சொல்லுக சொல்லை/என் பையன் பிஏ பண்ணுறான்/தமிழ் முத்துமணி
1 min readTamil Ilakkiyam by Muthumani
4/3/2021
என் பையன் பிஏ பண்ணுறான்.
“அண்ணே வாங்க, வணக்கம் நல்லா இருக்கீங்களா? பார்த்து வெகு நாளாச்சு. யாரு? உங்க பையனா? இப்போ என்ன பண்ணுறான்?”
“அடடே வாங்க தம்பி. ஆளையே பார்க்க முடியல. இவன் என் மூத்த பையன் முருகன். ஜேகே காலேஜ்ல பிஏ இங்கிலீஷ் பண்றான்.”
“அப்படியா அண்ணே. ரொம்ப சந்தோசம். தம்பி நல்லாப் படிக்கணும் என்ன?. என் பையன் இன்ஜினியரிங் பண்ணிகிட்டு இருக்கான்”.
இந்த உரையாடலில்பண்ணுறான் அல்லது பண்ணுகிறான் அல்லது பண்றான் என்னும் சொற்கள் உணர்த்தும் பொருள் என்ன?. அது தமிழ்ச் சொல்தானா?.
“நாளைக்குக் காலைல எனக்குப் போன் பண்ணு. எல்லாம் முடிச்சு தரேன்”.
“நீயாட இந்த காரியத்தைப் பண்ணுனே? அறிவு கெட்ட முட்டாள் என்று நண்பனைக் கடிந்து கொள்ளும் நண்பன்.
“ஏண்டா, பள்ளிக்கூடத்துல என்னடா தப்பு தண்டா பண்ணித் தொலைச்ச?. இப்ப வாத்தியார் என்னை வரச் சொல்லி இருக்காரு. சொல்லுடா. என்ன பண்ணுனே” என்று மகனை வினவும் தந்தை, “என்னைக் கேட்டுட்டா பண்ணுன? என்னமோ பண்ணித் தொலை. இது என்னது பாயாசமா? கஞ்சியா? மனைவியின் சமையலைக் குறை சொல்லும் கணவன்,
இப்படி அனைவர் உரையாடலிலும் தவறாமல் இடம் பெறும் சொல் இந்த பண்ணி என்பது.
இச்சொல் முறையான சொல்லா? அல்லது அதற்குப் பதிலாக “நல்லது தம்பி. இப்போது என்ன செய்கிறாய்?”.” ஏண்டா நேரங்கெட்ட நேரத்துல எங்காவது அலைந்துவிட்டு வருகிறாயா?. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தைச் செய். அப்பாவிடம் சொல்கிறேன்.”
“பள்ளிக்கூடத்தில் என்ன சேட்டை செய்தாய்?” இப்படிப் பேச வேண்டுமா என்பதுதான். அப்படியானால்
பண்ணி என்று சொல்லக்கூடாதா என்று கேட்டால், தவறு ஒன்றும் இல்லை. என்று தான் தோன்றுகிறது. ஆனால் அச்சொல்லைக் கேட்டதும், நமக்கு ஒரு சிரிப்பு ஏற்பட்டுவிடுகிறது. காரணம் என்னவென்று சொன்னால், பன்றி என்னும் சொல் எழுத்து வடிவில்தான் இருக்கிறது. நம் வாயில் பேச்சாக வரும்போது, அதுவே பண்ணி என்று மாறிவிடுகிறது. எனவே அந்தச் சொல் எழுதப்படும்போது நமக்கு ஒருவித நகைச்சுவை உணர்வு ஏற்பட்டுவிடுகிறது.
பண்ணி என்னும் சொல்லுக்குப் பொருள் தேடினால் நம்முடைய அகராதிகள்,’செய்து அமைத்து, சமைத்து,’ எனப் பல்வேறு பொருட்களைத் தருகின்றன. குறிப்பாக ஏற்பாடு செய்து, சமைத்து எனும் பொருளை இச்சொல் பெருமளவில் உணர்த்துகினறது.
பண்ணுதல் என்னும் தொழில் பெயர் சொல் தமிழில் இருக்கிறதா? என்று சிந்தித்தால் இருக்கத்தான் செய்கிறது. அது ஒன்றும் பிழையான சொல்லன்று. நம்முடைய இலக்கியங்கள் இச்சொல்லை கையாண்டுள்ளனவா?. என்று ஆராய்ந்தால், ஆம். என்பதே உண்மை..
மகாகவி பாரதி,
படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் அய்யோன்னு போவான்
என்று ஒரு சாபம் கொடுக்கிறான். பின்னர் அன்னை பராசக்தியை அவர் வேண்டும்போது,
பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போல நண்ணிய நின்முன் இங்கு நசிந்திடல் வேண்டும் அன்னாய்
என்று கேட்கிறார்.
“சூரிய ஒளி முன்னே ஒரு கணமுமம் இருக்க முடியாமல் பனித்துளிகள் ஓடி விடுவதைப் போல உன் அருள் வெள்ளத்தின் முன்னால் நான் செய்த பாவங்கள் அனைத்தும் அழிந்து ஒழிந்து ஓடிவிட வேண்டும்” என்று கேட்கிறார்.
இந்த இரண்டு பாடல்களிலும் பண்ணி எனும் சொல்லை செய்தால், செய்த எனும் பொருளில் பயன்படுத்தி இருக்கிறான் பாரதி.
“பிளான் பண்ணி அடிக்கணும்.. நமக்குத் தோல்வியே கிடையாது.”
“தலைவரே, இந்தத் தேர்தலில் நாம் எதையாவது பண்ணி வெற்றி பெற்றே ஆகணும்”.
“நீ என்ன பண்ணுவியோ எதை பண்ணுவியோ எனக்குத் தெரியாது. நான் கொடுத்த ரூபாய் நாளைக்கு வந்தாகணும்”.
“போடா உனக்குப் பயந்தவன் நான் இல்லை. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ”.
“அண்ணே உனக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்”.
“போடா ,நீ இதுவரைக்கும் பண்ணுனதே போதும். ஒண்ணும் கிழிக்க வேண்டாம். போ”.
“டேய் நீ சொல்வது உண்மையா? சத்தியம் பண்ணுடா”.
“.அவசரத்துல தப்பு பண்ணிட்டேன் மாப்பிள, தப்பு பண்ணிட்டேன்”.
இப்படி நம் பேச்சில் பண்ணி தாராளமாக வந்து நிற்கும்.
சரியாகப் படிப்பு வராத மாணவனைப் பார்த்து, “நீ எல்லாம் பள்ளிக்கு வர வேண்டாம். பேசாம நாலு பண்ணிய வாங்கி மேய்க்கப் போ”.வகுப்பில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மாணவனைப்,” பள்ளிக்குப் படிக்க வந்தியா? பண்ணி மேய்க்க வந்தியா?”
“படிக்கிற காலத்துல ஒழுங்காப் படிங்கடா. வருங்காலத்தில் நல்ல வேலைக்குப் போய் சோறு சாப்பிடலாம். இல்லனனா பணணி மேய்க்கத்தான் போகணும்” இப்படித் திட்டுவது வழக்கம்அப்படி என்ன பன்றியும் பன்றி மேய்ப்பதும் அவ்வளவு கேவலமா.?.
என்னுடைய பள்ளி நாட்களில் விடுமுறை நாள் என்றால், எங்கள் கடைப்பக்கம் மதிய நேரம் போவதுண்டு. என் தந்தை, சில நாட்களில் என்னைக் கடையில் உட்கார வைத்துவிட்டு, வீட்டிற்கு மதிய உணவிற்காகச் செல்வதுண்டு. மகிழ்ச்சியோடு, கடையில் உட்கார்ந்து கொண்டு வியாபாரம் பார்ப்பது ஒரு மகிழ்ச்சி. வீட்டில் இருந்து மூன்று மணி அளவில் திரும்பி வந்தவுடன், “என்னடா வியாபாரம் எப்படி இருந்தது?” என்று கேட்பார். நான் விற்பனை செய்த விவரங்களைச் சொல்வேன். கூர்ந்து கவனித்து விட்டு, சிரித்துக்கொண்டே கல்லாப் பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டு, என் தந்தை சொல்லும் வார்த்தைகளுக்கு அப்போது எனக்குப் பொருள் புரியவில்லை. “வியாபாரம் பண்ணி நாயே”என்பார். பிறகு கொஞ்சம் பிரித்துச் சொல்வார் “வியாபாரம் பண்ணி நாயே” மீண்டும் ஒரு முறை சற்று இழுத்து ராகத்தோடு பாடியும் காட்டுவார். அவர்.”வியாபாரம் பண்ணினாயே.. வியாபாரம் பண்ணி நாயே. பண்ணி நாயே யேயேயே” பண்ணினாயே.. என்பதைப் பிரித்தால் பண்ணி+நாயே.. அதாவது என்னைப் பார்த்துப் ‘பன்றியே, நாயே’ என்றும், ‘வியாபாரம் செய்த நாயே’ என்றும் கிண்டலாகச் சற்றே செல்லமாகக் கடிந்து கொள்கிறார்.காரணம் அவர் கடையில் இல்லாத நேரத்தில் அதிகமான வியாபாரம் நடக்கவில்லை. வியாபாரம் செய்யும் திறமை என்னிடம் இல்லை. என்பதைச் சிலேடையில் அழகுற அப்படிச் சுட்டிக்காட்டுவது கோபக்கார என் தந்தையின் நகைச்சுவை உணர்வுக்கு நல்லதொரு சான்றாக இன்றளவும் என் மனதில் இருக்கிறது.
இதுபோன்ற இடங்களில்தான் பண்ணி எனும் சொல் நல்ல நகைச்சுவைக்கு இடமளிப்பதாக இருக்கிறது.
பிஏ பண்ணுறான். பிஏ பண்ணக் கூடாது சார். அது ஒரு படிப்பு. அதைப் படிக்க வேண்டும். பிஏ என்பது என்ன கத்தரிக்காயயா? அல்லது சுரைக்காயா? அவியல், பொரியல், வறுவல் என்று சமையல் பண்ண?என்று கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
பண்ணை என்னும் சொல் மருத நிலம் நல்லது நன்செய் எனும் பொருளில் பயன்பட்டு வந்தது. ஏராளமான நன்செய் நிலம் உடையோரைப் பண்ணையார் என்றும் நன்செய்யில் வேலை செய்பவரை பண்ணையாள் என்றும் சொல்லி வந்தனர். சின்ன பண்ணை பெரிய பண்ணை என்பதெல்லாம் அவரருக்குச் சொந்தமான நன்செய் நிலத்தின் அளவைப் பொருத்தது. பிற்காலத்தில் பண்ணையார் என்னும் சொல் செல்வந்தரைக் குறிப்பதாக மாறிப் போயிருக்கும். பண்ணையம் என்பது நன்செய் நிலத்தை நிர்வகிப்பது. விவசாயம் செய்வது. அதன் பின்னர், பொதுவாக நிர்வாகம் செய்வதையே பண்ணையம் பார்க்கிறான், என்று சில மாவட்டங்களில் வழங்கினார்.
பண்ணியம், பண்டம், பணியாரம், பண்டசாலை, பண்டகம், பண்டாரம் என்னும் சொற்கள் யாவும் பண்ணை என்னும் சொல்லில் இருந்து பிறந்தவை தான்.
பண்ணியம் என்பது சோற்றைக் குறிக்கிறது. பண்ணிய வீதி என்பது கடைத்தெருவை குறிக்கிறது. பண்படுத்துதல் என்றால் பக்குவப்படுத்துதல். இச்சொல்லின் முதல் பண்மை என்பது. பண்மை என்றால் தகுதி என்பது பொருள் பண்ணை என்றால் மருதநிலம் என்று நம் நூல்கள் கூறுகின்றன. பண்ணி என்பதற்கு அமைத்து தயாரித்து சமைத்து ஏற்பாடு செய்து என்னும் பொருள் கொள்ளலாம் நமக்குத் தேவையான பல்வேறு பொருட்களை விற்க கூடிய இடம் பண்ணிய வீதி.
சங்க இலக்கியத்தில் இச்சொல்லை தேடிப் பார்த்தபோது ஏராளமாகக் கிடைத்தன.
புகழ்பட பண்ணிய பேர் ஊன் சோறும்
(மதுரைக்காஞ்சி அடி661.)
ஊரின் வளத்தைப் பேசும்போது மதுரைக்காஞ்சி ஏதோ ஓர் உணவு வகையை இங்கே குறிப்பிடுகிறது. அது ஊன் சோறு. ஊன் சோறு என்பது மாமிசம் கலந்த சோறு. ஒருவேளை பிரியாணியாக இருக்கலாம். சமைத்த ஊன் சோறு என்று சொல்லாமல் பண்ணிய ஊன்சோறு என்று குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும்.
குரங்கு அருந்தும் பண்ணியம் கொடுப்போரும்.. (பரிபாடல்)
குரங்கு உண்ண சோறு கொடுப்பார் என்று பரிபாடல் மேற்கண்ட வரிகளில் குறிப்பிடுகிறது.
நெடுந்தேர் பண்ணி வரல் ஆனாதே.. (நற்றினை.அடி220 )
மேற்கண்ட வரிகளில் நற்றினை தேர் பண்ணி என்று குறிப்பிடும்போது தேர் உருவாக்குதல் தேர் அமைத்தல் எனும் பொருளில் பயன்பட்டிருக்கக் காணலாம்.
நூல் நெறி மரபின் பண்ணி ஆனது என்று சிறுபாணாற்றுப்படை 230 ஆவது அடியில் கூறப்பட்டுள்ளது.
இங்கு, இன்னும் ஒரு செய்தியைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆங்கிலத்தின் மீது உள்ள அளவற்ற ஈர்ப்பினால் ஆங்கில, மரபுக்கு நம் தமிழை நாம் நம்மை அறியாமல் மாற்ற முனைகிறோம் நினைக்கிறோம். பிஏ படிப்பவன் அதை ஆங்கிலத்தில் சொல்வதானால் I am doing my BA என்று சொல்வது வழக்கம். அதைப் பின்பற்றி doing என்றால் செய்வது தானே என்று நினைத்து” நான் பிஏ செய்கிறேன்” என்று சொல்ல முனைந்து ஒருவேளை அது தவறாக இருக்குமோ? என்று நினைத்து,” நான் பிஏ பண்ணுகிறேன்” என்று யாரோ ஒருவர் தொடங்கி வைத்தது இன்று வரை தொடர்கிறது. ஒரு படிப்பைச் செய்யவும் முடியாது பண்ணவும் முடியாது. ஆக்கவும் முடியாது.படித்தால்தான் தீரும்.
இதில் அறிந்து கொள்ள வேண்டிய இன்னுமோர் அவசியமான செய்தி உள்ளது. அது என்னவெனில் தொடர்ந்து முழுக்க தமிழிலேயே எழுதினால் சொல்லும் செய்தியில் இச்சொல்லைப் பயன்படுத்த வேண்டாமெனில் தவிர்த்து விடலாம். இச்சொல் தவிர்க்கமுடியாத பயன்பாட்டில் வருவது எந்தச் சூழலில் தெரியுமா? ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பேசும்போதும் எழுதும் போதும், குறிப்பாக ஆங்கில வினைச்சொல் தமிழ் பெயர்ச்சொல்லைத் தொடருமாறு தொடர்களை உருவாக்கும் இடத்தில் பண்ணி என்னும் சொல்லை நம்மால் தவிர்க்கவே இயலாது என்பதுதான்.
இதைச் சற்று நகைச்சுவையாகப் பின்வரும் சான்று மூலம் காண்போம்.
ஒருவன் தன்னைப் பற்றி சில செய்திகளை சொல்லிக் கொள்கிறான். என்று வைத்துக் கொள்வோம்..." நான் சென்னையில் பிறந்து வளர்ந்து அங்கேயே தொடக்கப் பள்ளியில் சேர்ந்து பயின்று, தேர்ச்சி அடைந்து பின்பு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து கற்று, தேர்ச்சி அடைந்து, கல்லூரியில் சேர்ந்து படித்துத் தேறி, பின்னர் பணியில் சேர்ந்து பொருளீட்டி , பிறகு இவளைத் திருமணம்செய்துகொண்டு...இரண்டு பிள்ளைகளைப் பெற்று....... இப்படிச் சொல்லிக் கொண்டு போகிறான். இதில் ஒரு சிக்கலும் இல்லை.
இதையே ஆங்கிலத்தோடு அதாவது ஆங்கிலச் சொற்களோடு கலந்து ஆங்கிலமும் தமிழும் கலந்த நடையில் சொல்லும் போது எப்படி வருகிறது என்ன நேருகிறது என்பதைப் பாருங்கள்..
“நான் சென்னையில் பிறந்து வளர்ந்து, அங்கேயே பிரைமரி ஸ்கூலில் ஜாயின் பண்ணி, பாஸ் பண்ணி பிறகு ஹையர் செகண்டரி ஸ்கூல் இன் ஜாயின் பண்ணி படித்து, அங்கேயும் பாஸ் பண்ணி, பின்னர் காலேஜில் ஜாயின் பண்ணி படித்து, டிகிரி பண்ணி முடித்ததும் ஜாப்பில் ஜாயின் பண்ணி, நிறைய பணம் ஏர்ன் பண்ணி, பிறகு மேரேஜ் பண்ணி…… எனக்கு பிறந்தது இரண்டு பண்ணி.. ..இல்லை இல்லை இரண்டு பிள்ளைகள்.” வேடிக்கைக்காக இப்படிச் சொல்லப்பட்டது.
மேற்கண்ட செய்தியில் join, pass, marriage போன்ற ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியதால், பொருள் விளங்கிக் கொள்வதற்காக அதன் பின்னர் பண்ணி என்னும் சொல்லைச் சேர்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது புரியும். ஒழுங்காகத் திருமணம் செய்திருந்தால் ஒருவேளை பிள்ளைகள் பிறந்திருக்குமோ!! என்னவோ.. பண்ணிகள் பிறந்திருக்க மாட்டா. இங்கு join பண்ணியதால், pass பண்ணியதால், marrige பண்ணுவதற்கு முன்பாகவே பிறந்து விட்டன எட்டுப் பண்ணிகள். பள்ளியில் சேர்ந்து என்னும் தொடர் என்ன பொருளைத் தருகிறது அதே பொருளைத் தான் பள்ளியில் join பண்ணி என்னும் தொடர் தருகிறது என்பதை அறிக. உடல் நலமில்லாத உறவினரை மருத்துவமனையில் சேர்த்தேன் என்று சொல்லும் இடத்தில் சிக்கல் தோன்றுமா? ஹாஸ்பிட்டலில் அட்மிட் என்று எழுதிய பிறகு பண்ணினேன் என்று தான் எழுத முடியும். இதையே அட்மிஷன் என்று சொன்னால் பிறகு போட்டேன் என்று தான் முடிக்க முடியும் .ஹாஸ்பிட்டலில் அட்மிஷன் போட்டேன். ஆக, அழகு தமிழைக் குலைப்பது ஆங்கிலம் கலந்து எழுதும் செயல்தான்.
இப்போதும் பண்ணி என்னும் சொல் தமிழ்ச்சொல்தான். அச்சொல் குறிக்கும் பொருள்களும் சிறப்பானவைதான் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆயினும் பேச்சுவழக்கில் பொருள் திரிபு ஏற்பட்டு சற்று நகைச்சுவைக்கு இடம் தருகிறது என்பதைச் சுட்டிக்காட்டுதல் மட்டுமே இக்கட்டுரையின் நோக்கமாகும். மற்றபடி அச்சொல்லைப் பயன்படுத்துவதில் எந்த விதமான தயக்கம் வேண்டாம். முறையாக எந்த இடத்தில் என்ன பொருளில் பயன்படுத்த வேண்டுமோ அங்கு மட்டும் பயன்படுத்துவோம். ஆங்கிலம் கலவாமல் தமிழை மட்டும் எழுத, பேசப் பழகுவோம். தமிழ் ஆசிரியர் ஒருவருக்கும் அவர்தம் மாணவருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்…. கீழே இடம் பெற்று உள்ளது அதையும் படித்து விடுங்கள்
மாணவன்:குட்மார்னிங் ஐயா.
ஆசிரியர் : கிளாசில் எல்லோரும் பியூர் தமிழில் தான் பேச வேண்டும் என்று சொல்லி இருக்கிறேண்டா ஃபூல்.
மாணவன். பியூர் டமிழில் பேச ட்ரை பண்ணுகிறேன் ஐயா. பட் இட் இஸ் வெரி டிஃபிக்கல்ட்
ஆசிரியர். பிகினிங் அப்படிதாண்டா இருக்கும். கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணு ஓகே ஆயிடும்..
வாங்க நாமும் ட்ரை பண்ணுவோம் பண்ணிக்கிட்டே இருப்போம்!!!!
தமிழ் முத்துமணி
, சிவகாசி