தா.பாண்டியனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
1 min readD. Pandian’s health continues to be a concern
25/2/2021
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர், தா.பாண்டியன். 88 வயதாகும் இவர், கட்சிப்பணிகளில் தீவிரமாக இயங்கிவருகிறார். ஏற்கெனவே, சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர், அதற்கான மருந்துகளை உட்கொண்டுவருகிறார். இந்தநிலையில், உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்துவருகின்றனர். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நேற்று (24.02.2021) உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோய்த் தொற்று மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிற்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிக்சை அளித்து வரும் நிலையிலும் தா.பாண்டியன் உடல்நிலையில் மாற்றம் காணாத நிலை நீடிக்கிறது.
செய்தி அறிந்த கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் டி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் தமீம்முன் அன்சாரி, கருணாஸ், தனியரசு மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு நேரில் வந்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் தா.பாண்டியன் குடும்பத்தாரிடம் விசாரித்து சென்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.