May 26, 2024

Seithi Saral

Tamil News Channel

மகளே மல்லிகா/ சிறுகதை/ கடையம் பாலன்

1 min read

Magalee malika / Short story by Kadayam Balan


மதுரை ரெயில்நிலைய மேற்கு நுழைவாயில் வழியாக ஓடிவந்து ஐந்தாவது பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த பாசஞ்சர் ரெயிலில் ஏறினார், மாணிக்கம். தலையில் வெள்ளையும் கறுப்புமாக அடர்ந்திருந்த முடியை பழனி முருகனுக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டு நெற்றி நிறைய திருநீற்றை வாங்கிக் கொண்டு வந்திருந்தார். வழக்கம்போல் ரெயிலில் கூட்டம் அதிகமாக இல்லை. மாணிக்கம் ஏறிய பெட்டியில் ஒரு இளம் தம்பதி, தனது 2 வயது பெண் குழந்தையுடன் அமர்ந்து இருந்தனர்.
ஜன்னல் ஓரம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தை. திடீரென்று அதன் பிஞ்சு விரல்கள் இருப்பு ஜன்னல் கதவான ஷட்டரை தாங்கிக் கொண்டிருந்த தடுப்பு கம்பியுடன் உறவாடிக் கொண்டிருந்தன.
இதைக் கண்ட மாணிக்கம் “பாப்பா…” என்று அலறியபடி குழந்தையை தூக்கி கீழே இறக்கிவிட்டார். அது தனது இடத்தில் தாத்தா விளையாட ஆசைப்படுவதாக நினைத்து அழ ஆரம்பித்துவிட்டது.
குழந்தையின் தாயிடம், “குழந்தய கருத்தா பாத்துக்கோம்மா. அந்த கதவு கீழே விழுந்தா கைய துண்டாக்கிடும்” என்றார் கண்ணீர் மல்க.
“நன்றிய்யா” என்று சொல்லிவிட்டு, “அது நம்ம தாத்தாம்மா” என்று அழும் குழந்தையை சாந்தப்படுத்திக் கொண்டாள், அந்தப் பெண்.
ஆனால் மாணிக்கத்தின் மனதில் கடந்த காலம் நிழலாடியது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே பழனிக்கு வந்து திரும்பியபோது மகள் மல்லிகா ரெயில் ஜன்னலில் விளையாடிக்கொண்டிருக்க, ஷட்டர் கீழே விழுந்து சுண்டு விரலை பதம் பார்த்தது. அப்போது குழந்தையை விட மாணிக்கத்தின் கண்கள்தான் அதிகம் கசித்தன.
வசதி குறைந்த மாணிக்கம் பத்தாவதுக்கு மேல் படிக்காமல் விவசாய கூலிவேலை செய்துவந்தார். மனைவி பாக்கியமும் பீடி சுற்றுவாள். இவர்களுக்கு மல்லிகா பிறந்தபின் அவளிடம் செலுத்திய அன்பை இன்னொரு குழந்தைக்கு பகிர்ந்தளிக்க விரும்பவில்லை. இதனால் மல்லிகா உடன் பிறந்தாரின்றி தனிக்காட்டு ராணியாக வளர்ந்தாள். கல்லூரி படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று பாக்கியம் இறந்து போனாள்.
“நல்லவேளை அன்னிக்கே போயிட்டா” என்று இப்போது மாணிக்கத்தின் உதடுகள் முனுமுனுத்தன.
“அப்பா…” என்று எதிர் இருக்கை பெண் அழைத்தாள்.
மாணிக்கம் தன்னையும் அறியாமல் “மல்லிகா…” என்ற வார்த்தையை வெளியிட, அடுத்த நொடியில் தற்கால நினைவுக்கு வந்தார். ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தையும் அப்போதுதான் உணர்ந்தார்.
“நாங்க சாப்பிடப்போறோம்… நீங்களும் கொஞ்சம்…” என்றாள் அந்தப் பெண்.
“வேண்டாம்மா கொஞ்சம் முன்னாடிதான் நல்லா சாப்பிட்டேன்” என்றார்.
அந்தப் பெண் கொண்டு வந்திருந்த டிபன் கேரியரை திறந்து சிறு இலையில் கொஞ்சம் உணவை வைத்தாள்.
“இது உங்க அப்பாவுக்கா?” என்று அவளது கணவர் கேட்க,
“ஆமாங்க அதுல உங்களுக்கு என்ன சந்தேகம்…” என்ற அவள் சிறிது நேரம் மவுனமாக இருந்துவிட்டு இலையில் வைத்திருந்த சாதத்தை அப்படியே ஜன்னல் வழியாக வெளியே வீசினாள். அதற்குள் குழந்தை சேட்டை செய்ய… அதை சமாதானம் செய்யவும் சாப்பிடவும் நேரம் சென்றது.
சாப்பிட்டு முடிந்ததும் மாணிக்கம் அந்தப் பெண்ணிடம் இலையில் வைத்த சாதத்தை ஜன்னல் வழியாக வீசியது பற்றி கேட்டார். அவ்வளவுதான் அந்தப் பெண்ணினின் கண்களில் நீர் பொங்கியது.
“என் அப்பா இறந்துட்டாங்க. இன்னிக்கு அமாவாசை. எனக்கு கூடப்பிறந்தவங்க கிடையாது. திதி கொடுக்கும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. ஆனால் அப்பா நினைவா நேரம் கிடைக்கும்போது காக்காவுக்கு அன்னம் போடுவேன்.” என்றாள்.
அவள் அப்படி கூறியதும் மீண்டும் மாணிக்கத்துக்கு பழைய நினைவலைகள் நெஞ்சை அடைத்தது.
கல்லூரி படிப்பை முடித்த மல்லிகாவுக்கு எல்லோரும் எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை. மகளின் திருமணத்திற்காக பணம் திரட்டும் வேலையில் இறங்கினார்.
“அப்பா என் கல்யாணத்துக்காக அதிகமாக உழைக்காதீங்க, இருக்கிறது போதும்”ன்னு அடிக்கடி மல்லிகா சொல்லுவாள். ஆனாலும் மகளுக்கு நல்ல வரன் பார்க்க வேண்டுமே என்ற ஆர்வத்தில் கடுமையாக உழைத்தார்.
இந்த சிந்தனைக்கு ரெயில் தற்கால தடை விதித்தது. விருதுநகர் வந்திருக்குமோ என்று எட்டிப்பார்த்தார். அதிர்ச்சி. அங்கே மானாமதுரை போர்டு தெரிந்தது.
எதிர் இருக்கை பெண்ணிடம், “இந்த ரெயில் எங்க போறதும்மா?” கேட்டார்,
“இது ராமேசுவரம் ரெயில். என்ன சந்தேகம், நீங்க எங்க போகணும்.”
“நான் தென்காசிக்கு போற ரெயில்ன்னு நினைச்சி இதிலே ஏறிட்டேன்” என்றார் பதற்றத்துடன்.
“தென்காசி பாசஞ்சரும், ராமேசுவரம் பாசஞ்சரும் முன்னும் பின்னுமா ஒரே பிளாட்பாரத்தில்தான் நின்னுது. நீங்க கவனிக்கலையா…” என்றாள்.
“பழனியில இருந்து பஸ்ல மதுரைக்கு வந்தேன். அவசர அவசரமாக டிக்கெட் எடுத்துட்டு வந்து ஏறிட்டேன்.”
“சரி நல்லவேளை டிக்கெட் செக்கர் வரல… நீங்க நைசா வெளியே போயி மதுரைக்கு டிக்கெட் எடுத்துட்டு எதிரே வர்ற ரெயில்ல போங்க” என்று ஆலோசனை கூறினாள்.
கொஞ்ச நேரம் யோசித்த மாணிக்கம்,
“இல்லம்மா நான் ராமேசுவரம் போய் நாளைக்கு காலையில எங்க சொந்த ஊருக்கு போறேன்.” என்றபடி அவசர அவசரமாக கீழே இறங்கி ராமேசுவரத்திற்கு ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு மீண்டும் ரெயிலுக்கு வந்து கொண்டிருந்தார்.
“தன் மகள் செய்த துரோகத்திற்கு இதுதான் நல்ல முடிவு. ராமேசுவரத்திற்கு சென்று தலைமுழுகிட வேண்டியதுதான்” என்று நினைத்தார்.
ஒரு நாள் மல்லிகா தன் தந்தையிடம், “அப்பா எனக்கு நான் எதிர்பார்த்த வேலை கிடைக்கல… எனக்கு தெரிஞ்ச ப்ரண்ட் சென்னையில ஒரு வேலை இருக்குன்னு சொன்னா.. சுமாரான வேலைதான் ஆனாலும் நான் அங்கே போகலாம்ன்னு நினைக்கேன்.” என்றாள்.
“அங்கெல்லாம் போகணுமா? நல்ல வேலையா கிடைச்சா போகலாம்” இப்படி தந்தை கூறினாலும்
“நான் வேலை செய்தால் கொஞ்சமாவது உங்களுக்கு ஒத்தாசையா இருக்குமே” என்று ஏதேதோ கூறி தந்தையை சம்மதிக்க வைத்துவிட்டாள்.
சென்னைக்குச் சென்றவள்… அடிக்கடி போன் செய்துவிடுவாள். வேலை நன்றாக இருப்பதாக சொன்னாள். எந்த வேலையில இருந்தாலும் மகளிடம் இருந்து போன் வந்தால் எல்லாத்தையும் மறந்து பேசிக்கிட்டே இருப்பாரு இந்த மாணிக்கம்.
இப்படி சில மாதங்கள் கழிந்த நிலையில் திடீரென்று மகளிடம் இருந்து போன் வருவது நின்று போனது.
மாணிக்கம் போன் செய்தாலும் “சுவிச் ஆப்” என்று பதில் வந்தது. மகள் மீதுள்ள நம்பிக்கையில் அவள் விலாசத்தைக்கூட எழுதி வைக்க வில்லை. அவள் சொன்ன கம்பெனி பெயர் வாயில் நுழையவே இல்லை, பின்னர் எப்படி ஞாபகத்தில் வைக்க முடியும்.
தவியாய் தவித்துக் கொண்டிருந்த அவருக்கு ஒரு வாரம் கழித்து மகளிடம் இருந்து பதிவு தபால் வந்தது. பிரித்து படித்த அவருக்கு தூக்கிவாரிப் போட்டது.
“அப்பா.. நான் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டேன். ஒரு நல்லவரைத் தேர்வு செய்துள்ளேன். இப்போது என்னை தொடர்பு கொள்ள வேண்டாம். நான் நல்ல நிலையில் இருக்கிறேன். என் மீது உண்மையான அன்பிருந்தால் இப்போதைக்கு என்னை சந்திக்க நினைக்க வேண்டாம். காலம் வரும்போது சந்திப்பேன்.” என்று எழுதி இருந்தாள்.
அன்றிலிருந்து ஒருவாரம் சரியாக சாப்பிடவில்லை. தூங்கவில்லை.
மகளின் திருமணம் நல்லபடியாக முடிந்துவிட்டால் பழனிக்கு வருவதாக வேண்டியிருந்தார். மகளுக்கு கடனை நிறைவேற்றாவிட்டாலும் கடவுளுக்கு கடனை நிறைவேற்றிவிடுவோம்ன்னு பழனிக்கு வந்தார். இப்போது ராமேசுவரத்திற்கும் தலைமுழுக புறப்பட்டுவிட்டார்.
ரெயிலை நோக்கி நடந்து வந்தவரிடம் ஒருவர் மதுரை ரெயில் பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டதாகவும் மதுரையில் இருந்து இன்னொரு என்ஜின் வந்த இழுத்துட்ட வர இன்னும் ஒரு மணிநேரமாகும் என்றும் கூறினார்.
இதனால் ரெயில் இருந்த பயணிகள் பெரும்பாலானோர் கீழே இறங்கி வேடிக்கை பார்த்தார்கள். பிளாட்பாரமே ஒரு பூங்கா போல் கலகலப்பாகிவிட்டது. எதிர் இருக்கை குடும்பமும் இவர் அருகே ஒரு இருக்கையில் இருந்தது. அந்தக் குழந்தை தாத்தா… தாத்தா என்று இவரை வருடியது. பற்றறுந்த நிலையில் தொற்றிக் கொண்ட குழந்தையை எடுத்து பிளாட்பாரத்திற்கு வெளியை காகத்தை வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார். குஞ்சுகளுக்கு தாய் காக்கை பறக்க பழக்கிக் கொண்டிருந்தது.
“பழகினா விடமாட்டாள்” என்று சொல்லியபடியே அந்த குழந்தையின் தாயும் அவர்களோடு பொழுதைபோக்க வந்துவிட்டாள்.
தாத்தா முகத்தில் இப்போதான் கொஞ்சம் சிரிப்பு வந்திருக்கு என்று கூறிய அந்தப்பெண் “ அப்பா.. உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டாள். அவளிடம் தன் மகளை பற்றியும் அதனால் நிலைகுலைந்து போனதுபற்றியும் கூறினார்.
அதைக்கேட்ட அப்பெண் கண்ணீர் விட்டு அழுதாள்.
“அப்பா நீங்க என்னை முதலில் மன்னியுங்கள்” என்று கூறி அவரது காலில் விழுந்தாள்.
“என்னம்மா நீ என்ன தப்பு பண்ணின?”
“நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்க, எங்க அப்பா இல்லை, அதான் உங்களிடம் கேட்கிறேன்”
அவளிடம் விவரம் கேட்க..
“அப்பா நானும் உங்க மகள் மாதிரி எங்க அப்பாவுக்கு தெரியாம வசதியான இவரை கல்யாணம் பண்ணக்கிட்டேன். என்னை திருமணம் செய்ய அவங்க அப்பா&அம்மா விரும்பல. ஆனால் இவரு எம்மேல உசிரையே வச்சிருந்தாரு. நாங்க கல்யாணம் செஞ்சவுடனே எங்க அப்பாக்கிட்ட சொல்லியிருந்தா அவங்கள என் மாமனார்&மாமியார் மதிச்சிருக்க மாட்டாங்க. புகுந்த வீட்டில என் செல்வாக்கு ஓங்கினபிறகு எங்கப்பாவ வந்து பார்த்து சொல்லலாம்னு நினைச்சேன்.” என்று சொல்வதற்குள் வார்த்தை விம்மியது.
“ஏம்மா உங்க அப்பாவை பார்த்தியா… சொன்னியா…” என்று கேட்டார்.
“நான் இவரை கூட்டிக்கிட்டு எங்கப்பாவை பார்க்கப்போனப்போ அவங்க இந்த உலகத்தவிட்டே போயிட்டாங்க…” என்று அழுதாள்.
அவளை மாணிக்கம் ஆறுதல் படுத்தினார்.
அப்போதுதான் நினைத்தார். நம்ம மல்லிகாவும் ஏன் அப்படி இருக்க கூடாது..
தெளிந்த மனதுடன் அந்த காக்கையை பார்த்தார். பறக்க பழகிய குஞ்சுகள் தாயைவிட்டு பறந்து சென்று கொண்டிருந்தன. அதனை நினைத்து தாய் காகம் வருத்தப்படவில்லை மகிழ்ச்சி அடைந்தது,
குஞ்சுகளை வளர்க்க பறவைகள் என்னென்ன பிராயாசைப்படுகின்றன. ஆனால் அவைகள் பறக்க தெரிந்தவுடன் அதனிடம் எந்த பிரதிபலனையும் தாய்பறவை எதிர்பார்ப்பது இல்லை. ஏன் கவுரவத்தையும்கூட எதிர்நோக்குவது இல்லை. அப்படி இருக்கும்போது மனிதன் ஏன் இப்படி… தாய்ப் பாசம்தான் பிரதிபலனை எதிர்பாராதது என்பார்கள். உண்மையில் அது மனித இனத்திற்கு அல்ல. விலங்குகள்தான் நமக்கு பாடம். நான் ஏன் மல்லிகா நம்மை மறந்ததற்காக வருத்தப்பட வேண்டும்?
மதுரைக்கு ஒரு டிக்கெட் எடுத்துவந்து சொந்த ஊருக்கு திரும்ப ஆயத்தமானார்.
அப்போது பள்ளிக்கூடத்தில் கலித்தொகையில் ஒரு பெண் தனது தலைவனுடம் ஒடிப்போனது பற்றி பாடம் நடத்தியது ஞாபகத்திற்கு வந்தது. அந்தப் பாடலில் வைணவத்துறவி சொன்ன அறிவுரை மாணிக்கத்திற்கு காகம் புகட்டியது.

-கடையம் பாலன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.