May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

“திருநெல்வேலி எழுச்சி நாள்-மார்ச் 13”

1 min read

“Tirunelveli Uprising Day-March 13”

13/3/2021

இளையதலைமுறை அறிய வேண்டிய வரலாறு

ஒரு மனிதனுக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை. அவன் யாரையும் கொலை செய்யவில்லை. ஒரு பொதுக்கூட்டம் நடத்தினான். யாரையும் தரக்குறைவாக பேசவில்லை. ‘அந்நிய நாட்டுப்பொருட்களை புறக்கணியுங்கள்; உள்நாட்டுப்பொருட்களை பயன்படுத்துங்கள்’ என்று சொன்னான். அவ்வளவு தான். அப்படி 40 ஆண்டு தண்டனை பெற்ற மகத்தான விடுதலை வீரர் தான், வ.உ.சிதம்பரனார்.
கப்பலோட்டிய தமிழன், அவன்
அவர் மீது அன்றைய நெல்லை மாவட்ட சப்&கலெக்டர் ஆஷ் கடும் கோபம் கொண்டிருந்தார். ஏன் இத்தனை கோபம் ?
“பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமித்ததில்லை” என்று அன்று அகங்காரம் கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, நூறாண்டுக்கும் மேலாக அடிமைப்பட்டிருக்கும் ஒரு தேசத்தின் சாதாரண பிரஜை ஒருவன், பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கு போட்டியாக சுதேசி கப்பல் கம்பெனி ஒன்றை நடத்தினான். தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் விட்டான். அந்த கப்பல்களை வாங்குவதற்கு பணம் திரட்ட பாரதம் முழுவதும் சென்று பங்குகளை விற்பனை செய்தான். இதை எல்லாம் நாங்கள் எப்படி வேடிக்கை பார்க்கமுடியும் என்று, 1908 மார்ச் 9 ல் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தை சாக்காக வைத்து வ.உ.சிதம்பரனாரை கைது செய்தார்கள். அவரோடு சேர்ந்து எழுச்சி மிக்க உரை நிகழ்த்திய சுப்பிரமணிய சிவாவையும் கைது செய்தனர். பத்மநாப அய்யங்கார் என்றொரு சுதந்திரப் போராட்ட வீரர். அவரையும் விடவில்லை.

தைப்பூச மண்டபத்தில் எழுச்சியுரை
நெல்லை தாமிரபரணி ஆற்றில் தைப்பூச மண்டபத்தின் அருகில் 13,000 பேரை திரட்டி நடத்தப்பட்ட கூட்டம் அது. பிபின் சந்திரபால் என்ற சுதந்திரப்போராட்ட வீரர் விடுதலையானதை கொண்டாடியது, அந்த கூட்டம்.
இந்திய சுதந்திரபோராட்ட வீரர்களில் லால், -பால், -பால் என்ற மும்மூர்த்திகளில் ஒருவர் தான் பிபின்சந்திரபால். மற்றவர்கள் லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர்.
பிபின் சந்திரபால், வந்தே மாதரம் என்ற இதழை தோற்றுவித்தவர்களுள் ஒருவர். அந்த இதழில், ஆட்சியாளரை எதிர்த்து எழுதிய வழக்கில் அரவிந்தருக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்தார். அதற்காக பிரிட்டிஷ் அரசு அவரை ஆறு மாதம் சிறையில் அடைத்து, 1908 மார்ச் 8&ல் விடுவித்தது. இதைத்தான் மார்ச் 9&ல் கொண்டாடினார், வ.உ.சி.
பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அப்போது அனுமதி கிடையாது. தடையை மீறுவதுதானே போராட்டக்காரனின் உணர்வு.
தைப்பூச மண்டபத்தின் மேலே ஏறி நின்று வ.உ.சி. எழுச்சியுரை ஆற்றினார். கூடியிருந்த 13, 000 பேரும் உணர்ச்சிகரமாக ” வந்தே மாதரம் ” என முழங்கினர். ‘அந்நியப்பொருட்களை புறக்கணிப்போம்’ என்று முழக்கமிட்டனர்.
இதைக்கண்டு கொதித்த அந்நிய அரசு, மார்ச் 12&ல், வ.உ.சி, சிவா, சீனிவாச ஐயங்கார் மூவரையும் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைத்தது.
கிளர்ந்தெழுந்த நெல்லை மக்கள்
எங்கள் தலைவர்களை சிறையில் அடைத்தீர்களா என்று நெல்லை மக்கள் கிளர்ந்தெழுந்தனர். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையடைப்பு நடைபெற்றது. நெல்லை நகராட்சி அலுவலகம் இடிக்கப்பட்டது. காவல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். நான்கு பேர் பலியானார்கள். தூத்துக்குடியிலும் கலவரம் பரவியது. கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். குதிரை வண்டிக்காரர்கள் வண்டிகளை எடுக்கவில்லை. சாலையில் வெள்ளைக்காரர்களை கண்டால், போராட்டக்காரர்கள் அவர்களை ” வந்தே மாதரம் என்று சொல்லு ” என்று மிரட்டி சொல்ல வைத்தனர். பிரிட்டிஷ் இந்தியாவில் வெள்ளைக்காரர்களை இப்படி மிரட்டிய சம்பவம் வேறு எங்குமே நடந்ததில்லை.
போராட்டக்காரர்களுக்குப்பயந்து வெள்ளைக்காரர்கள் கப்பலிலேயே ஒளிந்து கொண்டார்கள்.
லண்டன் பாராளுமன்றமே விவாதித்த ‘திருநெல்வேலிக்கலகம்’

பிரிட்டிசார் இந்த சம்பவத்தை, “திருநெல்வேலிக் கலகம்” என்றே குறிப்பிட்டார்கள். லண்டன் பாராளுமன்றத்தில் கூட இதுபற்றி விவாதம் நடந்தது.
“ஒட்டுமொத்த இந்தியாவும் அமைதியாய் இருக்கையில், தென்னிந்தியாவில் மட்டும் ஏன் கலகம் நடக்கிறது ? அங்கே மூன்று பேர் பொதுமக்களை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்களை ஏன் இன்னும் சும்மா விட்டு வைத்திருக்கிறீர்கள்?”—-இது லண்டனில் இருந்து எழுப்பப்பட்ட கேள்வி.

“இல்லை.இல்லை.அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து விட்டோம். கைது செய்ததால் கலவரம் வலுத்து விட்டது…”
–இது இங்கிருந்த ஆட்சியர்களின் பதில்.

“அப்படியானால், அவர்களுக்கு கடும் தண்டனை கொடுங்கள்..”
“ஆமாம்..நாற்பதாண்டு சிறைத்தண்டனை கொடுத்து விட்டோம்.”

இப்படித்தான் வஉசி கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்.
இந்த மூவர் கைதோடு நிற்கவில்லை, பிரிட்டிஷ் அரசாங்கம். மாணவர்களைத் தூண்டி விட்டார் என்று குற்றம்சாட்டி திருநெல்வேலி இந்துக்கல்லூரி பேராசிரியர் கே.ஜி.லோகநாத அய்யரை கைது செய்து, சித்திரவதை செய்தனர்.
வ.உ.சி. மற்றும் சுப்ரமணிய சிவாவை கைது கைது செய்தது தவறு என்று பேசியதற்காக காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா என்பவர் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
வ உ சி கைது பற்றி ஒரு கட்டுரை எழுதியதற்காக பாரதியின் நண்பர் ஹரி சர்வோத்தம ராவ் 3 ஆண்டுகள் தண்டனை பெற்றார்.
வஉசி என்ன குற்றம் செய்தார் என்று கேள்வி கேட்டதற்காக சுரேந்திரநாத் ஆர்யாவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை..
இந்தியா இதழின் ஆசிரியர் சீனிவாசனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை…
இம் என்றால் சிறைவாசம்…ஏனென்றால் வநவாசம்…எப்படியெல்லாம் கொடுமைகள் நடந்துள்ளன பாருங்கள் ..

அன்றே புறக்கணிக்கப்பட்ட தென்னாடு
இந்திய தேசத்தில் தொழிலாளர்கள், தங்களின் பொருளாதார கோரிக்கை அல்லாமல் போராட்டத்தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கோரிக்கைக்காக வேலை நிறுத்தம் செய்தது இதுவே (நெல்லைக்கலகம்) முதல் முறை என்று சொல்லலாம். ஆனால், அதே வருடம் ஜூன் மாதம் திலகர் கைது செய்யப்பட்டபோது, பம்பாயில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திய செய்தியே வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதிலும், தென்னிந்தியா புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டியுள்ளது.
காலம் எல்லாவற்றையும் சரி செய்துகொள்ள வேண்டிய நேரம் இது என்றே சொல்லலாம்.
இந்த மார்ச் 13-ல் அந்த மகத்தான தலைவர்களை நினைவு கொள்வோம். பொழுதுபோக்கிற்காக சினிமா பார்ப்பது சரிதான். கப்பலோட்டிய தமிழன் படத்தையும் பாருங்கள். அதில் சிதம்பரனார் பட்ட கஷ்டங்களை நடிகர்திலகம் அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி நம்மையும் கண்ணீர் சிந்த வைப்பார். அதையும்பார்த்து வரலாற்றை அறிந்து நமக்காக ரத்தம் சிந்தி கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து உயிர்நீத்த தலைவர்களைப்போற்றுவோம்.

—-_
மணிராஜ்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.