை மரத்தில் ஏதோ ஒரு அசைவு தென்பட்டது. அணில்கள் விளையாடுகின்றன, என்று எண்ணி சற்றுக் கூர்ந்து பார்த்தேன். காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்த காய்களை, அவர்தான் சுகருக்கு அந்தப் பக்கம் இருந்து பறித்துக் கொண்டிருந்தார் ஒரு குச்சியின் உதவியோடு. பக்கத்தில் நின்று அவர் மனைவி காய்களை வாங்கி மடிக்குள் திணித்துக் கொண்டிருந்தார்கள். ஓ.. இரண்டுகால் அணில்கள்!!!.
நான் லேசாக இருமிவிட்டு அதைக் கண்டும் காணாததுபோல் வீட்டிற்குள் சென்று விட்டேன்.
கல்லூரி முடிந்து திரும்பி வந்த என் மனைவியிடம் நடந்ததைச் சொன்னேன் “காலையில் முருங்கைமரம் கண்ணில் தெரிந்தால் அது அபசகுனம், ஆனால் மாலையில், அதே மரத்தில் காயை நமக்குத் தெரியாமல் பறித்துத் தின்பது எந்த ஊர் நியாயம்?”என்றாள் அவள்.
மறுநாள் காலையில் எங்கள் வீட்டைத் தாண்டி போனபோதும் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார் அந்த விந்தைமனிதர். அதன் பிறகு மரத்தைப்பற்றி ஒருநாளும் அவர் என்னிடம் பேசவில்லை. அப்படியானால் அவர்கள் காய் பறிக்கும் போது நான் பார்த்துவிட்டேன், என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, என்பதை நான் புரிந்து கொண்டேன். பிறகு சில மாதங்களில் அவர்கள் வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட்டார்கள் என்பது வேறு(நல்ல)செய்தி.

பின்னொருநாள், நீண்ட காலம் கழித்து அதே மனிதரைக் காய்கறி வாங்கும் இடத்தில் காண நேர்ந்தது.” வணக்கம் சார்”. என்றார்.
” என்ன வீடு மாற்றி விட்டீர்களா?” என்று கேட்டேன். “ஆமா சார்”, என்று சொன்னவரிடம், இப்போது வீட்டில சண்டை ஏதும் இல்லையே” என்று கேட்டேன்.
“அது எப்படி சார் இல்லாமல் இருக்கும். தினசரி சண்டை நடந்து கொண்டுதான் இருக்கிறது. பேய்க்கு வாக்கப்பட்டா என்ன நடக்கும்?” “பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்களா?” என்று அடுத்த கேள்வியை விடுத்தேன்.
“மக்குப் பயபுள்ளைங்க இன்னும் கடைசி ரேங்குதான்”. என்றார். “அப்படியானால் இந்தக் கஷ்டங்களுக்கு எல்லாம் காரணம் முருங்கை மரம் காரணம் இல்லை, அப்படித்தானே?” என்று கேட்டேன். “அது அப்படி இல்லை சார்.”. என்று சொல்லத் தொடங்கியதும்,” ஒருநாள் எங்கள் மரத்தில் முருங்கைக்காயை பறித்தீர்கள் அல்லவா ?”என்று கேட்டேன். “ஐயையோ” பதறி விட்டார் .”இல்லை முருங்கைக்காய் பறிக்கவே இல்லை சார். கொஞ்சம் முருங்கைக்கீரை பறிப்போம் சுகருக்கு நல்லது என்று. கீரை பறிக்கும்போது இரண்டு காய்களும் சேர்ந்து வந்துவிட்டது.” முருங்கைக்காய் யாருக்கு நல்லது?” என்று கேட்டேன்.” சுகருக்கு நல்லது” என்றார்.” சுகர் என்றால் யார்?” என்று கேட்டேன்.” இல்லை என் மனைவிக்கு சர்க்கரை வியாதி சூப் போட்டு குடிப்போம்”. என்றார்.
“உங்கள் மனைவிக்குத் தானே சுகர். பிறகு நீங்கள் ஏன் சூப் குடிக்கிறீர்கள் ?” என்று கேட்டதும் “சுகருக்கு மட்டும் இல்லை சார் .மொத்தத்தில் முருங்கைக்கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது அதனால் தான் எல்லோரும் முருங்கைக்கீரை சாப்பிடலாம்” என்று ஒரு பெரிய மண்டையை ச் சொறிந்தார். அவருடைய காய்கறிப் பையைப்பார்த்தேன். ஒரு கட்டு முருங்கைக்கீரை இருந்தது.
“இது யார் வீட்டில் பறித்தது ?”என்று கேட்டேன். “இல்ல சார் இப்போது குடி போயிருக்கும் வீட்டுப் பக்கத்தில் மரமே இல்லை. அதனால் இப்போதுதான் கடையில் வாங்கினேன்” என்றார். வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்குவதற்கு நான் பட்ட பாடு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், பொறியாளர் ஒருவர் மூலம் வீட்டை கொஞ்சம் மாற்றி அமைக்கும் பணியைத் தொடங்கினோம். இரண்டு மாதங்களில் முடித்து தருகிறேன் என்று சொன்னவர், வெகு விரைவாக முடித்துவிட்டார் அதாவது ஒரே வருடத்தில்!!! அப்போது அந்த முருங்கை மரத்தை வெட்டி அகற்ற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட, ஒருவாரச் சிந்தனைக்குப் பிறகு, வெட்டி விடலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.சரி வெட்டிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு நானும் என் மனைவியும் பணிக்குச் சென்று விட்டோம்.
மாலையில் திரும்பி வந்த பார்த்த போது, ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு மேலாக நின்றிருந்த மரம் அந்த இடத்தில் இல்லை. ஒரு வெறுமை மனதில் ஒரு வலி.அது வேருடன் தோண்டி எடுக்கப்பட்ட இடத்தையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து, வீட்டு வேலை செய்த ஒரு பெரியவர் என்ன சார் பார்க்கிறீங்க மரத்தை வெட்டி விட்டோமே என்று வருத்தமா?” என்று கேட்டார். தலையை மட்டும் ஆமாம் என்பது போல் ஆட்டினேன். லேசாக சிரித்த அவர் “கொஞ்சம் திரும்பி இந்தப் பக்கம் பாருங்கள்” என்றார் உடனே அவசரமாக த்திரும்பி த் தெற்குப் புறம் பார்த்தேன் தெற்குப் புறம் சுற்றுச் சுவரை ஒட்டி, வேரோடு தோண்டப்பட்ட மரத்தின் அடிப்பகுதி மட்டும் இலைகளை எவையும் இல்லாமல் அங்கே ஊன்ற.. ஓடிப்போய் தொட்டுப் பார்த்தேன்.”வருத்தப்படாதீர்கள் சார் மீண்டும் தழைத்து வந்துவிடும்.” என்றார் அவர். “நல்ல மரத்தை ஒரேயடியாக அழிக்க வேண்டாம் என்று கருதி இங்கே வேரோடு வைத்திருக்கிறோம். கண்டிப்பாக வந்துவிடும்”. என்றார்.
வெகுநாட்கள் அது வெறும் கட்டையாக நின்றது… தொடர்ந்து தண்ணீர் மட்டும் ஊற்றப்பட்டு வந்தது. ஒரு நாள் நல்ல மழை நேரம் காலையில் பார்த்தபோது பச்சை பச்சையாக மரத்திலிருந்து குருத்துகள் முளைக்கத் தொடங்கின.. நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மீண்டும் முருங்கை மரம் வருகிறது.. சடசடவென்று முன்பை விட படு வேகத்தில் மரம் வளர்ந்து… சுற்றுச் சுவருக்கு உள்ளும் வெளியிலும் தன் கிளைகளை விரைந்து பரப்பியது… நாட்கள் ஓடின மரம் பூத்துக் குலுங்கியது.. உண்மையைச் சொன்னால் முன்பைவிட இப்போது காய்த்து த் தள்ளி விட்டது என்று சொல்லலாம். நாம் அதை நினைத்து வருத்தப் பட்டது அதற்குப் புரிந்து இருக்குமோ என்னவோ? நம்மை மகிழ்ச்சிப்படுத்த அது மிகவும் அதிகமான விளைச்சலைத் தந்தது. மரம் அதிகமாக பூத்து தள்ளியதால் முருங்கை மரத்தில் தேன் எடுப்பதற்காக எங்கள் வீட்டுக்கு பின்புறம் உள்ள இரும்புக் கம்பியில் தேனீக்கள் கூடுகட்டி வசிக்கத் தொடங்கி விட்டன. அங்கேயே தேன் எடுத்து விட்டு பக்கத்திலேயே வசிப்பிடத்தை உருவாக்கிக் கொண்டன. அதைப் பார்த்து மேலும் ஒரு மன மகிழ்ச்சி ஏற்பட்டது. மாலை நேரத்தில் வண்ணத்துப்பூச்சிகள் மரத்தைச் சுற்றி வட்டமிடும் காட்சி அற்புதம் அற்புதம். ஒரு நேரத்தில் 200 காய்கள் பறிக்கலாம் கொத்துக் கொத்தாய். ஒருவேளை அன்று வேரோடு அதை அகற்றி தூக்கி எறிந்து இருந்தால்?? இந்தக் கேள்விதான் மனதிற்குள் தோன்றியது.
மரங்கள் இறைவன் தந்த வரங்கள் அல்லவா?
அப்போது ஒருநாள் தற்செயலாக யூ ட்யூபில் வீடியோ ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதில் வட மாநிலம் ஒன்றில், எந்த மாநிலம் என்று சரியாக நினைவில்லை. ஒருவர் தமிழர் ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கிறார். அவர் ஓரளவிற்கு தமிழில் தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார். எனவே அவர் பேசும் தமிழ் புரிகிறது.
அவர் ஒரு தோட்டத்தை இவருக்குச் சுட்டிக்காட்டுகிறார்.அங்குள்ள ஒவ்வொரு செடி கொடிகளையும் பெயர் சொல்லி அவற்றின் நன்மைகளை எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகிறார் இவரும் சந்தேகங்களை கேட்டு கேட்டு தெரிந்து கொள்கிறார். அப்படியே வந்தவர்கள் ஓரிடத்தில் நிற்கிறார்கள். அப்போது அந்த மனிதர் இப்போது நீங்கள் பார்க்கப்போவது கடவுள் மரம். நாங்கள் கடவுளாக அதை மதிக்கிறோம் வணங்குகிறோம்.
ஆனால் உண்மையில் தமிழ்நாட்டில் அந்த மரம் அதிகமாக இருக்கிறது ஆனால் அதன் அருமை உங்களுக்கு தெரிவதில்லை. பேய் மரம், பிசாசு மரம் வீட்டில் வைக்கக் கூடாது என்றெல்லாம் எதை எதையோ சொல்லி அந்த மரத்தை நீங்கள் வெறுத்து வருகிறீர்கள், என்று சொல்லிக்கொண்டே முருங்கை மரத்தின் அருகில் வந்தார். ஆகா இது முருங்கைமரம் அல்லவா? என்றார் தமிழர்.
வெறுமனே அப்படி சொல்லாதீர்கள் இது கடவுள் மரம் ஏனென்றால் இந்த மரத்தில் மனிதனுக்குப் பயன்படாத பொருளே இல்லை அதன் இலை, பூ, காய், பட்டை, பிசின் அனைத்துமே மனிதனின் பல்வேறு நோய்களை நீக்கி உயிர் வாழச் செய்யும் மருந்தாக பயன்படுகின்றன என்று பெரிய விளக்கம் அளித்தார்.
நமக்குத் தெரியாத பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் அந்த மனிதர் பேசினார். ஏதோ பாக்கியராஜ் ஒரு சினிமாவில் முருங்கைக்காயை பற்றி ஏதோ ஒரு செய்தியை காட்சியை அமைக்க அந்தக் காலகட்டத்தில் அது தமிழ் நாடு முழுவதும் பேசப்பட்டது மேடைகளில் முதற்கொண்டு பட்டிமன்றங்களில் அதை வைத்துக்கொண்டு சிரிக்க வைத்துக் கொண்டிருந்தோம். அந்தப் படம் வந்த புதிதில் காய்கறி சந்தைக்கு சென்று முருங்கைக்காய் வாங்குவதால் கடைக்காரர்கள் ஒருமாதிரி பார்ப்பார்கள் கள்ளச் சிரிப்போடு. மாணவர்கள் யாராவது கடையில் பார்த்தால் நேற்று பார்த்தேன் ஐயா முருங்கைக்காய் வாங்கினீர்கள் என்று வாயை பொத்திக்கொண்டு சிரிப்பது உண்டு. முருங்கைக்காய் வாங்கிக்கொண்டு வருவதை நண்பர்கள் பார்த்தால் சார் என்ன முருங்கைக்காய் நடக்கட்டும்.. என்று கேலி செய்வார்கள்.
அதன் பிறகு மார்க்கெட்டில் முருங்கைக்காய் வாங்கினால் கூட யாருக்கும் தெரியாமல் மறைத்து வீட்டுக்கு கொண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது முருங்கைக்காயை முதலில் போட்டு அதன் மீது வகைகளை அடுக்கி கொண்டு வருவதைப் பார்த்தால் கடையில் வாங்கி கட்டுபடி ஆகாது என்று வீட்டில் மரம் வைத்து வளர்த்து விட்டீர்களா என்று கேட்பார்கள் இப்படி எல்லாம் மேடைகளில் ஜோக் ஆகிப்போனது முருங்கைக்காய்.

இடையில் ஒரு காலம் மூட்டுவலி என்று மருத்துவரை பார்க்க சென்றபோது மருந்தெல்லாம் கொடுத்துவிட்டு வாரம் இரண்டு முறை முருங்கை சூப் போட்டு குடியுங்கள் என்று சொன்னது நினைவில் வந்தது அண்மையில் வயிற்றுக் கோளாறு என்று ஒரு அக்குபஞ்சர் டாக்டரை பார்த்தேன் பெண் மருத்துவர் வாரம் இரண்டு முறையாவது முருங்கை சூப் குடிக்க வேண்டும் சார் வயிற்றில் அல்சர் இருக்காது என்று சொன்னார்கள். நண்பர் ஒருவர் ஒரு கை போக்கு ஒன்று சொன்னார். அரிசியையும் முருங்கை இலையையும் அரைத்து காயப்போட்டு அத்துடன் சில பொருட்களை சேர்த்து திரித்து மாவாக்கி வைத்துக்கொண்டு நாள்தோறும் காலையில் அருந்தி வாருங்கள் எல்லா நோயும் தீர்ந்து விடும் அதை சில நாட்கள் நான் காலையில் உண்டால் எனக்கு ரத்தத்தில்சர்க்கரை அளவும் ரத்த அழுத்தமும் சரியான அளவிற்கு வந்துவிட்டன.
இவையெல்லாம் நினைவுக்கு வர மேலும் முருங்கையைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒரு தேடல் நடத்தினேன்.

Moringa oleifera என்பது முருங்கை மரத்தின் தாவரவியல் பெயர்.. அதிலேயே மோரிங்கா என்று முருங்கையின் பெயர் வந்துவிடுகிறது. தமிழ்நாட்டில் வளரும் முருங்கை மரங்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. யாழ்ப்பாண முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை, குடுமியான்மலை முருங்கை ,பெரியகுளம் முருங்கை, திண்டுக்கல் முருங்கை, இவையாவும் தமிழ் சார்ந்த பகுதிகள். எனவே முருங்கை மரம் தமிழனின் மரம். இப்படி ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு சுவை உண்டு. காய் பார்ப்பதற்கு வெளித் தோற்றத்திலும் வேறுபடும். மரம் கூட ஒவ்வொன்றிற்கும் உயரம் போன்ற விஷயங்களில் மாறுபாடு இருக்கும். ஆனால் மருத்துவக் குணம் மாறாது. ஒரே நேரத்தில் 200 முதல் 400 காய்கள் வரை இம்மரங்கள் காய்க்கும்.
முருங்கை மரத்தின் ஒட்டுமொத்த பயன் என்னவென்று சொன்னால், நஞ்சு முறிவு அல்லது நஞ்சு எதிர்ப்பு. நம் உடலுக்குள் போன விஷத்தை வேலை செய்ய விடாமல் தடுக்கும் ஆற்றல் முருங்கை மரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் உண்டு. குறிப்பாக முருங்கை மரத்தின் பட்டையிலிருந்து வரும் சாறு, பாம்பின் விஷத்தைக் கூட வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தும் என்று கூறுகிறார்கள். பாம்பு கடித்தவுடன் முருங்கை மரப்பட்டையின் சாற்றைக் கொடுத்தால் விஷம் கட்டுப்படும்.
உடலில் தேய்த்துக் குளிப்பதற்குப் சோப்புக்குப் பதிலாக முருங்கைப் பட்டையை தேய்த்துக் குளித்தால் உடலில் உள்ள தீமை செய்யும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டுவிடும். தோலும் மென்மையாகும். வேர் முதல் தலை வரை பயன்படும் இம்மரத்தைக் கற்பகத்தரு, பிரம்ம விருட்சம் என்றெல்லாம் அழைத்தார்கள். முருங்கை மரத்தின் பூ காம இச்சையைப் பெருக்கும். முருங்கை மரத்தை விந்து கட்டி மரம் என்று கூட அழைக்கிறார்கள் என்றால், காமெடி மூலம் பாக்கியராஜ் சொன்ன கருத்து கூட உண்மையாகத்தான் இருக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதோர்க்கு முருங்கைப்பூ கடவுள் கொடுத்த வரம்.முருங்கைக்காய் மலச்சிக்கலைப் போக்கும் ஆஸ்துமாவைக் குணமாக்கும் மூல நோயைத் தீர்க்கும். கல்லீரல், கணையம் இவற்றைப் பாதுகாக்கும். மார்பு சளியை அகற்றும்.
முருங்கை மரத்தின் அனைத்துப் பகுதிகளும் பயன்பாடு மிக்கவை. ஆனாலும் அவற்றுள் முதன்மையானது மிக முக்கியமானது முருங்கையின் கீரைதான். கீரை இரும்புச்சத்து மிக்கது. ரத்தசோகை நோயை நீக்கும். விக்கல் ,கண்ணோய், உதிரப்போக்கு இவற்றைக் குணமாகும். தாய்ப்பால் பெருக்கும் ,வயிற்றுப்புண், நீர்க்கடுப்பு, அஜீரணம், நீர்ச் சுருக்கு, சொட்டு சொட்டாக நீர் பிரிதல் இவற்றையெல்லாம் குணமாக்கி உடல் சூட்டை த் தணிக்கும் பித்தத்தின் அளவை குறைக்கும். தோல் பளபளப்பை உண்டாக்கும். கபம் தீரும். முருங்கையின் பூ நரம்புத் தளர்ச்சி நோய்க்கு நல்ல மருந்து.பெண்கள் வாரம் இரண்டு முறையாவது உணவில் முருங்கைக் கீரையை சேர்த்துக்கொள்வது அவசியம் . வைட்டமின் B,E,K மூன்றும் முருங்கைக் கீரையில் அதிகம் புரதச்சத்து அதிகம் புரோவீட்டமின்A. எனப்படும் பீட்டா கரோட்டின் நிறைந்தது முருங்கைக்கீரை. இப்போது யோசியுங்கள் இவ்வளவு சத்தும் இவ்வளவு மருத்துவ குணமும் கொண்ட வேறு ஏதாவது ஒரு தாவரத்தை நம்மால் இனம் கண்டு கொள்ள முடியுமா? அதுவும் சாதாரணமாக நாம் வீட்டில் அல்லது வீட்டருகில், கண்டுபிடிக்க முடியுமா? மூலிகைகளைத் தேடி ,காட்டுக்குள் அலைய வேண்டும் அல்லவா?. ஆனால் நம் வீட்டுக்குள்ளேயே நம்மைத் தேடிவந்து இருக்கிறது முருங்கை மரம்.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் என்று வள்ளுவர் சொன்னது ஒருவகையில் முருங்கை மரத்தைக் குறிக்கிறது.
வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவாக வெளிநாடுகளில் முருங்கைக்கீரை வழங்கப்படுகிறது. நாம் பிராய்லர் சிக்கன் சாப்பிட்டுக் கொண்டே இருப்போம். சீனாவில் ரத்த சுத்திகரிப்பு மருந்தாக முருங்கைக்கீரை பயன்படுகிறது. வலிமை மிகுந்த கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்படுகிறது.முருங்கை ரசம் வைத்து குடித்து வந்தால் தோல் வியாதிகள், முகப்பரு குணமாகிவிடும்.
அரபு நாடுகளில் கேப்ஸ்யூல் வடிவத்தில் முருங்கைக்கீரை அடைத்து மருந்தகங்களில் விற்கப்படும் விலை உயர்ந்த பொருள். 100 தினார் என்கிறார்கள் அதன் விலை. நம்முடைய பண மதிப்பு எவ்வளவு என்று கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.அது நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது அதை வெட்டி எறிந்து விடு என்று கூறுகிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குக் காரணம்.அதுவும் பக்கத்து வீட்டில் வாடகைக்கு இருக்கிறவன், எங்கள் வீட்டு மரத்தை வெட்டச் சொன்னான் அல்லவா? அதை நினைத்தால் இன்னும் கோபம் கோபமாக வருகிறது.. இத்தனைக்கும் மரத்தில் காய் பறிக்கும் போது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அவற்றில் சில காய்களை கொடுத்து விடுவோம்.
வேதாள மரம், விக்ரமாதித்தன் வேதாளம் தொங்கிக்கொண்டிருக்கும் பேய் மரம் என்றெல்லாம் இம்மரத்தைக் கூறுவது ஏன்? இவ்வளவு பயனுள்ள முருங்கைய மரத்தின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், அதற்குப் பலம் மிகவும் குறைவு. தொட்டாலே மரம் உடைந்துவிடும் அளவிற்குத்தான் அதனுடைய வலிமை. ஆகையால் வீட்டு அருகில் வைத்தால், குழந்தைகள் விளையாட்டாக மரத்தில் தொங்கி விளையாடும்போது, மரம் ஒடிந்து மேலே விழுந்து விடும் ஆபத்து வரக்கூடும், என்பதால் ஒதுக்குப்புறத்தில் வைக்கச்சொல்லி, பேய் மரம் வாசலில் வைக்காதே என்று சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள்.மேலும் முருங்கை மரத்தில் ஒரு வகை புழு வந்துவிடும் அது மேலே பட்டால் உடலில் அரிப்பு ஏற்படும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மரத்தை விலக்கி வைத்ததற்கு ஆனால் உண்மை என்னவென்று சொன்னால் மற்ற மரங்களைதத் தேடி போகாத புழுக்கள் முருங்கையைத் தேடி வருவது ஏன்? முருங்கை மரத்தில் சத்துகள் இருக்கின்றன. அவை நோயை நீக்குகின்றன என்று புழுக்களுக்கு உண்மை தெரிந்திருக்கிறது என்பது தானே காரணம்.
” முருங்கை வைத்தவன் வெறுங்கையோடு போவான்’ என்று ஒரு பழமொழியைச் சொல்லி நம் மதியை மயக்கி இருக்கிறார்கள். முருங்கை மரத்தை வைத்து வளர்ப்பவன் கையில் ஒன்றுமில்லாமல் வறுமைக்கு ஆளாகிப் போய்விடுவான் என்று பொருள் கொண்டு பயந்து போகிறார்கள நம்பிக்கை உள்ளவர்கள். இதுவும் சற்று வேடிக்கையாகத்தான் இருக்கிறது முருங்கை மரம் வைத்தவன்தான் போகும்போது வெறும் கையோடு போவானா? முருங்கை மரத்தை வளர்க்காதவன் எல்லாம் போகும் போது எதைக் கொண்டு போவான்? இதை யாராவது யோசித்தார்கள்? வெறுங்கையோடு வந்து யாரும் வெறுங்கையுடன் போகப்போகிறோம். அதற்கு முருங்கை மரத்தைச் சொல்லி பயனில்லை. கோவிட் 19 நோய் வரும் காலங்களில் எங்கள் தெருவில் வசிக்கும் பலரும் எங்கள் வீட்டு முருங்கை மரத்தில் வந்து எங்களிடம் கேட்காமலேயே கீரையைப் பறித்து செல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. நாங்களும் ஒன்று செல்வதில்லை கேட்டாலும் பறித்துக் கொடுப்போம். நோய் எதிர்ப்பாற்றலை முருங்கைக்கீரை கொடுக்கிறது.
நான் கொஞ்சம் சிந்தித்தேன் அப்படியானால் இந்தப் பழமொழிக்கு வேறு ஏதாவது பொருள் இருக்கும். முருங்கையை வைத்தவன் வெறுங்கையோடு போவான் . சிந்தனையின் முடிவில் எனக்குத் தோன்றியது முருங்கை மரம் மனித உடலில் அனைத்து நோய்களையும் விஷங்களையும் நீக்கி நம்மை இளமைப் பொலிவுடன் வைத்திருப்பதால் வயதான காலத்தில் கூட கையில் குச்சியை ஊன்றி நடக்க வேண்டிய அவசியம் இல்லாமல் வெறும் கையோடு நிமிர்ந்து திடமாக வீறுநடை போட்டு நடப்பான். இளமையோடு இருப்பான் . என்பதைத்தான் முருங்கையை வைத்தவன் வெறுங்கையோடு போவான். மற்றவர்கள் கையில் கோலூன்றி சக்கொண்டு போவார்கள் என்பதை உள்ளடக்கமாக வைத்து சொல்லியிருப்பார்கள் நம் முன்னோர்கள்.

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை. யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை. யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி. யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே என்பதைப்போல எங்கள் வீட்டை தாண்டி குறிப்பிட்ட நேரத்தில் பசு மாடுகள் சில வரக்கூடும். அந்த நேரத்தில் அவற்றிற்கு எதைக் கொடுப்பது என்று தேடுவதில்லை உடனடியாக முருங்கை மரத்தில் ஒரு சிறிய குச்சியைக் கீரையோடு ஒடித்து வாயில் கொடுத்தால் அங்கேயே நின்று தின்று முடித்துவிட்டு நன்றியோடு என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்லும். அடுத்த நிமிடம் நான் நன்றியோடு முருங்கை மரத்தை ஒரு பார்வை பார்ப்பது வழக்கம். அப்போது முருங்கை மரம் காற்றில் லேசாக அசையும். அப்போது முருங்கை மரம் தன் தலையை அசைத்து நன்றியை ஏற்றுக் கொள்வது போல எனக்கு த் தோன்றும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.