June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கந்த சஷ்டி கவசத்துக்கு விளக்க உரை கூடாது – ஏன் தெரியுமா? / அமுதன்

1 min read

No explanatory text for Kanda Sashti Kavasham – why? / Amudhan

20/11/2020

கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்க உரை கூடாது ஏன் என்பதற்கு தினத்தந்தி தலைமை செய்தி ஆசிரியர்( பணிநிறைவு) அமுதன் என்ற தனசேகரன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

====
அகநானூறு, புறநானூறு போன்ற சங்க காலப் பாடல்களின் பொருளை, விளக்க உரை இல்லாமல் நம்மால் அறிந்து கொள்ள முடியாது.
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியப் பாடல்களில் பொதிந்துள்ள கருத்துகளை அறிந்து கொள்வதற்காக அவற்றுக்கு விளக்க உரைகள் எழுதப்பட்டு இருக்கின்றன.
தேவாரம், திருவாசகம் ஆகியவற்றையும் முழுவதுமாக அறிந்து கொள்ள விளக்க உரைகளே கைகொடுக்கின்றன.
இரண்டே வரிகளால் ஆன திருக்குறளுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் விளக்க உரை எழுதி இருக்கிறார்கள்.
இவ்வாறு பெரும்பாலான பாடல்களுக்கு விளக்க உரைகள் எழுதப்பட்டு இருக்கும் நிலையில், முருகனின் வழிபாட்டுப் பாடலான கந்த சஷ்டி கவசத்துக்கு என்று விளக்க உரைகள் அதிகம் காணப்படுவது இல்லை.
இதற்குக் காரணம், கந்த சஷ்டி கவசத்துக்கு விளக்க உரை எழுதக் கூடாது என்பதுதான்.
ஏன் இந்த ஐதீகம்?
1820-ம் ஆண்டு பிறந்த பாலன் தேவராய சுவாமிகள், தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் உள்பட ஏராளமான பாடல்களை எழுதிய தமிழ் அறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கர்.
இதனால், பாலன் தேவராய சுவாமிகள், சிறு வயதிலேயே பாடல்கள் இயற்றும் திறமை பெற்றதோடு, சொற்களின் ஓசையில் அடங்கியுள்ள நல்ல அதிர்வு அலைகள் என்ன என்பதையும் அறிந்து கொண்டார்.
அந்தத் திறமையால் அவர், நல்ல அதிர்வு அலைகளைத் தரும் வார்த்தைகள் அடங்கிய மந்திர ரூபமான முருகன் வழிபாட்டுப் பாடலை இயற்றினார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்தவாறு அவர் எழுதிய அந்தப் பாடல்தான் கந்த சஷ்டி கவசம்.
244 வரிகளைக் கொண்ட இந்தப் பாடல்கள், முருகனை வழிபடுவதற்கானவை என்பதைவிட, அவை வானில் இருக்கும் நல்ல அதிர்வுகளை நமக்குப் பெற்றுத் தரும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் என்பதுதான் அடிப்படை.
இதனால்தான் கந்த சஷ்டி கவசப் பாடல்களை மனம் ஒன்றிப் பாடுபவர்கள், ஏராளமான நன்மைகள் அடைவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
நல்ல அதிர்வு அலைகளைக் கொண்ட கந்த சஷ்டி கவசம், பல விதமான தீவினைகள் மற்றும் நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றி, நமக்கு கடவுளின் அருளைப் பெற்றுத் தரும்.
கந்த சஷ்டிப் பாடலின் இடையே அர்த்தம் இல்லாமல், ÔÔரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரிÕÕ
என்பது போல பல வரிகள் வருவதைக் காணலாம். அவற்றுக்குப் பொருள் இல்லை என்றாலும், அவை அனைத்தும் நல்ல அதிர்வு அலைகளை ஏற்படுத்தும் மந்திரங்கள் என்பதால் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கந்த சஷ்டி கவசம் முழுவதுமே மந்திர வார்த்தைகள் என்பதால், இதற்கு விளக்க உரை கூடாது என்று ஆன்மிகப் பெரியவர்கள் தீர்மானித்தார்கள்.
எனவே, கந்த சஷ்டி கவசம் பாடும்போது அதற்கான பொருளைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்வதை விட, அந்த மந்திர வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தி, அதன் மூலம் முருகன் அருளைப் பூரணமாகப் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.

(கட்டுரையாளர் : அமுதன்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *