April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா?/சொல்லாக்கம்/ முத்துமணி

1 min read

குற்றாலம் மெயினருவி

Sollakkam by Muthumani

10/3/2021

உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகரா நீர்வீழ்ச்சி ஆகும். நயாகரா நீர்வீழ்ச்சியின் உயரம் 167அடி. கொடைக்கானலுக்கு, எழில் சேர்ப்பதில் வெள்ளி நீர்வீழ்ச்சிக்குப் பெரும் பங்கு உண்டு. ஜோக் நீர்வீழ்ச்சி மிகவும் புகழ் பெற்றது. திற்பரப்பு நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சிறப்பு சேர்க்கிறது.
கோலமிகு குற்றாலத்தில் ஒன்பது நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. அந்தக் காட்டுக்குள் சென்றபோது நூற்றுக் கணக்கான நீர்வீழ்ச்சிகளைக் கண்டு வியந்து போனோம். என்று நம் கதைகளில் கட்டுரைகளில்படிப்போம். அதைப் படிக்கிறபோது நீர்வீழ்ச்சி என்னும் சொல், காரணப் பெயராக இருந்தபோதும் நம்மை விட்டு விலகி நிற்கும் , ஒருவிதமான செயற்கையான சொல் போலத் தோன்றும்.
அருவி என்று சொல்லும்போது ஏற்படும் ஒரு இதமான உணர்வு நீர்வீழ்ச்சி என்று சொல்லக் கேட்கும்போது ஏனோ ஏற்படுவதில்லை. காரணம் அருவி என்பது நம் பாட்டன் காலத்து தமிழ்ச் சொல். அருவி என்னும் தூய தமிழ்ச்சொல் இருக்கும்போது நீர்வீழ்ச்சி என்ற புதிய சொல்லை ஏன் உருவாக்கினர்? அதையே பயன்படுத்தி வருகின்றனர்? என்று ஒரு சின்ன கோபம் கூட அவ்வப்போது வருவதுண்டு. ஏனெனில் இதுபோன்ற சொல்லாக்கம் தமிழை வளர்க்குமா? என்று உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை நீர்வீழ்ச்சி என்னும் சொல்லையே தொடர்ந்து பயன்படுத்திவந்தோமானால், காலம் செல்லச் செல்ல ‘அருவி’ என்னும் அழகிய சொல் வழக்கொழிந்து போகுமன்றோ? அது நம் முன்னோரிட்டு வழங்கிய பெயர். அருமையான, அற்புதமான ஒரு பெயர்ச்சொல். மூன்றெழுத்துகளான ஒற்றைச் சொல் மலையிலிருந்து கீழே விழுந்து இறங்கி ஆர்ப்பரித்து வரும் நீர்ப் பெருக்கைத்தான் அருவி என்றனர் .

   ஆனால் நீர்வீழ்ச்சி என்ற சொல் எப்படி ஏற்பட்டது? சொல்லாக்கம் செய்வோம் என்னும் பெயரில், ஆங்கிலச் சொற்களை நேரடியாக அப்படியே தமிழாக்கம் (மொழிபெயர்ப்பு) செய்வோர் செய்த வேலைதான் இது. ஆங்கிலத்தில் அருவியை Waterfalls என்று சொல்வர். மலையிலிருந்து நீர் விழுகிறது அல்லவா? ஆகையால் அதே ஆங்கிலச் சொல்லின் அப்பட்டமான மொழிபெயர்ப்பாக நீர்வீழ்ச்சி என்று  சொல்லாக்கம் செய்துவிட்டனர். சூரியனின் ஒளி வானிலிருந்து பூமிக்கு வருகிறது. அதை ஒளி வீழ்ச்சி என்று சொல்கிறோமா? இல்லை. மழைநீர் மேலிருந்து கீழே செய்வதை மழைவீழ்ச்சி என்று சொல்ல மாட்டோம் மழைப்பொழிவு. ஏன்?வீழ்ச்சி என்பது அழிவைக் குறிக்கும். பேரரசின் எழுச்சி, பின்னர் பேரரசின் வீழ்ச்சி sudden decline downfall என்று நாம் சொல்வோம். நீர் மலைமீது இருந்து விழுவதால் நீர் விழுகிறது, என்னும் பொருளில்  ஆங்கிலத்தில் waterfalls பெயர் வைத்தனர், என்பதற்காக நாமும் விடுகிறது வீழ்கிறது, விழுந்துவிட்டது என்று சொன்னால் அது மங்கலமாக இல்லை. நம் பாட்டன் அருவி என்று ஒரே சொல்லில் அழகான பெயரை வைத்திதுள்ளான். அதை விடுத்து நீர் விழுகிறது. எனவே அது நீர்வீழ்ச்சி. என்பது காரணப்பெயர். என்று சொல்வது பொருத்தமாக இல்லை. அச்சொல் அமங்கலமாக இருக்கிறது. உன்னைப் பார்த்ததும் என் மனதில் இன்ப அருவி பொங்கி வழிகிறது என்றுதான் கூறுவோம். இன்ப அருவி வீழ்கிறது என்று சொல்ல மாட்டோம் வீழ்ச்சி என்றாலே அது தோல்வியை, அழிவைக் குறித்து விடும். அருவியிலிருந்து கொட்டுகிற நீர் அழிவதில்லை அதன்பின்னர் ஆறாகப் பாய்ந்து நிலத்தை  வளப்படுத்தி அதன் பின்னர் கடலோடு கலக்கப் போகிறது. புதிய சொற்களை ஆக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.புதிய சொல்லாக்கம் வேண்டாம் என்று கூறுவது ஒரு போதும் இக்கட்டுரையின் நோக்கமன்று. அதை ஏன் ஆங்கில மரபில் அல்லது ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாக அமைக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. 

ஆங்கிலத்தில் ஆசிரியருக்கு மாணவன் விடுப்பு விண்ணப்பம் எழுதும் போது, அல்லது தன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள அழைக்கும்போது my birthday falls on 25th of this month என்று எழுதுவது வழக்கம். அவர்கள் மொழியில் falls என்னும் சொல் இடம் பார்த்து பொருள் தருவதாக அமையலாம். அதற்காக தமிழில் எழுதும்போது வருகிற 25-ஆம் நாள் என் பிறந்தநாள் விழுகிறது அல்லது வீழ்கிறது என்று எழுதுவது மிகுந்த நகைப்பை உண்டாக்கும். அதைப் போலவே காதல் வயப்பட்ட ஒருவனை கூறும்போது He has fallen in love என்று நம்முடைய அழகான தமிழ் இருக்கிறது காதல் அதை விடுத்து காதலில் விழுந்தான் என்று சொல்வது வேடிக்கை அன்றோ? அதைப் புரிந்துகொள்ளாமல் ஒரு திரைப்படத்தின் தலைப்பு,காதலில் விழுந்தேன் . இதேநிலையிலதான் நீர்வீழ்ச்சி என்னும் சொல்லாக்கம்..

ஆழிப்பேரலை இன்று ஒரு சொல் இப்போது நடைமுறையில் இருக்கிறது. சுனாமி எனும் சொல்லைக் குறிப்பதாக இருக்கிறது. மனிதன் தோன்றிய இலமுரியா கண்டத்தைக் கடல் கொண்டு விட்டது என்று, வரலாறு பேசும் போது மட்டும் கடல் கொண்டு விட்டது கடல்கோள் வந்து அழித்து விட்டது. என்று பேசும் நாம் ,கடல்கொண்ட கபாடபுரம் கடல்கொண்ட பூம்புகார் என்று படித்த பிறகும் ஆழிப்பேரலை என்ற புதிய சொல் பழகி வருகிறோம். கடலில்தான் அலை வீசும். ஆற்றிலோ, குளத்திலோ சிறிய அளவில் ஏற்படும் அலைகளை அலை என்று சொல்வதேயில்லை. பேரலை என்றாலும் கடலில்தான் தோன்றும். ஆழிப்பேரலை என்று கடல் பேரலை என்று ஒரு தனிப் பெயர் ஏன் வைக்கவேண்டும்? அழிவைத் தரக்கூடிய பேரலைகளுக்குத்தான் கடற்கோள் என்று நம் முன்னோர் பெயர் சூட்டினர்.
நடைப்பயிற்சி என்று ஒரு சொல் நடைமுறையில் இருக்கிறது. அதாவது walking நடந்து செல்வதைக குறித்தது அச்சொல்.காலோட்டம்என்னும் அருமையான சொல் ஒன்று தமிழில் இருக்கிறது. உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு அதன் பின்னர் மருத்துவர் சொன்ன பிறகு பயிற்சிக்காக நடை பயின்றதில்லை அந்நாளில். எப்போதும் எங்கும் நடந்துதான் சென்றனர். அதனால் காலோட்டம் என்று அழைத்தனர்.

எல்லிவீழ நானாழி போகின்றாய் காலேற்றுக் காலோட்ட..(ஆறுமுக நாவலர்)

சரி இப்போது மீண்டும் அருவிக்கு வருவோம். அருவியிலும் அழகிய சொல் சங்க இலக்கியங்கள் முழுவதும் பரவி விரவிக் கிடக்கின்றன.

அண்ணல் யானை அருவி பதுகழ் கவிப்ப
சிறுபாணாற்றுப்படை

வரை தாழ் அருவி பொருப்பின்
மதுரைக்காஞ்சி

அருவி நுகரும் வான்அர மகளிர்
மலைபடுகடாம்

பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப
நற்றிணை

ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
குறுந்தொகை

அருவி ஆம்பல் நெய்தலோடு
பதிற்றுப்பத்து

வரை இழி அருவி வேங்கடத்து உம்பர்
அகநானூறு

சாரல் அருவி பயமலை கிழவன்
புறநானூறு

மாலை மாசு கழிய கதழும் அருவி
பரிபாடல்
சிற்றிலக்கியங்களில்….
பொங்கருவி தூங்கும் மலை பொதிய மலை என் மலையே” என்று செம்மாந்து பாடினாள் பொதியமலைக் குறத்தி.

“தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்” என்றுபெருமை கொண்டாடினாள் திருக்குற்றாலத்துக் குறவஞ்சி
குற்றால அருவியிலே குளித்ததுபோல் இருக்குதா?. ..
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே.
என்னும் பாடலிலும் ஐந்தருவி, புலிஅருவி எல்லாம் இடம்பெறும்.
பெரு நீர்வீழ்ச்சி, புலி நீர்வீழ்ச்சி, தேன் நீர்வீழ்ச்சி, செண்பகாதேவி நீர்வீழ்ச்சி, சிறு நீர்வீழ்ச்சி, ஐந்து நீர்வீழ்ச்சி, பால் நீர்வீழ்ச்சி, பழத்தோட்ட நீர்வீழ்ச்சி என்று சொல்லித்தான் பார்ப்போமே. வேடிக்கையாகத்தான் இருக்கும். நம் சொல்லோடு ஒட்டவில்லை அல்லவா? தேனருவி என்று சொல்லிப்பாருங்கள் இனிக்கும்.ஐந்து+அருவி.. ஐந்தருவி. ஐந்தும் அருவியும் புணர்ந்து அழகான சொல்லாக உருவான வடிவம் இது.

சொல்லருவி…. என்று பட்டம் பெறுகின்றனர், நல்ல தமிழ்ப் பேச்சாளர். அருவியை எடுத்துவிட்டு, “சொல் நீர்வீழ்ச்சி சுப்பையாவை வரவேற்கிறோம்” என்று அழைத்தால் எப்படி இருக்கும்? தமிழருவி. மணியன் மிகச் சிறந்த தமிழறிஞர். அருவி என்பதற்கு மாற்றாகத் தமிழ் நீர்வீழ்ச்சி மணியன் என்று சொல்வது பொருந்துமா?
அருவி என்றால் விரைந்து பாய்வது. உருவி என்றால் விரைந்து உறையிலிருந்து கத்தியை எடுப்பது. மாடு எருவிக் கொண்டு அலைகிறது.. இவையெல்லாம் சிந்தனைக்கு….

நிலையாமை அதிகாரத்தில்… அய்யன் திருவள்ளுவன் அழகான உவமை ஒன்றைக் கையாளுகிறான். ஒருவனுக்கு செல்வம் சேரும்போது சிறிது சிறிதாக படிப்படியாகச் சேர்ந்து பெரிதாகுமாம். அத்தனை செல்வமும் ஒரே நேரத்தில் திடீரென எவனையும் வந்து சேர்வதில்லை. ஆனால் அதே செல்வம் அவனை விட்டுச் செல்லும்போது படக்கென்று அவசரமாகச் சென்று விடுமாம். இதைச் சொல்ல வந்த போது , ஒரு இடத்தில் கலை நிகழ்ச்சியை அல்லது ஒரு கூத்தை அல்லது சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு சிறிது சிறிதாக மக்கள் சேர்ந்து, பிறகு பெரிய கூட்டமாக மாறுவது போல் செல்வம் வருகிறது. நிகழ்ச்சி முடிந்து வெளியேறும்போது மட்டும், ஒரு கணத்தில் மொத்தமாகக் கூட்டம் வெளியேறிக் காணாமல் போய்விடுகிறது.. என்று சொல்கிறார்.
கூத்தாட் டவைகுழாத் தன்றே பெருஞ்செல்வம்
போக்கும் அருவிளளிந் தற்று

இந்தக் குறட்பாவில் மட்டுமே அருவி எனும் சொல் இடம் பெற்றுள்ளது ஒரு சிறப்பு. அருவிநீர் வெளியேறுவது போல நிகழ்ச்சி முடிந்தவுடன் கூட்டம் வெளியேறும் என்ற உவமையைப் பயன்படுத்துகிறார். கூத்திற்கு கூட்டம் சேர்வது படிப்படியாகச் சேரும். என்ற உவமையைச் செல்வம் சிறிதுசிறிதாக வரும், என்பதற்குப் பயன்படுத்திய வள்ளுவன், செல்வம் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று கட கடவெனப் போய் விடும் என்பதற்கு உவமையாக ‘அருவிநீர் இளிந்தற்று’என்னும் உவமையை இக்குறளில் கையாளுகிறார்.இளிதல் என்பதுதான் அருவியிலிருந்து நீர் வேகமாக இறங்கி வருவதைக் குறிக்கும் சொல்.
—–…
தமிழ் முத்துமணி,
சிவகாசி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.