May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

காலத்தால் மறைக்கப்பட்ட கவிஞர் மாயவநாதன்/ க.முத்துமணி

1 min read

Pride of the poet Mayavanathan By Muthumani

25/10/2020
(தென்காசி மாவட்டம் கடையம் அருகே பூலாங்குளத்தைச் சேர்ந்தவர் கவிஞர் மாயவநாதன். இவரைப்பற்றி முதுகலை பட்டதாரி ஆசிரியர் க.முத்துமணி எழுதுகிறார்….)

கவிஞர்.மாயவநாதன்

பெயரைக் கேட்டதும் இந்தப் பெயரில் கவிஞர் ஒருவரா? தெரியாதே, யாரவர்? என்று கூடப் பலருக்கும் கேட்கத் தோன்றும். அவரைப் பற்றித் தெரிந்து கொண்டபின் விழிகள் வியப்பினால் விரியக் கூடும் ஓ! வென வாயைத் திறக்கக் கூடும்.
விளம்பர வெளிச்சம் இல்லாமல் இருட்டுக்குள்ளே மறைந்து அல்லது மறைக்கப்பட்டு, அடையாளம் இல்லாமல் அடங்கிப் போன ஏராளமான திறனாளர், நடிகர், அறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கலைஞர், மேதையர் தமிழ்நாட்டில் வாழ்ந்ததுண்டு. அப்பட்டியலில் மாயவநாதன் என்ற இந்த ஏழை அப்பாவிக் கவிஞனும் ஒருவன் என்பதுதான் வேதனையான உண்மை.
பணம் ஒன்றே குறிக்கோள் என்று நினைக்காத காரணத்தால், கொண்ட கொள்கையில் மாறாத பிடிவாதத்தால் அதிகாரத்திற்கும் பணத்திற்கும் அடங்கி நடக்க, நடிக்க, கூழைக் கும்பிடு போட, முகஸ்துதி பாட மறுத்தவர்,எவருக்கும் பணியாத வணங்காமுடிக் கவிஞர் இவர். உடன் பிறந்தது சுயகௌரவம். எப்படியாவது பொருளீட்ட வேண்டும் என்றால்தானே மனசாட்சி மறுத்த போதிலும், பொருளல்லவரைப் பொருளாக்கிப் பாட வேண்டிய அவசியம் ஏற்படும். இவர்தான் பணத்தை ஒரு பொருட்டாக நினைக்கவில்லையே.
அவ்வையிடம், பொருள் நிறைந்த செல்வன் ஒருவன், பொன் கொடுத்துத் தன்னைப் புகழ்ந்து ஒரே ஒரு பாடல் பாடச் சொல்லிக் கேட்டபோது, “உன்னிடம் பொருள் ஏராளம் இருக்கிறது. ஆனால புகழ்ந்து பாடும் அளவிற்கு நீ ஒரு பொருள் இல்லை. நீ அள்ளிக்கொடுத்த வள்ளலா? அமரில் மாவீரனா? இல்லாதோர் காவலனா? இசைபாடும் நாவலானா?. தமிழ்பால் மாறாக் காதலனா?. நீ ஒரு பாடு பொருளாக இருக்க முடியாது.எதை வைத்து உன்னைப் பாடுவது?”. என்று கேட்டாளாம்.புலவர்கள், ஒன்றும் இல்லாதவர்களை ஒரு பொருட்டாக ஒரு போதும் கருதுவதில்லை.
சிறுவயதிலேயே ஏராளமான திறமைகளைச் சுமந்துகொண்டு சென்னை நோக்கிப் பயணம் செய்த மாயவநாதனுக்கு அடைக்கலம் கொடுத்தது சந்திரகாந்தா நாடகக் கம்பெனி.

மாயவநாதன் மிகச்சிறந்த காளி பக்தர். மகாகவி காளிதாசன் போல, அன்னை காளிக்கு மட்டுமே தன்னை அடிமைப்படுத்திக் கொண்டவர். கரம்பைச் சித்தர், கரூர் சித்தர் போன்ற உயர்ந்தோர் நட்பு இவருக்கு உண்டு. அதனால் பொருளாசை இல்லாமல் இறைவனுக்கு மட்டுமே தன்னை அடிமை செய்து, மனிதருக்கு அடிமை செய்யாமல் வாழ்ந்து விட்டாரோ என்னவோ?
மருதமலைக் கோவிலைச் சீரமைத்துக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திரைப்படத் தயாரிப்பாளர் திரு.சாண்டோ சின்னப்பா தேவர், மருதமலைக் கோவில் மலையில் முருகன் புகழைப் பாடல் வடிவத்தில் கல்வெட்டுகளாக எழுதி வடித்து வைக்க ஆசைப்பட்டார். அந்தப் பாடல்களை எல்லாம் எழுதியவர் கவிஞர் மாயவநாதன்தான். என்றென்றும் மாயவநாதனின் புகழை நிலைத்து நிற்கச் செய்யும் அக்கல்வெட்டுகளை முருகன் துதிப் பாடல்களாக நிலைத்து நிற்பதை இன்றும் மருதமலையில் காணலாம்.
1936 ஆம் ஆண்டு இன்றைய தென்காசி மாவட்டத்தில் பூலாங்குளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கவிஞர் மாயவநாதன்.1971 ஆம் ஆண்டு சென்னையில் திடீரென மறைந்தவர். 35 வயது மட்டுமே பூவுலகில் வாழும் பேறு பெற்று தன் பாடல்களால் நம்மை மயக்கி விட்டு,மறைந்து மாயமாகி போனவர் மாயவநாதன் . திரையுலகில் சில காலமே வலம் வந்தாலும் அழியாப் புகழ் பெற்ற பாடல்களை எழுதியவர்.
இவரது பாடல்களை இன்றும் தொலைக்காட்சிகளில் வானொலிகளில் கேட்பார், அவையெல்லாம் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் என்று தவறாக நினைப்பார்கள் யாரும் எடுத்துச் சொல்லும் வரை இந்தக் குழப்பம் இருக்கும். நான் கூட பலமுறை இந்தத் தடுமாற்றத்திற்கு ஆளாகி இருக்கிறேன். அந்த அளவிற்கு கவியரசர் கண்ணதாசனைப் போலவே சிறப்பாகச் சிந்திக்கும் ஆற்றல் கவிதையை மழையாகக் கொட்டும் ஆற்றல் மாயவநாதனுக்கு உண்டு. அவர்களெல்லாம் வர கவிஞர்கள் அமர கவிஞர்கள்… காளமேகங்கள்..
அவருடைய மறைவுக்குப்பின் அவருடைய மனைவி மக்கள் ஓலைக்குடிசை ஒன்றில் வாழும் அளவிற்குத்தான் வசதி இருந்தது. இன்னும் அவருடைய பிள்ளைகள் பேரக் குழந்தைகள் மிகச் சாதாரணமான வேலை செய்து, விவசாயக் கூலிகளாகக் குடும்பம் நடத்துகிறார்கள். சொந்த ஊரில் அவருடைய உடல் எரியூட்டம் நடந்த இடம் கூட கேட்பாரற்றுக் கிடக்கிறது. அதைப் பார்க்க நேரும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு பெரிய பாரம் ஏறிவிடும். கவி கரியான இடம்….
படித்தால் மட்டும் போதுமா, என்ற திரைப்படத்தில் இடம்பெறும், தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்று சென்றாள். இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்… என்ற பாடல் எவ்வளவு இதமான இனிமையான பாடல். விண்ணளந்த மனம் இருக்க. மண்ணளந்த நடை எடுக்க பொன் அளந்த உடல் நடுங்க வந்தாள்…. ஒரு பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்… இந்தப் பாடலில் என்ன இல்லை? அழகியல் இல்லையா? உணர்ச்சி இல்லையா? வடிவம் இல்லையா? கருத்து இல்லையா? எல்லாமே அதிகப்படியாய்த் தான் உள்ளன…….அந்த ஒரு பாடல் அப்படத்தில் வரும் மற்ற அனைத்து (பிற கவிஞர்கள் எழுதிய)நல்ல பாடல்களையும் மறக்கச் செய்துவிடும் அளவிற்கு சிறப்பாக இருக்கும்.

பந்த பாசம் என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய, நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ? கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?. என்ற பாடலில்,
இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது குடும்ப நிலைமை எதிரில் வந்து கடமை என்றது காதல் என்னும் உதிர்ந்து கடமை வென்றது என்றும் மேடு பள்ளம் உள்ளது தான் வாழ்க்கை என்பது.. என்று கூறுவார். . இளமை உணர்வு ஒருபுறம் காதல் காதல் என்று கூறுகிறது. ஆனால் குடும்ப நிலைமை மனதில் எழுந்து வந்து நம் காதலால் குடும்பம் அழிய நேரிடும் என்ற உண்மையை உணர்த்தும் போது காதலைத் தியாகம் செய்கிறான் அவன். இவ்வாறு குடும்பக் கடமை வென்றது; காதல் தோற்றது. அதைக் காதல் எனும் பூ உலர்ந்து கடமை வென்றது. என்று கூறும் இடம்…ஆகா அருமை அருமை என்ன உணர்ச்சி என்ன ஆழமான கருத்து.. காதலை ஒரு பூவாக உருவகம் செய்தது. அருமையான வாழ்க்கைத் தத்துவம் நிறைந்த பாடல் என்று சிலாகிக்கத் தோன்றுகிறது.

பூமாலை எனும் திரைப்படத்தில் கயவன் ஒருவனால் தன் கற்பிழந்த பெண் பாடுவதாக அமைந்த பாடல்..
கற்பூர காட்டினிலே கனல் விழுந்துவிட்டதம்மா…உவமை.. பாருங்கள்.. அவள் நிலை.. கற்பூரத்தால் அமைந்த ஒரு காட்டில் ஒரு சிறு கனல் விழுந்தால் என்னவாகும்? கண்மூடித் திறக்குமுன் யாரும் அணைக்க முடியாமல் முற்றிலும் எரிந்து காற்றில் கரைந்து காணாமல் தானே போகும்.

பந்தபாசம் படத்தில் கவலைகள்  கிடக்கட்டும் மறந்துவிடு . என்ற இவரது 

பாடலைக் கேட்டால் எந்தக் கவலையும் படாமல்.. காரியம் நடக்கட்டும் என்று குறைந்தபட்சம் ஒருநாள் நம்மால் இருக்க முடியும். அந்த அளவிற்கு தன்னம்பிக்கை தரும் ஒரு பாடல்.

பாலும் பழமும் படத்தில் பழுத்துவிட்ட பழம் அல்ல… உதிர்வதற்கு…. என்னும் பாடலைக் கேட்டுப்பாருங்கள். அந்த இளம் மனைவி திடீரென இறந்து போன செய்தியைக் கேட்ட கணவனின் நிலையை நாம் உணரக்கூடும். இதயத்தில் ஒரு கனம் ஏற்பட்டு எல்லோ கண்களும் கலங்குவது நிச்சயம்.

“என்னதான் முடிவு?” என்று ஒரு திரைப்படம். அதில் இடம்பெறும் ஒரு பாடல், இந்தப் பாடலைச் சிறு வயதில் முதன் முதலாகக் கேட்கும்போது, என்னை அறியாமலேயே ஏதோ ஒரு உணர்வு, இன்னும் சொல்லப்போனால் சிறு பய உணர்வு கூட ஏற்பட்டது. இன்றுவரை ஏன் என்று தெரியவில்லை. அப்போதெல்லாம் இப்பாடலை எழுதியவர் யார் என்பதெல்லாம் தெரியாது. பாடல் இதுதான்.

'பாவி என்னை மறுபடியும் பிறக்க வைக்காதே. செய்த பாவம் தீரும் முன்னே இறக்க வைக்காதே'. இந்தப் பாடல் என்ன முயற்சி செய்தாலும் வேறு எவரும் எழுதியிருக்க முடியாது என்றுதான் இன்றும் தோன்றுகிறது. இப்படி எழுதுவதற்கு அசாதாரணமான தைரியமும் வேண்டும். இப்பாடலில் ஓரிடத்தில் வஞ்சகர்க்குச் சாபம் இடுவார்...வஞ்சகரின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ... வாய் நிறைந்த பொய்யருக்குச் சூலம் வரவேண்டாமோ.. காலழுகி, கையழுகிக் காடு செல்ல வேண்டாமோ? காதகனைக் கண்டு மக்கள் காறித் துப்ப வேண்டாமோ? வஞ்சனை செய்யும் மனிதருக்கு வாதநோய் வரவேண்டும்.. பிறரைப் பற்றி பொய்யான வார்த்தை சொல்லி, புறம் பேசித் திரியும் மனிதருக்கு, பொய் சொல்லி ஒருவனுக்கு துன்பம் உண்டாகும் மனிதருக்கு மரணம் வரவேண்டும் என்று கேட்கிறார்... பாடலின் பல்லவியில் நான் ஒரு பாவி என்னை மீண்டும் ஒரு முறை இந்த உலகில் பிறக்க விட்டுவிடாதே... இறைவனிடம் இப்படி விண்ணப்பிக்கிறார்.. நிறைய பாவம் செய்து இருக்கிறேன் அதற்கெல்லாம் தண்டனையை இங்கேயே அனுபவிக்க வேண்டும். கோடி வகை நோய் கொடையா சாகும்வரை அழவிடையா.. நான் இறந்தால் மீண்டும் பிறந்தாலும் இதே பாவத்தை மீண்டும் மீண்டும் செய்வேன் அதனால் எனக்கு இன்னொரு பிறவி வேண்டாம் என்பது பாடலின் கருத்து.

பூம்புகார் திரைப்படத்தில் மாதவியிடம் இருந்து நீண்ட காலம் கழித்து நல்ல புத்தியோடு திரும்பி, கண்ணகியிடம் கோவலன் வருகின்றபோது, பின்னணியில் கே.பி சுந்தராம்பாள் குரலில் கணீரென்று ஒலிக்கும் ஒரு பாடல்…தப்பித்து வந்தானம்மா தன்னந்தனியாக நின்றானம்மா…. காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல் தப்பித்து வந்தானமமா… ஆகா என்ன அருமையான வரிகள். காலம் தவறு செய்யும் எல்லோருக்கும், ஒரு பாடம் கற்பிக்கும் அது மாபெரும் அடியாக இருக்கும்… அந்த அடியைத் தாங்க முடியாது… அப்போது தப்பித்து ஓடத் தான் தோன்றும்.

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே புதையல் படத்தில் இடம்பெற்ற பாடல் கூட இவரது பாடல் என்று கூறப்படுகிறது. இப்பாடல் பற்றி வேறு கருத்துகளும் உள்ளன அது விவாதப் பொருள். நமக்கு வேண்டாம்.

என்ன கொடுப்பாய்? என்ற தொழிலாளி படப் பாடல், ஒரு ஜாலியான காதல் பாடல், இன்னொரு படத்தில் சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ? கற்பனை நிறைந்த மென்மையான ஒரு காதல் பாடல்.இப்படிப் பல அருமையான பாடல் எல்லாம் இவர் எழுதியவை. இவர் இயற்றிய பாடல்கள் எவை என முழுமையாக அறிந்து கொள்ளக் கூட இன்று இயலவில்லை.

மறக்க முடியுமா எனும் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காகச் சென்றார் மாயவநாதன். சற்று தாமதம் ஆகிவிட்டது. வழக்கமாக அமைத்த இசைக்கு தத்தகாரம் போட்டுக் காட்டுவார்கள் இசையமைப்பாளர்கள். ஆனால் அன்று பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்,
டி.கே.ராமமூர்த்தி, வேடிக்கையாக, தத்தகாரம் சொல்லாமல் கவிஞரின் பெயரையே அவர் உருவாக்கிய இசைக்கு வரிகளாக பாடிக் காட்ட… மாயவநாதன் ….மாயவநாதன்…. மாயவநாதன்….. என்று.. உடனே கவிகளுக்கே உரிய கவி கோபம் இவருக்கு வந்துவிட ,”பாட்டு எழுத முடியாது”. என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்… பின்னர் அப்படத்திற்குக் கதை வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி அவர்களே அப்பாடலை, காகித ஓடம் கடலலை மேலே போவதைப்போல மூவரும் போவோம் என்று எழுதினார். இப்படி கோபித்துச் சென்றது கவிஞர்களின் இயல்பு. வித்யா கர்வம் என்றுஅதைச் சொல்வார்கள்.
‘கவியரசர் கண்ணதாசனின் செல்வாக்கை உடைத்த முதல் கவிஞர் மாயவநாதன்’ என்று, கவிஞர் நா.காமராசன் தன்னுடைய நூல் ஒன்றில் மாயவநாதனைக் குறிப்பிடுகிறார் . அந்த அளவிற்கு, படிக்காத இந்த பாமர விவசாயி தனக்குள்ளே, கவித்துவம் நிறைந்தவனாக இருந்தான்.
கவிஞர் கண்ணதாசன் ஒருவரே கவிஞர் என்று அறியப்பட்ட காலம் அது. அவரது பாடல்களுக்கு ஈடும் இணையும் இல்லை. எவரும் அவரைப் போல எழுதி இனிமேல் சாதிக்க முடியாது என்று இருந்த காலம் அது. கவியரசர் பாடலை தவிர வேறு எவருடைய பாடலும் அங்கீகரிக்கப்படாத காலம் மாயவநாதன் வாழ்ந்த காலம். அந்தக் காலகட்டத்தில் அழியாத பாடல்களை தந்தவர்.
கவிஞர் மாயவநாதன் பிறந்த ஊரான பூலாங்குளம் என் சொந்த ஊரின் பக்கத்து ஊர்தான். என் தங்கை கூட அவ்வூரில் தான் வாழ்க்கை நடத்துகிறாள். அவர் என் உறவினர் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை எப்போதும் உண்டு. அதே நேரத்தில் கொண்ட கொள்கையினால் இவ்வுலக வாழ்க்கையைப் பொருள் இன்றி வாழ முடியாது என்பதைப் புரிந்து கொள்ளாமலே, தன் இனிய
குடும்பத்திற்கு வறுமையைச் சொத்தாகக் கொடுத்துவிட்டுப் போய் விட்டாரே, என்ற வருத்தமும் உண்டு. இருந்தாலும் அவரது பாடலே நமக்கு மருந்தாக….

“கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.