தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு
1 min readRetirement age of Tamil Nadu government employees has been raised to 60
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு
25.2.2021
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
ஓய்வு வயது
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் பணி ஓய்வு காலம் 58 வயதாக இருந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் கேட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதையும் 60 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அறிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது, 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது.
அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்து கொள்கிறேன்.
வாரியங்கள்
இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும்.
இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31.5.2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.