கண்ணாயிரத்தை அதிரவைத்த அமாவாசை/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min read
mavasai that shook Kannayiram/ comedy story/ Tabasukumar
10.5.2024
கண்ணாயிரம் பஸ்விபத்தில் பழைய நினைவுகளை மறந்துவிட்டார். குற்றாலத்துக்கு மனைவியுடன் சுற்றுலா சென்றதையும் மறந்து விட்ட நிலையில் பஸ் சுற்றி சென்றதால் கூடுதலாக இரண்டாயிரம் வேண்டும் என்று சுற்றுலா ஏற்பாடு செய்த பயில்வான் கேட்க.. கண்ணாயிரமோ நான் சுற்றுலா செல்லவில்லை. எனவே பணம் தரமாட்டேன் என்றார்.
பணம் வாங்காமல் விடமாட்டேன் என்று பயில்வான் சொன்னபோது பூங்கொடி தலையிட்டு என் அப்பா அருவா அமாவாசையிடம் பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார். உடனே பயில்வான் மகிழ்ச்சியுடன் அருவாஅமாவாசையிடம் செல்போனில் பேசினார். உங்கள் மருமகன் குற்றாலம் சுற்றுலா சென்ற வகையில் கூடுதலாக இரண்டாயிரம் தாருங்கள் என்றார்.
அதைக்கேட்ட அருவாஅமாசை சூடானார். கண்ணாயிரம் என்னை தன் மாமனார் என்றே ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை அருவாவியாபாரி என்கிறான். நான் எப்படி அவன் சுற்றுலா சென்றதற்கு பணம் கொடுக்க முடியும்.. போடா என்றார்.
அதைக் கேட்ட பயில்வான்.. ஏங்க நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. உங்க மகள்தான் உங்களிடம் பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னார். அதனால் பணம் கொடுங்கள் என்று கேட்டார்.
உடனே அருவாஅமாவாசை கோபத்தில்.. என்ன என் மகள் சொன்னாளா.. அவள்தான் போலீஸ்நிலையத்தில் என்னை அவளது அப்பா இல்லை என்று சொல்லிவிட்டாளே.. அப்படியிருக்கும் போது நான் எப்படி பணம் தருவேன் என்று கேட்டார்.
பயில்வான் விடவில்லை. ஆயிரம் சண்டை போட்டாலும் அவர் உங்கள் மகள் இல்லை என்று ஆகிவிடுமா.. நீங்களே உங்கள் மகளுக்கு போன் போட்டு கேளுங்க என்க. அருவாஅமாவாசை.. அப்படியா ..சொல்லுறீங்க.. இப்பவே போன் போட்டு கேட்கிறேன் என்று சொன்னார்.
பயில்வான்..சீக்கிரம்..சீக்கிரம் பேசுங்க என்று சொல்லிவிட்டு போன் இணைப்பை துண்டித்தார்.
பின்னர் அருவாஅமாவாசை..தன்மகள் பூங்கொடியை செல்போனில் தொடர்பு கொண்டு.. பூங்கொடி.. பூங்கொடி என்க..எதிர்முனையில் பூங்கொடி, அப்பா..அப்பா என்று உருகினார். அதைக் கேட்ட அருவாஅமாவாசை, ஆ..என் மகள் என்னை அப்பா என்று சொல்லிட்டா.. என்மகள் என்னை அப்பா என்று சொல்லிட்டா என்று மகிழ்ச்சி அடைந்தார்.
அப்போது பூங்கொடி மெல்ல..அப்பா குற்றாலம் சென்றதற்கு கூடுதல் கட்டணம் பயில்வானிடம் கொடுங்கள் என்க, அருவாஅமாவாசை திடுக்கிட்டு என்ன அப்பா குற்றாலம் சென்றதற்கு கூடுதல் கட்டணம் கட்டணுமா.. நான் குற்றாலமே போகவில்லையே என்றார்.
உடனே பூங்கொடி , அப்பா நீங்க குற்றாலம் போகல.. நானும் அவரும்தான் குற்றாலம் போனோம். அதனால கூடுதல் கட்டணம் கொடுத்திடுங்க என்க, அருவாஅமாவாசை பதிலுக்கு, அம்மா பூங்கொடி நீ என்னை அப்பா என்று சொல்லிட்டா அதனால உனக்கு மட்டும் உள்ள கட்டணம் ஆயிரம் கொடுத்துவிடுகிறேன். கண்ணாயிரம் என்னை மாமா என்று ஏற்றுக்கொள்ளாததால் அவனுக்குரிய ஆயிரத்தை நான் கொடுக்க மாட்டேன் என்றார்.
அதைக்கேட்ட பூங்கொடி.. அப்பா, பஸ்விபத்திலே அவருக்கு பழைய நினைவுகள் மறந்து போயிட்டு. அதனால அவருக்கு உங்களை அடையாளம் தெரியல..என்க, நான் உங்களுக்கு பணம் செலவு பண்ணுறேன். மாமா என்னைக்கூடவா மறந்திட்டான் என்று அருவாஅமாவாசை கேட்டார்.
அதற்கு பூங்கொடி..ஆமாப்பா..அவருக்கு இருபது வயதில் இருந்து இருப்பத்தெட்டு வயசு வரைக்கும் நினைவிருக்கு. .இப்போ நீங்க முடி வெள்ளையாகி முதியவராக இருப்பதால் உங்களை அவருக்கு உங்களை அடையாளம் தெரியல என்க ..அருவா அமாவை..அப்படியா அம்மா என்று சொல்ல, பூங்கொடியோ.. அப்பா.. நான் உங்க அம்மா இல்லை.. உங்க மகா என்றார்.
அதைக்கேட்ட அருவா அமாவாசை, நீ என் அம்மா மாதிரி இருப்பதால உன்னை பாசத்துடன் அம்மா என்றேன். நீயும் முழுகாம இருக்கே..விரைவில் அம்மா ஆகணும் என்றார். உடனே பூங்கொடி, அதெல்லாம் இப்போ முடியாது அப்பா.. என்க, அருவாஅமாவாசை.. இன்னும் பத்துமாதம் கழித்து என்று சொல்ல, உங்க மருமகன் குணமாகி வரட்டும் என்று சொல்ல, அருவாஅமாவாசை.. நீ ஏற்கனவே முழுகாமத்தானே இருக்க என்றார்.
அவர் சொல்வதின் பொருளை உணர்ந்த பூங்கொடி..அப்பா.. நீங்க சொல்லுறீங்க என்று சொல்ல, அருவாஅமாவாசை திடுக்கிட்டு, கண்ணாயிரம்தானே நீ முழுகாம இருக்கா என்று சொன்னான்.அதை நான் நம்பினேன் என்றார்.
ஆமாப்பா அது உண்மைதான் .நான் முழுகாம இருந்தது உண்மைதான்என்று பூங்கொடி சொல்ல.. அருவாஅமாவாசை.. பாத்தியா.. உண்மைய ஒத்துக்கிட்டியா .. உடனே உன்னைப் பார்க்க வருகிறேன். குற்றாலம் சுற்றுலா போனதற்கு கூடுதல் கட்டணம் கட்டிவிடுகிறேன் என்றார்.
உடனே பூங்கொடி,அப்பா..நீங்க இங்கே வந்தால் தலைக்கு டை அடிச்சிட்டு கருகரு முடியுடன் இளமை தோற்றத்துடன் வாங்க என்றார்.
அதற்கு அருவாஅமாவாசை, சொல்லிட்டல்ல..இளமையாக வருகிறேன் என்றார்.
சரிப்பா என்று சொல்லிவிட்டு போன் இணைப்பை கட் செய்தார்.கண்ணாயிரம் அவரிடம்..என்ன ரொம்ப நேரம் போனில்போசினீங்க யாரு என்று கேட்க, அவர் சொந்தக்காரர் என்று சொல்லி சமாளித்தார்.
கண்ணாயிரமும் உம் என்று சொல்லிவிட்டு.. எங்க அம்மா எப்போ வருவாங்க என்று கேட்க, விரைவில் வருவாங்க என்று பூங்கொடி பதில் சொன்னார்.
கண்ணாயிரம்..சரி என்றபடி படுக்கையில் தலைசாய்த்தார்.
பயில்வான் அங்கு நின்ற பூங்கொடியிடம்..உங்க அப்பா என்ன சொன்னார் என்று கேட்க, அதுவா உங்களுக்கு பணம் தருகிறேன் என்று சொல்லிவிட்டார் என்றார்.
பயில்வானும் அப்படியா,அவரிடம் போனில் பேசுகிக் கொள்கிறேன் என்றபடி அங்கிருந்து சென்றார்.
அருவாஅமாவாசை..எப்படி இளமையாக மாறலாம் என்று யோசித்தார். சலூனுக்குச் சென்றார். தலைமுடிக்கு டை அடித்தார். மிரட்டும் வகையில் இருந்த மீசையை குறைத்து சிறிய மீசை வைத்துக்கொண்டார். நீளமாக இருந்த கேராவை குறைத்தார். முகத்தில் பவுடர் அடித்துக்கொண்டார்.
ஜவுளிக்கடைக்குச் சென்று பேண்ட் ,சட்டை ரெடி மேடாக எடுத்தார். கறுப்பு கண்ணாடி வாங்கினார். புது மாடல் செருப்பு வாங்கிக் கொண்டார். வீட்டுக்குச் சென்றார். குளிக்கலாமா என்று நினைத்தார். குளித்தால் தலையில் சாயம் போய்விடும். எனவே குளிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார். புதிய பேண்ட் சட்டை மாட்டினார்.கறுப்பு கண்ணாடி அணிந்தார்.காலில் அலங்கார செருப்பு மாட்டினார். கண்ணாடியில் போய் பார்த்தார்.அடே.நாப்பது வயசு தோற்றம் போல் இருக்கிறதே என்று வியந்தார்.
மகளைப் பார்க்க ஆட்டோவில் வாழைத்தாருடன் சென்றுவிடவேண்டியதுதான் என்று முடிவு செய்தார். போலீஸ்காரர்கள் தன்னை புதுவைக்கு வரக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்களே.. நான் இப்போது இளமையாக இருக்கிறேன்.. என்னை போலீசாருக்கு அடையாளம் தெரியாது.. என்று முடிவு செய்தார்.
வீட்டைப் பூட்டிவிட்டு ஆட்டோவை வரச்சொன்னார். ஆட்டோக்காரருக்கே அடையாளம் தெரியவில்லை. எங்கே போகணும் சார் என்று கேட்க, புதுவைக்கு என்றார்.
சரி என்றபடி ஆட்டோ டிரைவர் ஆட்டோவை இயக்க வழியில் பழக்கடையில் ஆட்டோவை நிறுத்தச் சொன்னார் அருவாஅமாவாசை. ஆட்டோ நின்றதும் ஒருவாழைத்தாரை வாங்கி ஆட்டோவில் ஏற்றினார். ஆப்பிள் ஒருகிலோ.. திராட்சை ஒருகிலோ, ஆரஞ்சு ஒரு கிலோ வாங்கினார்.
ஆட்டோவில் ஸ்டைலாக ஏறி அமர்ந்தார். சார் எங்கே வேலைப் பாக்கிறீங்க என்று ஆட்டோக்காரர் கேட்க, ஓ.. அதுவா பஞ்சாயத்திலே என்றார்.
ஆட்டோக்காரரும்.ம் பஞ்சாயத்து ஆபீசில் வேலைப் பாக்கிறார் போலிருக்கு என்று நினைத்தார்.
கட்ட பஞ்சாயத்து செய்வதை அவர் மறைத்து பஞ்சாயத்திலே வேலைபார்க்கிறேன் என்று அவர் சொன்னதை ஆட்டோ டிரைவர் அறியவில்லை. ஆட்டோ புதுவையை நோக்கி விரைந்தது.
அருவாஅமாவாசை இளமைக் கால பாடல்களை பாடியவாறு வந்தார். ஆட்டோக்காரர் அவரிடம் சார்..உங்க நேம் என்று கேட்க, அவர்..ஓ மை நேம் இஸ் அமாவாசை..என்றார். ஆட்டோக்காரர்..ஓ பெரிய ஆளா இருப்பார் போலிருக்கு என்றபடி ஆட்டோவை ஓட்டினார்.
ஒரு மணி நேரம் கழித்து புதுவையில் கண்ணாயிரம் வீட்டுமுன் ஆட்டோ நின்றது.
வாழைப்பழத்தாரை அமாவாசை கீழே இறக்கிவைத்தார். ஆட்டோக்காரரிடம் பணம் கொடுத்துவிட்டு கருப்பு கண்ணாடியை மாட்டிக்கொண்டு பழக்கூடையுடன் கண்ணாயிரம் வீட்டு ஹாலிங் பெல்லை ஓங்கி அழுத்தினார்.
படுத்திருந்த கண்ணாயிரம் கோபத்தில் எழுந்து கதவைத் திறந்து யாரது என்று கேட்டார்.
அமாவாசை ஸ்டைலாக..ஐ எம் அமாவாசை என்று சொல்லி சிரித்தார். பேண்டு சேட்டுடன் கறுப்புக் கண்ணாடியுடன் நிற்பவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் எங்கேயோ பார்த்தது போலிருக்கே என்று கூர்ந்து நோக்கினார்.அவரது பழைய நினைவுகள் சிறகடித்தது.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.