புதுசா ஒரு காக்கா கதை../ சிவகாசி முத்துமணி
1 min read
Puthusa oru Kakka kathi by Sivakasi Muthumani
புதுசா ஒரு காக்கா கதை..
சிறுவர் இலக்கியம்.
ஒரு ஊரில, ஒரு வயசான பாட்டி இருந்தாங்க.அவங்களுக்கு ரொம்ப வயசாயிருச்சி. அவங்களுக்கு யாருமே இல்ல. அவங்க மட்டும்தான்.
ரோட்டு ஓரத்தில் ஒரு புளிய மரம் இருந்தது.அந்த மரத்தடியில் உக்காந்து ,அந்தப் பாட்டி வடை சுட்டு விப்பாங்க. அதுதான் அவங்களுக்குப் பிழைப்பு.
அந்தப் பக்கம் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. படிக்கிற பிள்ளைகள் கூட அங்கு வந்து வட வாங்கிச் சாப்பிடுவாங்க.
ஒரு நாள்,அந்த மரத்து மேல ஒரு காக்கா வந்து உட்கார்ந்தது. அந்தக் காக்கா தன் தலையை அங்குமிங்கும் திருப்பி,பாட்டி சுட்டுவச்ச வடையை ஏக்கத்தோடு பாத்துகிட்டே இருந்தது.
பாட்டி அந்தக் காக்காவைப் பார்துட்டா,உடனே அதைப் பார்த்து ,"ஏய்,திருட்டுக் காக்கா, ரொம்ப காலத்துக்கு முந்தி இதே இடத்தில் எங்க பாட்டி கடை வச்சிருந்தா. அப்போ ஒரு நாளு வந்து வடையைத் திருடிட்டுப் போனது நீதானே?உன்னைத்தான் ரொம்ப நாளாத் தேடிக்கிட்டு இருக்கேன்.இப்பவும் வடயத் திருடத்தான் இங்க வந்திருக்கியா? பக்கத்துல வா பார்க்கலாம்"ன்னு,கையில் கரண்டியைத் தூக்கிக் காட்டினாங்க.
"இல்ல பாட்டி நான் திருட வரல.அப்போ வடையத் திருடுனது நான் இல்ல.அது எங்க பாட்டி.அவ இப்போ உயிரோட இல்ல.
திருடுறது ,அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படுறது எல்லாமே தப்புன்னு எனக்குத் தெரியும்."சத்தியமா நான் திருடவே மாட்டேன் பாட்டி "ன்னு அழகாச் சொல்லிச்சு அந்த காக்கா.
"அடேங்கப்பா நல்லாத்தான் பேசுற அப்படின்னா வட மேல ஆசை இல்லியா.உனக்கு வட வேண்டாமா? உனக்குப் பசிக்கலையா?" பாட்டி கேட்டாங்க." எனக்கு ரொம்பப் பசிக்குது பாட்டி. வடை வேணும்.ஆனா என்கிட்ட பணம் இல்லையே என்ன பண்ணுறது?" என்ற கேட்டது காக்கா."
"சரி பரவாயில்லை. நீ ரொம்ப நல்ல பொண்ணா இருக்க. அதனால நானே உனக்கு ஒரு வடையக் கொடுக்கிறேன். நீ காசு ஒண்ணும் தர வேண்டாம். சரியா? இறங்கி வா, வந்து வடையை வாங்கிக்கோ " என்று பாட்டி சொன்னா.
“வேண்டாம் பாட்டி. திருடுறத விட பிச்சை எடுக்கிறது ரொம்ப ரொம்பத் தப்பு. யாருகிட்டயும் நாம எதையும் எப்போதும் பிச்சை வாங்கக் கூடாது” சொன்னது அந்த காக்கா.
“அடடே! ரொம்ப அறிவோட பேசுறியே? ஆச்சரியமா இருக்கு. ஆமா இதெல்லாம் நீ எங்க படிச்ச?,யார்கிட்ட படிச்ச?” ன்னு கேட்டாள் பாட்டி.
“பாட்டி அதோ அந்தப் பள்ளிக்கூடத்துக்குள்ள, ஒரு வேப்ப மரம் இதற்குதே. தினமும் நான் அந்த மரத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருப்பேன். அந்த மரத்தடியில் ஒரு டீச்சர், நிறைய பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாங்க. அதையெல்லாம் நான் தினமும் கேட்டுக் கிட்டே இருப்பேன் .
அவங்கதான் ஒருநாள் சொன்னாங்க…, ஏற்பது இகழ்ச்சி. அப்படின்னா அடுத்தவங்க கிட்ட இருந்து எதையாவது பிச்சையா அல்லது தானமா, வாங்குறது ரொம்ப இழிவான செயலாம். இது அவ்வை பாட்டிப் சொன்னதாம்.. அதைக் கேட்டதிலிருந்து நான் யார்கிட்டயும் எதையும் வாங்குறது இல்ல பாட்டி” அப்படின்னு சொல்லிச்சி காக்கா.
பாட்டிக்கு ஒரே ஆச்சரியம் “பரவாயில்லையே. மனுஷங்க படிக்கவேண்டியத நீ படிச்சிருக்கியே. அப்படின்னா,இப்போ நான் கொடுத்தாலும் நீ வாங்க மாட்டே.? அப்போ ஒரு காரியம் செய். இந்த மரத்துல இருந்து கொஞ்சம் குச்சிகளை ஒடிச்சிப் போடு,எனக்கு அடுப்பு எரிக்க உதவும்.அதுக்குப் பதிலா நான் உனக்கு ஒரு வடை தருகிறேன்” என்று பாட்டி சொன்னாள்.
“அய்யோ மரத்தை ஓடிக்கக்கூடாது பாட்டி. அந்த டீச்சர் அதையும் சொல்லியிருக்காங்க. மரங்கள்தான் கடவுள் கொடுத்த வரமாம். மரத்த அழிச்சா, அப்புறம் மழையே பெய்யாததாம். பூமி வெப்பம் ஆயிடுமாம் . பிறகு உலகமே அழிஞ்சி போய்டுமாம்
“ஆத்தாடி, விட்டா நீ ஒரு பாடமே நடத்தி முடிச்சிடுவ போலிருக்கே!!!நீ எல்லா நல்ல விவரமும் தெரிஞ்சு வச்சிருக்க. ஆனால் எஙக மனுஷங்கதான் மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளிட்டாங்க.” “ஆமா பாட்டி பிறகு மழை பெய்யலியேன்னு வருத்தப்படுறாங்க”என்று சொன்னது அந்த காக்கா.
” பரவாயில்ல, பச்சை மரத்தை வெட்டுறதுதான் தப்பு. நீ.காஞ்சி போன குச்சியை மட்டும் ஒடிச்சு போடு”. என்று சொன்னா பாட்டி.
“பாட்டி கொஞ்சம் பொறு. காஞ்ச குச்சி தானே உனக்கு வேணும். அந்தப்பக்கம் முள்ளு மரம் நிறைய இருக்கு. குச்சி உடஞ்சி, காஞ்சிப் போய்க் கெடக்குது. நான்போய் அதைக் கொண்டு வர்றேன்” சொல்லிட்டு போச்சுது காக்கா.
கொஞ்ச கொஞ்சமாக குச்சியைக் கொண்டு வந்து சேர்த்தது. பாட்டியும் சொன்னது போலவே ஒரு வடையைக் கொடுத்தா. வடையை ஆசையோடு வாங்கிகிட்டு, அந்த காக்கா வேகமாப் பறந்து போயிருச்சு.
” இங்கேயே உட்கார்ந்து சாப்பிடலாமே எங்க வேகமா பறந்து போற?” ன்னு பாட்டி கேட்டது கூட, காக்கா காதில் விழல. பறந்து போச்சு.
கொஞ்ச நேரம் கழிச்சு அதே காக்கா திரும்பவும் அங்க வந்தது.” பாட்டி தப்பா நினைக்காத பாட்டி . நேற்று பள்ளிக்கூடத்துப் பையன் ஒருத்தன், கல்லை எடுத்து, எங்க அம்மா மேல அடுச்சிட்டான். அவளுக்குப் பெரிய காயம். அதனாலஅவளுக்கு, எங்கேயும் பறந்து போக முடியாது.அம்மாக்கு வயசும் ஆகிருச்சி. அடுத்த மரத்தில்தான் எங்களோட கூடு.
அந்தக் கூடு எனக்காக எங்கம்மா கட்டியது. அந்தக் கூட்டில் தான், நான் பிறந்தேன். அங்கதான்அவ உட்கார்ந்து இருக்கா. அவளுக்குப் பசிக்கும். அதனால அவளுக்குத்தான் வடையக் கொண்டு போனேன்”. என்று காக்கா சொன்னது. “ஐயோ பாவம் யார் அப்படி செஞ்சது? அவன் மண்டையில பட்டுன்னு கொத்தி உடச்சிருக்கணும்” என்று சொன்னா பாட்டி.
“முதலில் எனக்கும் கோபம் தான் பாட்டி இருந்தது. நீ சொன்னது மாதிரி செஞ்சிருக்கலாம். ஆனா இப்போ நான் கஷ்டப்படுற மாதிரி அந்தப் பையனோட அம்மாவும் கஷ்டப்படுவா. என்று நினைத்தேன் கோபம் போய்விட்டது.. ‘ஒப்புரவு ஒழுகு’ மத்தவங்க கஷ்டம் நமக்குப் புரியணும். அதோடு ‘ஆறுவது சினம்’. இதைக்கூட. அந்த டீச்சர் சொல்லியிருக்காங்க. அதனால கோபத்தை அடக்கிக் கொண்டேன்” என்று காக்கா சொன்னது.”
அப்படின்னா நீ சாப்பிடலியா?”.. பாட்டி கேட்டா.? “இல்ல பாட்டி, எங்க அம்மா சாப்பிட்டது போதும் அதைப் பார்த்து, எனக்கு வயிறு நெறஞ்சு போச்சு”. என்றது காக்கா..”ம.ம்…. மனுஷங்களுக்கு தான் இந்தப் பாசம் எல்லாம் குறைந்துகிட்டே வருது”.என்று முணுமுணுத்தாள் பாட்டி.
“ஆமா உன் பேரு என்னம்மா?”. என்று கேட்டாள் பாட்டி “அழகி என்றது காக்கா.நிஜமாவே உன் மனசு ரொம்ப அழகுதான். அழகி நீ தினமும் இங்கு வா. நான் உனக்கு வட தாரேன்”. என்றா பாட்டி…”சரி பாட்டி…கண்டிப்பா வருவேன் … ஆனால் வாயில் விறகோடு..” என்று சொல்லிச் சிரித்தது அந்த காக்கா. “சரி நாளைக்கு வரும்போது முடிஞ்சா உன் அம்மாவையும் கூட்டிட்டு வாரியா..காயத்துக்கு எண்ணெய் போடலாம்..காக்கை குருவி எங்கள் சாதின்னு நானும் படிச்சிருக்கேன்”.. என்றாள் பாட்டி.
அப்போது தூரத்தில் கா …கா என்ற சத்தம் கேட்டது. “அம்மா கூப்பிடுறா பாட்டி. சூரியன் மறையத் தொடங்கிருச்சி. இனிமேல் எங்களுக்குக் கண்ணு தெரியாதுல்ல..”. அப்படின்னு சொல்லிக்கிட்டே அந்தக் காக்கா அங்கிருந்து பறந்து போச்சு.
காக்காக் கூட்டத்தப் பாருங்க அதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்க ?என்னும் பாட்டு தொலைவில் ரேடியோவில் கேட்டது. பாட்டிக்குத் தன்னைப் பற்றிக் கவலையில்லாமல் பட்டணத்தில் சந்தோசமாக குழந்தை குட்டிகளோடு சகல வசதிகளோடு, இருக்கும் தன் ஒரே மகனின் முகம் நினைவு வந்தது .அவளையறியாமலே, கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வடிந்தது.