முருகனின் முதல் படை வீடு- மலை உச்சியிலா? அடிவாரத்திலா?
1 min read
Is Thiruparankundram at the top of Murugan Hill? At the base?/ By Amuthan
கந்த சஷ்டி விரதநாட்களில் இந்தக் கட்டுரையை எழுத்தாளர் அமுதன்(தனசேகரன்) நமக்கு விருந்தாக படைக்கிறார். இவர் தினத்தந்தி தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர்.
தமிழ்க் கடவுள் முருகன், தமிழகத்தில் உள்ள ஆறு படை வீடுகளில் குடி இருப்பதாக ஐதீகம்.
இவற்றில் முதல் படை வீடாகக் கருதப்படுவது, மதுரையில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்பரங்குன்றம்.
இரண்டாவது படை வீடு, திருச்சீரலைவாய் என்ற திருச்செந்தூர்.
மூன்றாவது படை வீடு, திருஆவினன் குடி என்ற பழனி.
நான்காவது படை வீடு, திருவேரகம் என்ற சுவாமி மலை.
ஐந்தாவது படை வீடு, குன்றுதோறாடல் என்ற திருத்தணி.
ஆறாவது படை வீடு, பழமுதிர்ச் சோலை.
இந்த ஆறு படை வீடுகளை வரிசைப்படுத்தித் தந்தவர், திருமுருகாற்றுப்படை வழங்கிய நக்கீரர்.
பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச் சோலை ஆகிய இடங்களில் உள்ள மலை மீது குடி இருக்கும் கந்தன், திருப்பரங்குன்றத்தில் மலை இருந்தும், மலையின் உச்சியில் அல்லாமல், மலை அடிவாரத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
இது இப்போதைய நிலை என்றாலும், முன் ஒரு காலத்தில், அதாவது, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, முருகன், திருப்பரங்குன்றம் மலை உச்சியிலேயே குடி கொண்டு இருந்தார் என்பதைப் பழங்காலத் தமிழ்ப் பாடல்கள் தெரிவிக்கின்றன.
சங்கப் புலவர்களில் ஒருவர் நப்பண்ணனார். இவர் பாடிய பாடலில், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரும், மதுரை மக்களும், அமைச்சர்களும், அவர்களது சுற்றத்தாரோடு பெரும் கூட்டமாக மலை மீது ஏறி அங்குள்ள முருகனை வழிபட்டதாகத் தெரிவிக்கிறார். அந்தக் கோயிலில் ஓவியக் கூடம் இருந்ததாகவும் அவர் சொல்கிறார்.
இதேபோல அகநானூறு 59-ம் எண் பாடலிலும். பரிபாடல் உள்பட மேலும் பல பாடல்களிலும், திருப்பரங்குன்றம் மலை மீது முருகன் கோயில் இருந்ததை அந்தக் காலப் புலவர்கள் உறுதி செய்து இருகிறார்கள்.
ஆனால், மலை உச்சியில் இருந்த முருகன் கோயில் காலப்போக்கில் மறைந்து விட்டது.
முருகன், இப்போது மலை அடிவாரக் கோயிலில் குடி கொண்டு இருக்கிறார்.
திருப்பரங்குன்றம் மலையின் வடக்குப் பக்க அடிவாரத்தில், குடவரைக் கோயிலாகவும், ஆறுபடை வீடுகளில் ஒன்றாகவும் விளங்கும் கோயில், கி.பி. 773-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.
அன்று முதல் ஷண்முகன், திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்தபடி மக்களைக் காத்து வருகிறார்.
சிவனுக்கான இந்தக் கோயிலில் முருகன், பரிவார தெய்வமாகவே அமைக்கப்பட்டு இருந்தார்.
ஆனால், காலப்போக்கில் அங்கு முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்று ஆகிவிட்டது.
திருப்பரங்குன்றத்தில் முருகனுடன், விநாயகர், சிவன், பெருமாள், துர்க்கை ஆகிய தெய்வங்களும் சன்னதி கொண்டு அருள் செய்கிறார்கள்.
திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் காட்சி அளிக்கும் முருகனை வழிபடும் பக்தர்களுக்கு எண்ணிலடங்காத அருள் கிடைக்கும் என்பது உறுதி.
(கட்டுரையாளர் : அமுதன்)
I