ஒவ்வொரு மையங்களிலும் 100 பேருக்குத்தான் கொரோனா தடுப்பூசி; ஏன்?
1 min read
Corona vaccine for 100 people in each center; Why?
12/12/2020
ஒவ்வொரு மையத்திலும் ஒரு நாளுக்கு 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விரைவில் தடுப்பூசி
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில சில நாடுகள் வெற்றி அடைந்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டுக்காக 3 நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன.
இதனை மத்திய சுகாதார துறை அமைச்சகம் நியமித்துள்ள நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்தியாவில் விரைவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மையத்தின் அமைப்பு
இதற்கிடையே பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.
இதற்கிடையே மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் 2 நாள் பயிலரங்கம் நடத்தப்பட்டது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான வழிகாட்டுதல்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் ஒவ்வொரு மையத்திலும் ஒரு காவலர் உள்பட 5 தடுப்பூசி அதிகாரிகள் இருக்க வேண்டும். அங்கு 3 அறைகள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இதில் ஒரு அறையில் பொதுமக்கள் காத்திருப்பது, 2-வது அறையில் தடுப்பூசி செலுத்துவது, 3-வது அறை கண்காணிப்புக்காக அமைக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் காத்திருப்பு அறை வாயிலில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். 6 அடி சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்தப்படும் அறையில் ஒரு நேரத்தில் ஒருநபர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இரண்டு தடுப்பூசிகள் நான்கு ஐஸ் பேக்குகளில் வைத்திருக்க வேண்டும். சானிடைசர், முக கவசம் அவசியமானது. அலர்ஜியை தடுப்பதற்கான மருந்துகளை வைத்திருக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு ஊசி போடப்பட்டவர்கள் 30 நிமிடம் கண்காணிப்பு அறையில் கண்காணிக்கப்பட வேண்டும். அங்கு சமூக இடை வெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
கடுமையான பாதிப்புகளை கொண்டு இருக்கும் நபர்களை அடையாளம் கண்டு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
100 பேர்
இந்த கட்டுப்பாடுகள் காரணமாக ஒவ்வொரு மையத்திலும் ஒரு நாளுக்கு 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பயிலரங்கில் பங்கேற்ற நோய் தடுப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சமூகஇடைவெளியை கவனத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்தப்படுவதற்காக 3 அறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
தடுப்பூசி செலுத்தப்படும் அறைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஒரு மணி நேரத்துக்கு 14 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஒவ்வொரு மையத்திலும் ஒரு நாளுக்கு 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.