சிறியதா? பெரியதா?.. தீராத ஒரு தகராறு….(சொல்லாராய்ச்சி/ சிவகாசி முத்துமணி)
1 min readTamil Ilakkiyam/ sivakasi Muthumani
5/1/2021
எழுதும்போது நம்மில் பலருக்கும் பொதுவான தகராறு ஒன்று ஏற்படும். தகராறு என்னவென்றால், தகராறு என்று எழுத, எந்த ர/ற போட வேண்டும்?. அதாவது ரகரம் போட வேண்டுமா? அல்லது றகரம் போட வேண்டுமா? என்பதுதான் மனதிற்குள் சின்ன ராவா? பெரிய றாவா? என்று இப்போது ஒரு பெரிய தகராறு வரும்.
“சின்ன தகராறு என்றால் சின்ன ரா போடு. பெரிய தகராறு என்றால் பெரிய றா போடு” என்று நகைச்சுவையாகச் சொல்லி பின்னர் விளக்கம் தந்துபிரச்சினையை முடித்து நகைச்சுவை உணர்வு மிகுந்த எங்கள் ஆசிரியர்.
நான் கூட வகுப்பில் அடிக்கடி சொல்வேன் எவ்வளவு பெரிதானாலும் சின்னரா எவ்வளவு சிறிதானாலும் பெரிய றா போடு. (பெரிய, சிறிய) இடையினம் வல்லினம் என்னும் வேறுபாடு கூட சமயத்தில் பிரித்தறிய முடியாது பலரும் திகைத்துப் போவதுண்டு.
“குணமா? அல்லது குனமா? எத்தனைச் சுழி போடணும் ஐயா?” என்று கேட்டவனிடம் “சும்மா நாலு அல்லது ஐந்து சுழி” போடு என்றேன். அவன் ஒரு மாதிரியாக விழித்தான்.”பிறகு எப்படிடா தமிழ் வளரும்?” என்று வேடிக்கையாகச் சொன்னேன். டண்ணகரம் றன்னகரம் என்பதெல்லாம் சொன்னால் புரியாது.
பள்ளியா? பல்லியா? எந்த லி/ளி போட வேண்டும்? தெரியவில்லை. உன் பெயர் வள்ளியா?வல்லியா?. தெளிவாகச் சொல். எந்த ல்/ள் வரும்? எந்த லி/ளி போட வேண்டும்?.
இப்படி அன்றாடம் ஆயிரம் முறை ஐயம் வந்து போகும். எழுத்துகளை மாற்றிப் போட்டால் பெரிய அளவில் பொருள் வேறுபாட்டை உண்டாக்கிவிடும். வல்லி என்றால் கொடி.(புஷ்பவல்லி… பூங்கொடி அல்லது மலர்க்கொடி) வள்ளி என்றால் கிழங்கு. சிலர் புஷ்பவள்ளி என்று (தவறாகப்) பெயர் வைத்திருப்பதும் உண்டு (பொருள் புரியாத காரணத்தால்). கல் என்னும் சொல்லில் லகரத்தை மாற்றி, கள் என்று எழுதினால், பிழையான பொருள் படும் அல்லவா? அலி..அளி..அழி… மூன்று சொற்களும் வேறு வேறு பொருள் கொண்டவை. சிறிய ஒலி வேறுபாட்டில்இப்படி (லளழ) மூன்று எழுத்துக்கள் இருப்பதுதான் தமிழில் பெரிய சிக்கல் என்று வருத்தத்துடன் கூறுவார் உண்டு. சிக்கல் தமிழில் இல்லை. சரியாக அறிந்து கொள்ளாத, வேறுபாட்டைத் தெரிந்து கொள்ளாத நம்மிடம் தான் சிக்கல் இருக்கிறது என்பதை உணர வேண்டும். இச்சொற்களை எழுதும்போது குழப்பம் நேரிட்டு நீண்ட சிந்தனைக்குப் பின் சிலருக்குத் தெளிவு ஏற்படும்.
பொலிவு வேறு பொழிவு வேறு(முகப்பொலிவு மழைப்பொழிவு). கள்ளி வேறு கல்லி(கள்ளிச்செடியின் வேரைக் கல்லி) வேறு என்று புரிந்துகொள்ள இயலும். ஆனாலும் சில சொற்கள் மட்டும் எவ்வளவு சிந்தித்தபோதும் சரியா? தவறா? என்று முடிவெடுக்க இயலாமல் விழிக்கச் சொல்லும்.. கற்றவர்க்கும் குழப்பமாய் அமையும்.
அந்த வகையில், இழிவு,இளிவு.. என்னும் இரண்டு சொற்களையும் எடுத்துக்கொண்டு முதலில் சற்று ஆய்ந்து பார்ப்போம். இவற்றுள் எது சரியானது? இச்சொற்கள் இரண்டும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றனவா? இச்சொற்களின் பொருள் என்ன? முதலில் ஐயன் வள்ளுவரைக் கேட்போம்.
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு….
( திருக்குறள். பொருட்பால் .குறள் எண் 970. அதிகாரம்.. மானம்.)
இக்குறட்பாவில் முதல் சீராகிய இளிவரின் என்னும் சொல்லுக்கு என்ன பொருள்? இழிவு என்பதைத்தான் வள்ளுவர் இளி என்று சொல்லியிருக்கிறாரா? அது சரியானது தானா?. இழிவு என்றால் இழிவரின் என்றல்லவா இருக்க வேண்டும்?
மானத்திற்கு ஒரு இழிவு ஏற்படும் போது உயிர் வாழாத அளவிற்கு, (உயிர் துறப்போர்) மானத்தில் உயர்ந்தோரின் புகழை இந்த உலகம் என்றென்றும் போற்றிப் புகழ்ந்து வணங்கும். என்பதுதான் இச்செய்யுளின் பொருள் சுருக்கம். மானக்கேடு ஏற்பட்டால் செத்து விட வேண்டும். உயிரா? மானமா? என்ற நிலைமை ஏற்படும்போது, மானமே பெரிது எனக் கருதி, உயிரை விடுவோர் உயர்ந்த நிலையான புகழ் பெறுவர். என்றென்றும் உலகம், அவர் புகழைப் போற்றி வணங்கும். (மானத்தை விட உயிர் தாழ்ந்தது. உயிரை விட மானம் உயர்ந்தது)
இப் பொருள்பட அமைந்த இக்குறளில், இழிவு என்னும் பொருள்படும் வகையில் தான்’ ‘இளி’இன்னும் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார் வள்ளுவர்.
அப்படியானால்இழி,இளி இவ்விரண்டு சொற்களுக்கும் ஒரே பொருள்தானா?
இளிவரின்.. என்பதற்கு. (மானத்திற்கு ஒரு தாழ்வு ஏற்பட்டால்) இழிவு வர நேரிட்டால் … என்று பொருள் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படியானால் இழி, இளி இரு சொற்களுக்கும் ஒரே பொருள்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
சரி அதே வழியில் இன்னும் கொஞ்சம் விரிவாகச் சிந்திப்போம்.
இழிவு என்னும் சொல் பொதுவாக, குறைந்து போதல், தாழ்ந்து போதல் என்னும் பொருள்களைத் தருகிறது. அகராதிகள் சொல்கின்றன. உயர்ந்த நிலையில் இருந்து கீழே விழுந்து விடுதல். நிலை தாழ்தல் என்னும் பொருளில்தான் இழிதல் என்னும் சொல் பயன்படுகிறது.
நீரிழிவு என்றால் சிறுநீர் நிற்காமல் கீழே இறங்கி சென்றுகொண்டே இருக்கும் ஒரு நோய்.
இழிந்த மயிர் என்றால் தலையிலிருந்து கீழே விழுந்த( கழிந்த) மயிர். தலையில் இருக்கிற போது உயரத்தில் இருந்தது. தலையிலிருந்து உதிரும் போது தாழ்மை அடைந்து விட்டது. தலையிலிருந்து இழிந்ததும் தன்மதிப்பு இழந்துவிட்டது. தலையில் இருக்கிறபோதுதான், குஞ்சி, குழல், கூந்தல்,(கார்குழல், தாழ்குழல்) என்று கொண்டாடப்பட்டது. ஒரு நாளைக்குப் பத்து முறை சீப்பு கொண்டு தலையைச் சீவுதல் நறுமணத் தைலம் பூசிக்கொள்தல், மயிர் வெளுத்துவிட்டால் கருப்பு மையைப் பூசுதல் அழகாய்ச் சுருட்டி விடுதல் என்று எப்படி எல்லாம் மரியாதை பெற்றது தலைமயிர்.தலையிலிருந்து தன் நிலைமை இறங்கியவுடன் இழிந்து கார்கூந்தலாக பைங்குழலாக இருந்தது, மயிர் என்ற ஒரே பெயர்பெற்று, வீசி எறியப்பட்டது. நிலைமை தாழ்ந்து விழுந்த பிறகு அதற்கு எந்த மதிப்பும் இல்லை.
(உ)ரோமம் என்பது தமிழ்ச் சொல்லன்று. சிகை என்பதும் அப்படித்தான். முடி என்னும் சொல் மயிரைக் குறித்ததன்று. முடி என்பது மணிமுடி, மகுடம் தலைக்கு மேல் வைக்கப்படும் மகுடத்தைக் குறித்தது. முடிமன்னர் என்றால் மகுடம் சூடிய மன்னர். மும்முடிச்சோழன் ராஜராஜ சோழன் சேர சோழ பாண்டிய நாட்டைத் தன்வசம் வைத்திருந்தமையால் மூன்று நாடுகளின் மகுடத்தைச் சூடியவன். மயிர் என்பதைச் சற்று கீழ்த்தரமான சொல் என்று கருதி அதற்கு மாற்றாக முடி என்பதைப் பொதுவாகப் பயன்படுத்தி வருகிறோம். முடி திருத்துதல் என்று இப்போது சொல்கிறோம். நம் இலக்கியத்தில் மயிர் திருத்துதல், மயிர் திருத்தி எனும் சொல்தான் பயன்பட்டிருக்கிறது.
மடியிருத்தி மயிர் திருத்தி.
சுருளும் மயிர் நுதல் சுட்டி.(பெரியபுராணம்).
மயிர் கவின் கொண்ட மா தோல் இரும்
அரிமயிர் திரள் முன்கை
(புறநானூறு)
பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப (மதுரைக்காஞ்சி)
சங்க இலக்கியத்தில்(பத்துப்பாட்டு எட்டுத்தொகை) 56 இடங்களில் மயிர் எனும் சொல் இடம்பெறுகிறது.
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா.. என்னும் வள்ளுவர் மொழி அனைவரும் அறிந்தது. இன்று எவரையாவது திட்டுவதற்கு மட்டும் நம் வாயில் மயிர் என்னும் சொல் மயிறு எனத் திரிந்து வந்து போகிறது.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை
என்று வள்ளுவரே பேசுகிறார். தன் நிலையிலிருந்து இழிந்த அதாவது தாழ்ந்த உயர்ந்த நிலைதாழ்ந்து போன மனிதர் தலையிலிருந்து விழுந்துவிட்ட மயிருக்கு ஒப்பானவர் என்பது வள்ளுவரின் கருத்து.
இப்பாடலில் இழிந்த என்னும் சொல் இருமுறை ஒரே பொருளில்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.(மதிப்பிழந்து தாழ்ந்து போகிறது)
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.
மேற்கண்ட குறளில் ஒழுக்கம் இல்லாமல் போனால், நம் பிறவி மனிதப் பிறவியிலிருந்து தாழ்ந்துபோய்விடும். அதாவது விலங்கிற்கும் கீழான நிலை அடைந்து போகும் என்று கூறுகிறார்.
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேரிரையான் கண் நோய்..
இதுவும் வள்ளுவரின் வாக்கு. அதிகம் உணவு உண்பவன் நோய்க்கு ஆளாவது உறுதி. உணவை குறைத்துக் கொள்ளவேண்டும. என்றும் இன்பமாய் வாழலாம். இக்குறளில் இழிவு என்பது குறைவாக என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உணவின் அளவைத் தாழ்த்தி கொள்பவனிடம் இன்பமே நிலைகொள்ளும் அளவு தெரியாமல் அதிகமாய் என்பவனிடம் நோய் நிரந்தரமாகத் தங்கும். அளவோடு உண்டால் உணவு அளவுக்குமீறி உண்டால் இரை.(இரை என்பது மனிதனுக்கு இல்லை விலங்குகளின் உணவைத்தான் இரை என்று கூறுவோம்)
எய்யாமையோடு இளிவுதலைத் தரும்.. (நற்றினை)
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு (குறுந்தொகை)
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு(பரிபாடல்)
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவு(கலித்தொகை)
இவையாவும் சங்கப்பாடல்களின் தங்க வரிகள்.
இவ்வரிகளை கூர்ந்து நோக்க வேண்டும்.மேற்கண்ட இவ்வரிகளில் எல்லாம் இளிவு என்னும் சொல் இழிவு என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் காண முடியும்
இளி என்னும் சொல் தாழ்ச்சி என்னும் பொருளில் திருக்குறளில் எட்டு இடங்களிலும், சங்க இலக்கியத்தில் ஒன்பது இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இழி என்னும் சொல் அதே பொருளில் திருக்குறளில் மூன்று இடங்களிலும் சங்க இலக்கியத்தில் 112 இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக நாம் இழி என்னும் சொல்லைப் பயன்படுத்தும் அளவிற்கு இளி என்னும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை. அது பிழையாக இருக்குமோ? என்று அச்சப்படுகிறோம்.
இளி என்றால் பல்லைப் பெரிதாகக் காட்டி வாயை அகலமாக்கிச் செயற்கையாய்ச் சிரி.. என்று பொருள் கொள்கிறோம். “அப்படி என்ன இளிப்பு?” “ஏண்டா இளிக்கிறாய்?” என்றெல்லாம் பேசுவதை நாம் வழக்கில் கொண்டிருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும்.
“யாரிடமும் பல்லை இளிக்காதே”.. என்று சொன்னால் உன் காரியம் நடக்க வேண்டும் என்று சிரிப்பு வராத இடத்திலும் வாயை அகலமாக்கிச் சிரிப்பது போல் நடிக்காதே.. நீ செய்வது பொய்யானது. உன்னை நீயே தரம் தாழ்த்திக் கொள்கிறாய். எப்போதும் யாரிடமும் எதற்காகவும் தாழ்ந்து போகாதே.என்பது பொருள். “பல் இளிக்காதே” என்றால் தாழ்த்திக் கொள்ளாதே, என்பதுதானே பொருள். அப்படியானால் இந்த இடத்திலும் இளி என்னும் சொல்லுக்குத் தாழ்ந்து போதல், அல்லது தன்னிலை தாழ்ந்து விடுதல் என்னும் பொருள் கச்சிதமாக வருகிறதல்லவா.” நீ போய் அவனிடம் பல்லை இளித்தாயா?” என்று கேட்கும்போது, “இல்லை” என்று சொல்லி தலைகுனிவான். தான் தாழ்ந்து போனதை ஒத்துக் கொள்வதில் ஏற்படும் வெட்கம். அப்படியானால் இகழ்ச்சிக்குரிய செயலைச் செய்துவிட்டான் என்பது பொருள்.
“நீ சொல்வதை நம்புவதற்கு நான் என்ன இளித்தவாயனா?”(இளிச்ச) என்று கேட்கும் இடத்தில் இளித்தவாயன் என்னும் சொல் ஏமாளி எனும் பொருள் தருகிறது. அறிவில் குறைந்தவன் சிந்திக்காமல் ஏமாந்து போவான் என்பதால் தாழ்ந்தவன் என்று நினைப்பாயோ? என்னும் பொருள்பட இக்கேள்வி அமைந்ததால் இங்கும் இளித்த எனும் சொல்லுக்குத் தாழ்ச்சி என்று பொருள் கொள்ளலாம் அல்லவா?
ஆசையோடு வாங்கிய வண்ணப் புடவை அழகாக இருந்தது. நாட்கள் சென்றவுடன் வண்ணம் யாவும் மறைந்து போய்விட்டது. ஆசையோடு வாங்கியவள் சொல்வாள் இரண்டு முறை துவைத்த உடன் சேலை பல்லிளித்து விட்டது. நிறத்தில் தாழ்நிலை அடைந்து விட்டது
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி உவகை இந்த எட்டும் மெய்ப்பாடுகள். (எட்டுச்சுவைகள்)தொல்காப்பிய கூற்று. இவற்றுள் மூன்றாமிடத்தில் இளிவரல் என்று ஒரு சுவை இருக்கிறது. இதற்கு நாம் அருவருப்பு என்று பொருள் கொள்கிறோம். அது மிகச் சரியானதுதான். அருவருப்பு ஏன் ஏற்படுகிறது? உயர்ந்தவன் தாழ்வுறும் போது, அல்லது உயர்ந்த பொருள் தாழ்ந்த இடத்திற்குச் சென்றபோது, மேலே இருந்து கீழே விழுந்தவுடன் பார்க்கும்போது நமக்கு அதன் மீது அருவருப்பு ஏற்படும். மேலான ஒருவன் மிகத் தாழ்வான ஒரு செயலைச் செய்யும்போது அவன் மீது நமக்கு ஒருவகை அருவருப்பு உண்டாகும்.நமக்கு அருவருப்பு உண்டாகி முகத்தைச் சுழிப்போம். நாம் உயர்வாக நினைத்த ஒரு பொருள் தாழ்வானது என்று அறியும்போது அதே உணர்வு நமக்குள் ஏற்படும்.
ஸரிகமபதநி… என்று வடமொழியில் சொல்லப்பட்ட ஏழு ஸ்வரங்களும் தமிழிசையில்.. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, தாரம் என்று தமிழில் மாற்றி ஏழிசை என்று வழங்கப்படுகின்றன. இதில் ஐந்தாவது இளி. இளி என்பதற்கு இணைந்து செயல்படுதல் என்பது பொருள். பாடுவோர் குரலுக்கு ஏற்றபடி இசைக்கருவியின் மீட்டும் பாங்கினை மாற்றிக்கொள்வது இளி எனப்பட்டது. அப்படியானால் குரலுக்கு தகுந்தவாறு தாழ்த்திக் கொள்ளுதல் என்று பொருள் கொள்ளலாம் அல்லவா?
மேற்கண்ட ஆய்விலிருந்து நாம் பெறத்தக்க முடிவு என்னவெனில்..இளி,இழி.. என்னும் சொற்கள் தனித்தனியாக வேறு வேறு இடங்களில் சற்று மாறுபட்ட பொருள்களில் வந்தாலும், இரண்டு சொற்களும் பொதுவில் நின்று குறிக்கும் பொருள் என்னவெனில், தாழ்வு, இகழ்ச்சி, குறைவு(நிலை சாய்ந்து போதல், தரம் தாழ்ந்து போதல், வீழ்ச்சி) என்பனவே. இச்சொற்களில் எதைப் பயன்படுத்தினாலும் குற்றமில்லை.
-தமிழ் முத்துமணி.
அருமையான விளக்கம் ஐயா.
ர ,ற பயன்பாடு பற்றிய விளக்கத்தோடு
ல,ள பயன்பாடு பற்றிய கருத்துகள்
அருமை ஐயா.
முடி என்பது என்ற விளக்கம், மயிர் என்பது தூய தமிழ் சொல் என்ற
விளக்கமும்
அதற்கு சங்க இலக்கியங்களை
துணைக்கழைத்ததும் மிகவும் சிறப்பு.
நன்றி ஐயா.
அருமையான விளக்கம் ஐயா.
ர ,ற பயன்பாடு பற்றிய விளக்கத்தோடு
ல,ள பயன்பாடு பற்றிய கருத்துகள்
அருமை ஐயா.
முடி என்பது என்ன என்ற விளக்கம், மயிர் என்பது தூய தமிழ் சொல் என்ற
விளக்கமும்
அதற்கு சங்க இலக்கியங்களை
துணைக்கழைத்ததும் மிகவும் சிறப்பு.
நன்றி ஐயா.
அருமையான விளக்கம் ஐயா.
ர ,ற பயன்பாடு பற்றிய விளக்கத்தோடு
ல,ள பயன்பாடு பற்றிய கருத்துகள்
அருமை ஐயா.
முடி என்பது என்ன என்ற விளக்கம், மயிர் என்பது தூய தமிழ் சொல் என்ற
விளக்கமும்
அதற்கு சங்க இலக்கியங்களை
துணைக்கழைத்ததும் மிகவும் சிறப்பு.