இராஜேஸ்.. இராஜேஷ்.. எது சரி?-/ சொல்லாராய்ச்சி/ சிவகாசி முத்துமணி
1 min readஇராஜேஸ்.. இராஜேஷ்.. Which is right? – / Sollaraichchi / Sivakasi Muthumani
16.1.2021
இராஜேஸ்.. இராஜேஷ்.. எது சரி?
இராஜேஸ்வரி என்னும் என்னுடைய பெயரை இராஜேஸ்வரி என்று எழுதலாமா? மகேஷ்வரி சரியா? அல்லது மகேஸ்வரி சரியா? இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
முதற்கண் இவ்விரண்டு பெயர்ச்சொற்களும் தமிழ்ச்சொற்கள் அல்ல. வடசொற்கள் என்றறிக. இவற்றை மேற்கண்ட இரண்டு முறைகளில் எப்படி எழுதினாலும் பெரிதாகப் பொருள் மாற்றம் ஒன்றும் ஏற்படுவதாகத் தோன்றவில்லை.
காரணம். என்னவெனில்.. நமக்குத் தெரியாத மொழிஅது. நமக்குத் தெரியாத மொழியைத் தெரிந்தே பிழையாகப் பயன்படுத்தினாலும், அல்லது தெரியாமல் பிழை ஏற்பட்டாலும் நமக்கு அது எந்தவிதமான உணர்வையும் ஏற்படுத்துவதில்லை.
நமக்குத் தெரியாத மொழியில் சிரித்துக்கொண்டே ஒருவன் நம்மைத் திட்டினால், நமக்குப் புரியவா போகிறது? அல்லது வாழ்த்தினால் பொருள் புரிந்து கொண்டு மனம் மகிழப் போகிறதா?. வேறு எங்கும் இல்லாத கொடுமை தமிழ்நாட்டில்தான் பிள்ளைகளுக்குத் தாய்மொழியில் தமிழ்ப் பெயர் வைக்கும் வழக்கம் இல்லை. மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை? தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை. காரணம் கடவுளர் பெயரரையெல்லாம் தமிழ்ப்பெயர் என்று நம் பெற்றோர் காலம் காலமாகக் கருதி வருகின்றனர்.
சாமி பெயர் பிள்ளைக்கு வைப்பது நலம் என்று கருதி பெயர் சூட்டுவது குற்றமன்று. கடவுள் பெயரை பிள்ளைகளுக்கு வைத்துவிட்டு பிள்ளைகளை அழைக்கும் போதெல்லாம் அந்தப் பெயரையே சொல்லுவதால் ஒரு நாளைக்கு நூறு முறை கடவுளின் திருநாமத்தை உச்சரித்து போல் பயன் கிடைக்கும் என்பது கருத்து. நாம் பிள்ளைகளை அப்பெயர் சொல்லி அழைக்கும் போதெல்லாம் இறைவன் காதிலும் அப்பெயர் சென்று சேர்வதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இன்று பொருளே தெரியாமல் ஒரு பெயரை வைத்துவிட்டு அதைச் சொல்லி நூறு முறை அல்ல ஆயிரம் முறை அழைத்தால் யார் காதில் விழப் போகிறது. சரி எடுத்துக்கொண்ட செய்திக்கு வருவோம்.
ஈஸ்வரன்… என்னும் பெயரின் அடிப்படையில்தான் மேற்கண்ட பெண்பால் பெயர்கள் தோன்றின. அவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆணபால் பெயர்களும் (ஒவ்வொன்றுக்கும்) உண்டு. ஈஸ்வரன் என்னும் பெயர் சிவனுக்கு உரியது. அதையே ஈசுவரன் என்று தமிழாக மாற்றிப்பயன்படுத்தினர். பிள்ளைகளுக்குப் அப்பெயர் வைத்தனர், தென்காசியில் மேல்நிலைப்பள்ளி ஒன்றின் பெயர் ஈச்வரன் பிள்ளை மேல்நிலைப்பள்ளி. சிறுவயதில் இந்தப் பெயர் தாங்கிய அப்பள்ளியின் பலகையில் மேற்கண்டவாறு பள்ளியின் பெயர் எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும்போதெல்லாம் ஏதோ ஒரு தவறு இருப்பதாகவே தோன்றும். பின்னர் புரிந்து கொண்டேன். பின்னர் தமிழ் மரபுக்கு ஏற்றவாறு அச்சொல்லை ஈசன் என்று.. மாற்றிக்கொண்டோம். ஈசன் என்னும் சொல் தலைவன் எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. உலகிற்கு தலைவன் ஈஸ்வரன்.
முருகேசன். முருகு+ஈசன்.. (முருகு என்பது அழகு. முருகு+அன்… முருகன்) அதாவது அழகிற்குத் தலைவன்…
புவனேசன்…. புவனம் என்றால் உலகம் உலகின் தலைவன் என்று பொருள் படும்…
அழகேசன். அழகுக்குத் தலைவன்(அழகு நிறைந்தவன் என்று பொருள் கொள்ள வேண்டும்) எனும் பொருளில் மீண்டும் முருகனைக் குறிக்கிறது.
இதைப்போல பெண்பால் பெயர்களும் அழகேஸ்வரி, முருகேஸ்வரி புவனேஸ்வரி, ஆவுடேஸ்வரி ஈஸ்வரன் ஈஸ்வரி.
ஈஸ்வரி(தலைவி) என்று பயன்படுத்தப்படுகின்றன. மகா+ஈஸ்வரன்…மகேஸ்வரன்.. அவருக்கு இணையாகவோ, அவருக்கு மேலாகவோ ஒரு தலைவர் கடவுள் இல்லை. அவருக்கு நிகரான ஒரு தலைவி உண்டு. அவளை அவருக்குச் சமமாகச் சொல்வதற்காக மகா+ஈஸ்வரி…மகேஸ்வரி. ஈசனுக்கு நிகரானவள் என்று குறிப்பிட்டனர்.
என் அத்தை ஒருவரின் பெயர் ஈஸ்வரம். ஈஸ்வரம் என்ற சொல்லுக்கு வடமொழியில் பார்வை என்ற பொருள் உண்டு. சிவனுக்கு மூன்று கண்கள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
இங்குச் சிக்கல் என்னவென்றால், இந்த… வரன், வரிகளை …எழுதும்போது ஸ்.. என்னும் எழுத்தைப் பயன்படுத்த வேண்டுமா? அல்லது ஷ்.. என்னும் எழுத்துதான் முறையானதா? எதை பயன்படுத்துவது என்பதுதான்…
பொதுவாக, பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, மாரீஸ்வரி, ஜெகதீஸ்வரி, என்றெல்லாம் எழுதும்போது இந்தக் குழப்பம் ஏற்படாமல் ஸ் … என்னும் எழுத்தைப் பயன்படுத்திப் பெயரை எழுதி விடுவோம். அதைப்போல இவற்றின் ஆண்பால் சொற்களை பரமேஸ்வரன், மாரீஸ்வரன், முனீஸ்வரன், இராஜேஸ்வரன் எழுதும்போதும் ஸ் என்னும் எழுத்தைப் பயன்படுத்திவரும் நாம்…
விக்னேஷ்வரி மகேஷ்வரி என்று எழுதும்போது மட்டும்
“ஷ்” என்னும் எழுத்தைப் பயன்படுத்தி வருகிறோம்…. அதைப்போல இதுபோன்ற பெயர்ச்சொற்களைச் சுருக்கமாக கணேஷ், மகேஷ், முகேஷ், ராஜேஷ்.. சுரேஷ், ரமேஷ். இன்று எழுதும் போது தவிர்க்க முடியாமல்.. ஸ்… என்னும் எழுத்து…ஷ் .. என்று என்னும் எழுத்தாக மாற்றம் பெறுகிறது.
“ஸ்” என்னும் எழுத்து சொல்லின் ஈற்றெழுத்தாக வராது என்று எண்ணி சொல்லின் ஈற்றில் “ஷ்” பயன்படுத்தி வருகிறோம் என்று நினைக்கிறேன்… இது வடமொழியை நன்கு அறிந்தவர் மட்டுமே சொல்ல முடியும். அதைப்போல விளி வேற்றுமையிலும். (அழைக்கின்ற போது) ஈஷா…ஆஷா … என்று அழைப்போம்….என்னைப் பொறுத்த வரையில் இவ்விரண்டு பெயர்ச் சொற்களுக்கும் இடையில் பெரிய அளவில் வேறுபாடு ஒன்றுமில்லை. இரண்டு எழுத்துக்களில் எந்த எழுத்தை எழுதினாலும் நமக்கு அது வேறுபட்டுத் தோன்றவில்லை .அவரவர் மனம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது.. முடிவு.
எது எப்படி ஆயினும் இவை இரண்டும் தமிழ்ப் பெயர்கள் அல்ல.
ராமசாமி என்னும் பெயர்தான் அல்லது ராமையா என்ற பெயர்தான்.. சுருங்கி ரமேஷ் என்று வழங்கப்பட்டிருக்கும். இது சுருக்கம் கருதி மட்டுமன்று. நாகரிகம் என்ற நினைப்பிலும்… தாத்தா பெயர் ராமசாமி. அதைச் சுருக்கி நாகரிகமாகப் பெயரனுக்கு, ரமேஷ் என்று பெயர் சூட்டப்பட்டது. இதைப்போல சுப்பையா சுரேஷ் ஆனார். ஹரி கிருஷ்ணன் ஹரிஷ் ஆனார். மூக்கையா முகேஷ் ஆனார். ராஜேஷ்வரன் ராஜேஷ் ஆனார். முனியசாமி முனீஸ் ஆனார். கணேசன் கணேஷ் ஆனார். சாத்தப்பன் சதீஷ் ஆகிவிட்டார்.
கடவுளர் பெயர்கள் ஆயினும், அவை யாவற்றிற்கும் தூய தமிழில் பெயர்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்து பிள்ளைகளுக்குச் சூட்டுவோம். இதைச் செய்தால் இந்தக் குழப்பமும் இல்லை தமிழும் தழைக்கும்.
தமிழ் முத்துமணி ..